சனி, 24 ஜனவரி, 2015

உச்ச நீதிமன்றம்/ சிமென்ட் சீனிவாசன்/ ஏவிஎம் குருநாத் /கிரிகெட் வாரியம் / மேட்ச் பிக்சிங் / ஐ பி எல் அணி எல்லாமே கூட்டணியா?

ஊழல் கிரிக்கெட்டுக்கு புனித விளக்கேற்றும் உச்ச நீதிமன்றம்  
ந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், இன்றைய உலகக் கிரிக்கெட்டின் ‘ஜாம்பவானுமான’ இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாக சூதாடியது குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
1. குருநாதன் மெய்யப்பனும் ராஜ் குந்த்ராவும் சூதாடினார்கள். தங்களுக்கு உள் விவகாரங்கள் தெரிந்த சென்னை அணி, ராஜஸ்தான் அணி ஆடும் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பாகவும் பந்தயம் வைத்து சூதாடினார்கள்.

2. குருநாத் மெய்யப்பனின் மாமனார் சீனிவாசனுக்கு இந்தியா சிமென்ட்சில் 0.14% தான் பங்குகள் உள்ளன என்பதால் அவருக்கும் இந்தியா சிமென்ட்சுக்கு சொந்தமான சென்னை அணிக்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியாது. அந்நிறுவனத்தில் அவரது குடும்பத்தினரின் மொத்த பங்கு சதவீதம் 29.23%. சீனிவாசனின் மனைவியும், மகளும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர்.
3. சீனிவாசன் ஐ.பி.எல் போட்டிகளை கட்டுப்படுத்தும், ஐ.பி.எல் அணிகளை ஒழுங்குபடுத்தும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தனக்கு இருந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை, சென்னை ஐ.பி.எல் அணிக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தன.
4. அவர் அந்த அதிகாரத்தை அப்படி பயன்படுத்தி இந்தியா சிமென்ட்சுக்கும் தனது குடும்பத்துக்கும் ஆதாயம் ஈட்டியதற்கான சான்றுகளும் உள்ளன.
முதலாவதாக, 2008-ம் ஆண்டு சேம்பியன்ஸ் கோப்பை போட்டி ரத்தானதை அடுத்து சென்னை ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்சுக்கு ரூ 10.4 கோடி ஈட்டுத் தொகை வழங்க முடிவெடுத்தது சீனிவாசன் தலைமையிலான கிரிக்கெட் வாரியம். தனது சொந்த ஆதாயம் தொடர்பாக முடிவெடுக்கும் அந்தக் கூட்டத்திலிருந்து பெயரளவுக்குக் கூட விலகி இருக்கவில்லை, சீனிவாசன்.
இரண்டாவதாக, 2009-ம் ஆண்டு அவ்வணிக்கு ரூ 13.1 கோடி ரூபாய் ஈட்டுத் தொகை வழங்குகிறது கிரிக்கெட் வாரியம். “சீனிவாசன் தனக்குத் தானே பணத்தை வழங்கிக் கொள்கிறார், அதனால் அவரை வாரியத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று கூக்குரல் எழுந்ததும், இந்தியா சிமெண்ட்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறது.
கிரிக்கெட் வாரிய விதி திருத்தம்
கிரிக்கெட் வாரியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எல் அணியை சொந்தமாக்கிக் கொண்டு வணிக லாபம் ஈட்டுவதை அனுமதிக்கும் வகையில் 2008-ம் ஆண்டில் வாரியத்தின் விதி 6.2.4 திருத்தப்பட்டது செல்லாது. வாரியமே வணிக இலாபம் ஈட்டலாமா?
மூன்றாவதாக, குