வெள்ளி, 23 ஜனவரி, 2015

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி

கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் - தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள்)கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம்1 பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2 பாகம் 3 கொங்கு வேளாளக் கவுண்டர்கள்தான் மேற்கு தமிழகத்தின் முதன்மையான ஆதிக்க சாதி. பிற்படுத்தப்பட்ட பட்டியிலில் வரும் வன்னியர், முக்குலத்தோர் போன்ற ஏனைய ஆதிக்க சாதிகளை விடவும் இவர்கள் சமூக ரீதியில் மேல் தட்டில் இருக்கிறார்கள். தற்போது திருப்பூர் தொழிலதிபர்கள், நாமக்கல் வட்டார பிராயலர் பள்ளிகள், வட்டார கோழிப்பண்ணைகள், லாரி நிறுவனங்கள் அனைத்திலும் இவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கணிசமானோர் விவசாயிகளாகவும் நீடிக்கிறார்கள்.
காருண்யா கல்லூரி வழியில் இருக்கும் நாதே கவுண்டன் புதூரில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு “ஆதித்தமிழர் பேரவை” எனும் அருந்ததியருக்கான இயக்கத்தின் கொடி, பெயர்ப்பலகை நட்ட போது கவுண்டர்கள் பொருளாதாரத் தடை விதித்தனர்.
பொருளாதார வாழ்க்கையில் கவுண்டர்களையே சார்ந்து இருக்கும் அம்மக்கள் தடையை மீறி தாக்குப்பிடிக்க முடியுமா?
இறுதியில் பெயர்ப்பலகையும், கொடி மரமும் காணாமல் போனது. பிறகு இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அருந்ததியருக்கான அமைப்புகள் கோவைப் பகுதியில் செயல்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.

கோவை சூலூர்அருகே உள்ள தேநீர் கடையின் புறவாசல் – தலித்துக்கள் மட்டும் டீ சாப்பிடும் இடம். (நன்றி: டெக்கான் குரோனிக்கிள் 09.04.2014)
தமிழகத்திலேயே இரட்டைக் குவளை தேநீர்க் கடைகள் அதிகமிருப்பது இங்குதான்.தலித் மக்களை பெயர் சொல்லி அழைத்தால் அது கொஞ்சம் கௌரவம். மாதாரி என்று அழைத்தால் மீடியம். சக்கிலி என்று அழைத்தால் கவுண்டர் கோபமாக இருக்கிறார் என்று பொருள். இது போக வயதானவர்களைக் கூட நீ போ, தே, நா என்று அழைப்பதெல்லாம் சகஜம். கொங்கு தமிழின் அழகை கோவை சரளாவிடம் ரசித்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.
தேவர்-பள்ளர், வன்னியர்-பறையர் திருமணங்களெல்லாம் நடக்க முடிந்த தமிழகத்தில் கவுண்டர்-அருந்ததி திருமணம் மட்டும் இன்னும் பாலைவனக் கனவு. கவுண்டர்கள் என்னமோ “சின்னக் கவுண்டர்”களாகவே உலா வருகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகளில் கொங்கு தமிழ், பொள்ளாச்சி கிராமங்கள், துண்டு, பித்தளை சொம்பு, சொம்பிலிருக்கும் வெற்றிலை எச்சில் உள்ளிட்டு விதவிதமாக பில்டப் கொடுத்து கவண்டர்களை தமிழ் சினிமா டபுள் கவுண்டர்களாக்கியதன் விளைவை பெருமாள் முருகன் அனுபவிக்கிறார் என்றும் சொல்லலாம்.
உடுமலை, காங்கேயம், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் கூட இன்றைக்கும் ஒரு பொது திருமண மண்டபத்தை ஏதேனும் ஒரு தலித் அமைப்பு வாடகைக்கு கூட எடுத்து விட முடியாது. இது போக நகரங்களின் கடைகள், சிறு தொழில்களிலும் தலித் மக்களுக்கு இடமில்லை. தென் மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகளில் தேவர், பள்ளர் மாணவர் மோதலோ பிரிவோ இருக்கும். இங்கே அப்படி எதுவும் கிடையாது. காரணம் இங்கே கவுண்டர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் எதுவும் செய்ய முடியாது. அனைத்து கல்வி நிறுவனங்களும் கவுண்டர்களின் கையில்.
இது ஒரு உண்மைக் கதை. இவ்வட்டார அரசு அலுவலகம் ஒன்றில் அருந்ததி சாதியைச் சேர்ந்த ஒருவர் அதிகாரியாக வருகிறார். அலுவலக உதவியாளர் (பியூன்) தொடங்கி மற்ற ஊழியர்களில் கவுண்டர்களே பிரதானம். கவுண்டன் கோட்டையில் சக்கிலி ஆபிசரா என்று ஆரம்பித்தது பிரச்சினை. எண்ணிறந்த முறைகளில் அந்த அதிகாரிக்கு சித்ரவதைகள். வருகைப் பதிவேட்டில் அவர் இட்ட கையெழுத்து மாயமாகும். அவர் ஒப்புதல் தெரிவித்த அலுவலக கோப்புகள் எரிந்து போகும். துறை விசாரணையில் அரசு நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது.
இந்த கவுண்டர் நீதியின்படிதான் பெருமாள் முருகனும் எழுத்துப் பணியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.
இளவரசன் திவ்யா பிரச்சினையை ஒட்டி ஆதிக்க சாதி கூட்டணியை ராமதாஸ் கட்டிய போது கொங்கு வேளாளர் சங்கங்களே முன்னணி வகித்தன. கவுண்டர் சாதி வெறியை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
எல்லா ஆதிக்க சாதிகளிலும் அதன் வர்க்கரீதியான கீழ் நிலையில் இருக்கும் மக்கள்தான் தமது சொந்த சாதிகளின் போலித்தனத்தை கிழித்து தொங்க விடுவார்கள். அப்படி மாதோரு பாகன் நாவலில் நாயகன் காளியின் சித்தப்பா ஒருவர் வருகிறார். குடுமியை வெட்டி கிராப் வைத்தவரை ஆலமரத்தடி பஞ்சாயத்தில் விசாரிக்கிறார்கள். இதனால் மழை பெய்யாது அது இது என்று நீதிமான்கள் துளைக்க, தலை முடியை மட்டுமல்ல, குஞ்சு மயிரையும் சேர்த்தே எடுத்திருக்கிறேன் அதற்கு என்ன நடக்கும் என்று பஞ்சாயத்தாரின் வாயை அடக்குகிறார் அந்த சித்தப்பா.
அவர் மீது வந்த கேலிக்கு இப்படி பதிலளிக்கிறார்:
“சக்கிலிப்பையன் ஆக்குன சோத்தத் தின்னுக்கிட்டு நானும் கவண்டன்னு நடக்கறானே நல்லான்’ என்று யாராவது பேசியது தெரிந்தால் ‘சக்கிலிச்சி மணப்பா. சக்கிலிப் பையன் மட்டும் நாறுவானா?’என்று கேட்டுவிடுவார்.”
ஆதிக்க சாதிகளிடம் சிக்குண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்தக் கொடுமைகள் இன்றும் தொடரும் யதார்த்தம். இதை பல எழுத்தாளர்கள் தமது நாவலிலோ இல்லை கட்டுரைகளிலோ எழுதியிருக்கிறார்கள். எங்களது பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், மேடைப் பேச்சுக்களிலும் இந்த அநீதியை எதிர்த்து எழுதுவதோடு பேசியுமிருக்கிறோம். சூத்திரன் தீட்டு, அவன் தரும் காசு புனிதமா என்று பார்ப்பனியத்தை எதிர்த்து  எழும்பும்  கேள்வியின் உட்கிடையும் இதுதான்.பொருளியல் காரணத்தால் அடிமைப்பட்ட மக்கள், தமது வாழ்வியல் ‘கடன்’களை தீர்ப்பதற்கு இந்த வன்புணர்வு கொடூரங்களை சகித்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களின் மனதிலும், பொருமிக் கொண்டிருக்கும் ஒரு உளவியல் வதை. கீழத்தஞ்சையில் மணமான கூலித் தொழிலாளிகளின் மனைவிமார்களை, ஆண்டை நினைத்தால் பெண்டாள முடியும் என்ற கொடுமை, பொதுவுடமை இயக்கம் வந்த பிறகே ஒழிக்கப்பட்டது.
தூமை (மாதவிலக்கு) நாட்களில் பெண்கள் வேலைக்கு போவதுதான் பாரத தேசத்தின் மாபெரும் சுற்றுச் சூழல் கேடு, அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம் என்று சங்கராச்சாரி சொன்னார். மற்றொரு பக்கம் மடத்தில் நடந்த கொடுமைகளை அனுராதா ரமணன் தைரியமாக எடுத்து வைத்தார்.
ஆதிக்க சாதி ஆண்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெண்களை நுகர்வது சாதி கௌரவம். அங்கே தொடுவது தீட்டல்ல – ஆண்மை. மறுபுறம் ஆதிக்க சாதி பெண்களை ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் தொட்டால் அது இழிவு, பொறுக்க முடியாத அவமானம். ஆகவே அவர்கள் பெண்கள் கற்புடனும் மற்ற பெண்கள் தேவதாசியாகவும் இருக்க வேண்டும். இரண்டையும் மறுக்கவோ மாற்றவோ  முடியாது.
நாவலில் குழந்தையின்றி தவிக்கும் தனது மகன் திருவிழா ஒன்று கூடலுக்கு மனைவியை அனுப்ப சம்மதிக்க வேண்டுமென்று காளியிடமே நேரடியாக பேசுகிறாள் அவனது தாய்.
“ஒலகத்துல ஆருக்குக் கொற இல்ல? எல்லாருத்துக்கும் எதாச்சும் ஒரு கொறைய இந்தச் சாமி வெச்சிருக்குது. அதப் போக்கிக்கிறதுக்கு வழியையும் அதே சாமி வெச்சுத்தான் இருக்குது. உங்கிட்டக் கொறையோ அவகிட்டக் கொறையோ தெரியாது. கொறைன்னு வந்தாச்சு. அதுக்கு ஒருவழி இருக்குது. அதையுந் தான் பாப்பமே. உம் மனசு ஏத்துக்கிட்டா எல்லாஞ் செரியாப் போவும். எத்தனையோ பொம்பளைங்க அப்பிடி இப்பிடி இருக்கறாங்க. ஆருக்குத் தெரியுது? தெரிஞ்சாலும் பாத்தும் பாக்காம போறாங்க. எதையும் மறப்பா செஞ்சாத் தப்பில்லையிங்கறாங்க. இதுவும் அப்பிடி மறப்புத்தான். ஆனா உனக்குத்தெரிஞ்சு, நீ ஒத்துக்கிட்டுத்தான் செய்யோணும். வெச்சுப் பொழைக்கறவன் நீ.”
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் - அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரன் கோவில் நுழைவாயில் – அந்தக் கால மக்கள் சந்திக்கும் பொது இடம்!
இந்த உரையாடலில் தமது குடும்பத்து பெண்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கவுண்டர்கள் பொங்கி எழுந்தாலும் கிராமங்களில் இந்த உறவு மீறல்களுக்காக பொங்கி எழ முடியாது. எழுந்தால் சாதிய கட்டுமானமும் அது தரும் சலுகைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்.
“ நீ ஊர்ல கல்யாணம் பண்ணத பாத்தி நாலு பேரு நாலு விதமாத்தான் சொல்லுவாங்க! என்னப் பொறுத்தவரை நீ செஞ்சதுதான் சரி! புருசன் இல்லேன்னா நம்ம விட்ருவாய்ங்களா ஆம்பளைங்க. உத்தமியா இருந்தாலும் பத்து தடவை கல்லத் தூக்கி அடிச்சா நமக்கே தெரிஞ்சிரும் இத விட்ட வேற வழியில்லேன்னு. பத்து நாய் கடிய சகிச்சிக்கிறதுக்கு ஒருத்தனோட மரியாதையா வாழ்ந்துட்டு போயிறலாம்”
– இது மாதொருபாகன் நாவலில் வரும் வார்த்தையல்ல. விதவை திருமணத்தை கொடுங்குற்றமாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தில், துணிந்து மறுமணம் செய்து கொண்ட ஒரு கிராமத்து பெண்ணுக்கு பைத்தியம் என்று பட்டம் கட்டப்பட்ட இன்னொரு பெண் வழங்கிய ஆறுதல்.
வழக்காக சொன்னால் மறுமணம் செய்வதை அறுத்துக் கட்டிய சாதி என்று மட்டமாக பேசுவார்கள். எதாவது கருத்து வேறுபாடு, விவாதம் வந்தால் ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சிருந்தான்னா அவளுக்கு தெரியும் என்று தொட்டதுக்கெல்லாம் முந்தானையை இழுப்பார்கள்.
ஆக காதலும், விவாகரத்தும், மறுமணமும் ஒரு பெண்ணுக்கு உரிமையாக வந்தால் ஆதிக்க சாதி தர்மம் அதை தேவடியாத்தனம் என்றே தூற்றும். மறுபுறம் ஆதிக்க சாதி பெண்கள் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொண்டு முடங்கி கிடந்தால் அவர்களை தங்களுக்கு சொந்தமான “தேவடியாக்களாக” மாற்றும். இத்தகைய ஆதிக்க சாதி நீதிதான் தங்கள் குலப் பெண்களை பெருமாள் முருகன் இழிவுபடுத்திவிட்டதாக பொங்குகிறது.
திருச்செங்கோட்டில் விநியோகிக்கப்பட்ட மாதொரு பாகன் நாவலின் பக்கங்களில் கவுண்டர்கள் பூதகரமாக கிளப்பிய வாசகம் இதுதான்….
இக்காட்சி கோவில் திருவிழாவின் பிள்ளைப் பேறு ஒன்று கூடல் இரவை வருணிக்கிறது.
“வீதிகளில் சாயங்காலம் முதலே அலையத் தொடங்கி விட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமேயில்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக்கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். ‘இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.”
நேர் பொருளில் இழிவுபடுத்துவதாக தோன்றும் இந்த பேச்சு உண்மையில் எதிர்மறையால் உருவாக்கப்பட்டவர்கள் தம்மை எதிர்மறையாக உருவாக்கிய சமூகம் குறித்து எதிர்மறை வடிவில் ஆனால் உட்பொருளில நேர்மறை விமரசினமாக வெளிப்படுத்துவதை உணர்த்துகிறது.
“கற்பின்” போலித்தனத்தை ஒரு தேவதாசிதான் மற்ற எவரையும் விட விளக்க முடியும். காரணம் கற்பை பாதுகாக்கும் கடமையை ஏற்றிருக்கும் கனவான்களை அவள்தான் அன்றாடம் தரிசிக்கிறாள்.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வினவு தோழர்கள் எடுத்த கருத்துக் கணிப்பின் படி தாழ்த்தப்பட்டவர்களை மணம் செய்த வன்னியப் பெண்களின் வாயிலிருந்து சாதி ஆதிக்கத்தை சுட்டுப் பொசுக்கும் வார்த்தைகளை கவித்துமாக கேட்டிருக்கிறோம். அதையே பெருமாள் முருகன் தனது நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார்.
எங்கே கற்பின் மேன்மையும் அதைப் பாதுகாக்கும் கடமையும் ஓங்கி உரைக்கப்படுகிறதோ அங்கேதான் பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். “மாதொரு பாகம்” நாவலை எதிர்த்து இணையத்தில் எழுதும் கொங்கு ‘சிங்கங்கள்’ இதை உறுதி செய்கின்றன. மற்ற சாதிகளை விட விதவைகளுக்கு வெள்ளுடை தரித்து மறுமணம் செய்யாமல் சாகும் வரை கற்புக்கரசியாக காத்த மண் என்கிறார்கள். கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறி கற்பாத்தாக்களாக பல ஆத்தக்கள் வழிபடப்படும் பகுதி என்கிறார்கள். இதை பெருமையாக பீற்றுபவர்கள் பெருமாள் முருகனின் எழுத்தை எரிக்கத்தான் செய்வார்கள்.
கொங்கு மண்ணின் கற்பு சென்டிமென்டை அறுவடை செய்ய பாரதக் கற்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ஓடோடி வருகிறார்கள். இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியானதும் புது தில்லியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் குழுமம் அதை படித்து தடை செய்ய வேண்டிய பட்டியலில் இணைத்து அதற்கான முயற்சிகளை செய்தாகவும் பலர் கூறியிருக்கின்றனர்.
ஆதிக்க சாதி உணர்ச்சியும் இந்து உணர்ச்சியும் வேறு வேறல்ல. முன்னதில் தலித்துக்களும் பின்னதில் சிறுபான்மையினரும் வில்லன்கள் என்பதால் இவர்கள் இயல்பிலேயே பங்காளிகள். திருச்செங்கோட்டின் மக்கள் நாவலை எரித்ததில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றது ஆர்.எஸ்.எஸ் தரப்பு. பிறகு உணர்ச்சிவசப்பட்ட லோக்கல் ஆட்கள் இருந்தார்கள் என்றார்கள். பிடித்துக் கேட்டால் ஃபிரின்ஞ்ச் குரூப் செய்திருக்கும் என மாற்றினார்கள்.
வட இந்திய விதவைகள் - இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!
வட இந்திய விதவைகள் – இந்து மதம் பெண்களை போற்றும் இலட்சணம்!
இறுதியில் இந்து முன்னணி இராம கோபாலனே களத்திற்கு வருகிறார். இவர்தான் அந்த ஃபிரின்ஞ்ச் குரூப்பின் தலைவர் போலும்.
“மாதொரு பாகன்’ என்பது உயர்ந்த தத்துவம். திருச்செங்கோட்டிற்கு புகழ் சேர்க்கும் சிவபெருமானின் இந்தத் திருவிளையாடலை கொச்சைப்படுத்தி எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் வாழும் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிப்பதை ஏற்க முடியாது.”
“மாதொரு பாகன்’ நாவலில் பெருமாள் முருகன் என்ன எழுதியுள்ளார் என்பதை நீதிபதிகள் படிக்க வேண்டும். அப்போது தான் திருச்செங்கோட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் எதிர்ப்புக்கான காரணங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்த வழக்கில் மக்களின் கருத்தை அறியவும், இந்து முன்னணி சார்பாக வழக்காடவும் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.”- என்று அறிக்கை விட்டிருக்கிறார் இராம கோபாலன்.
மாதொரு பாகம் என்று அறிவித்தது சிவன்தானே? அறிவிக்கும் அதிகாரம் மாதாவுக்கு இல்லாத போது பாகத்தின் மதிப்பென்ன? இந்த திருவிளையாடல் தத்துவம் வேருன்றியிருக்கும் வட இந்தியா, பெண் சிசுக் கொலையில் சாதனை படைத்து வருவது ஏன்? பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் அதில் முதலிடத்தில் இருப்பது தற்செயலானதா?
பெருமாள் முருகன் பெண்களின் சுதந்திரத்தை சித்தரித்தார். இந்துமதவெறியர்களோ பெண் குழந்தைகளை கழுத்தறுக்கின்றனர். இந்த உரிமை பறிபோய்விடக்கூடாது என்றே இந்துமதவெறியர்கள் ஆதிக்க சாதியினருக்கு கொடியும் தடியும் பிடிக்கின்றனர்.
நாவலின் காலத்தில் மக்கள் ஒன்று கூடும் இடம் கோவிலும், திருவிழாவாகவும்தான் இருக்கும். இன்று போல மல்டிபிளக்ஸோ, சூப்பர் மார்கெட்டோ இல்லை ஃபேஸ்புக்கோ கிடையாது. “விருந்தாளிக்கு பிறந்தவன், சந்தையில் தரிச்சவன்” என்று வசை மொழிகள் கூறும்  பொருள் என்ன? மூச்சு விட முடியாத சாதிய சமூகத்தின் பிடியிலிருந்து சுய விருப்பமும், காதலும் தரிக்கும் இடமாக அந்தக்கால கோவில் திருவிழாக்கள், சந்தைகள் இருந்திருக்கின்றன.
தமிழ் சினிமாக்களில் இன்றும் கூட கோவில் காட்சிகளில்தான் நாயகனும், நாயகியும் காதலைத் தொடங்குகின்றனர். இதை இந்து முன்னணி எதிர்த்து பார்க்கட்டுமே? பிறகு ஒரு பயலும் கோவிலை ஏறெடுத்து பார்க்க மாட்டான். தற்போதே அந்த சங்கமத்தின் வாய்ப்பை செல்பேசியும் இணையமும் ஏற்படுத்தி வருகின்றன.
கோவில் எனும் மத ஆன்மீக விசயத்தோடு கொளுத்திப் போட்டால் மக்களை உடன் வெறுக்கச் செய்ய முடியும் என்று இந்துமதவெறியர்கள் கச்சிதமாக போட்ட திட்டமே திருச்செங்கோட்டு பக்தர்கள் பெயரில் காட்டிய எதிர்ப்பு. இன்று ஊடகங்களில் இந்துமதவெறியர்கள் பேசும் போது கோவிலை விபச்சார மடமாகவும், பெண்களை விபச்சாரியாகவும் இழிவுபடுத்தியதாக தொடர்ந்து பொய்யுரைக்கின்றனர்.
சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது எமது தோழர்கள் மோடியை எதிர்த்து உடுமலைப் பேட்டையில் பிரச்சாரம் செய்தனர். கொலைகார மோடி எனும் அந்த துண்டுப்பிரசுரத்தை பார்த்த ஈஸ்வரன் கட்சிக்காரர்கள் உடன் ஆள் திரட்டி தோழர்களை தாக்க வந்தனர். பின்னர் எஸ்.பி வரை பேசி பிரச்சாரம் செய்யும் உரிமையை தோழர்கள் நிலைநாட்டினர். இப்படி மோடிக்கு ஒன்று என்றால் கவுண்டர் சங்கம் ஓடி வருவதும், கவுண்டர் மானத்திற்கு பங்கம் என்று ஆர்.எஸ்.எஸ் ஓடி வருவதும் அங்கே சகஜம்.
கோவை நாயுடு தொழிலதிபர்கள், மார்வாடி வணிகர்கள், கொங்கு வேளாளர்கள் என்ற மூவர் கூட்டணியை வைத்தே பா.ஜ.க அங்கே செல்வாக்கை வளர்த்து வருகிறது. அதே நேரம் முசுலீம்களை எதிர்த்த கலவரத்திற்கு தலித்துக்களை அடியாட்களாக பயன்படுத்தியும் வந்திருக்கிறது. கீழே முசுலீம் எதிர்ப்பு, மேலே தலித் எதிர்ப்பு என்ற கொள்கைக் கூட்டணியில் சாதி மற்றும் மத சேர்க்கை அங்கே உருவாகி விட்டது.
17.01,2015 தினமணியில் வந்த செய்தி….
“எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கான எதிர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெருமாள் முருகனின் பின்னணி ஆய்வுக்குரியது. இதுபோன்ற பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணமாக உள்ளவர்கள் பொதுவுடமைக் கட்சியினர்தான். இதைக் கண்டிப்பது பாஜக மட்டுமே. இதுகுறித்து தினமணி ஆசிரியர் எழுதிய தலையங்கத்தை வரவேற்கிறேன். பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – பா.ஜ.க தலைவர் இல. கணேசன்.
விசாரணையெல்லாம் கிடையாது. நிறுத்து, இல்லையேல் நடப்பது வேறு என்கிறார் இல. கணேசன். பண்பாட்டு சீரழிவு, கம்யூனிஸ்ட் கட்சி, தடை…… முடிந்தது விசயம்.
பெரியாரின் ஆதரவோடு முத்துலெட்சுமி “தேவதாசி ஒழிப்புச் சட்டம்” நிறைவேறப் போராடிய போது இல.கணேசனின் தாத்தா சத்யமூர்த்தி அய்யர்தான் கடுமையாக எதிர்த்தார். இன்று ஆதிக்க சாதி பெண்களை இழிவு படுத்தும் சாதிய அமைப்பை பெருமாள் முருகன் கேள்விக் கேட்பதை இவர்கள் நிறுத்துகிறார்கள்.
உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன் பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?
உமைக்கு பாதி பாகம் கொடுத்த சிவன், பெண் சிசுக்களை தொடர்ந்து கொல்வது ஏன்?
இன்று கொங்கு வேளாள சாதியிலேயே வெள்ளை சேலை கட்டுவது மாறி வருவதும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் விதவை மறுமணம் நடந்து வருவதும் யாரால்? பெரியார் இயக்கமும், கம்யூனிச இயக்கங்களும் இல்லை என்றால் தமிழ்நாடு தொடர்ந்து இருண்ட காலத்திலேயே இருந்திருக்கும்.
சாதியும், மதமும் மட்டுமல்ல இவற்றை பாதுக்காக்கும் அரசும் அதே குரலில் பேசுகிறது.
“அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “எழுத்தாளர் பெருமாள் முருகனே சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், திருச்செங் கோட்டை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாது’’ என வாதிட்டார்.” – 20.01.2015 தி இந்து செய்தி.
இதையே கருத்துச் சுதந்தரம் பாதி, எதை எழுதுவது என்ற கட்டுப்பாடு மீதி என்று மாதொரு பாகனுக்கு புதிய விளக்கம் கொடுக்கிறார் துக்ளக் சோ. கருத்து சுதந்திரம் கேட்கும் பெருமாள் முருகன் கேரளாவிற்கு சென்று அங்கிருந்து எழுதலாமே என்று ஆலோசனை கூறுகிறது தினமலர்.
ஆக எது கருத்து, எது சுதந்திரம் என்பதை இவர்கள் தீர்மானிப்பார்கள். நாம் தீர்மானித்தால் அது தடைசெய்யப்படும். அதை ஒத்துக் கொண்டால் சுதந்திரம். மீறினால் தண்டனை. மனு தர்மம் எங்கே இருக்கிறது என்று சமாளிப்பவர்களுக்கு இதை விட சுரணையூட்டும் சான்று வேறு வேண்டுமா?
உண்மையில் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையா? இல்லை ஒடுக்கப்பட்ட பெண்கள், மக்களின் வாழும் உரிமை குறித்த பிரச்சினையா?
-    தொடரும் vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக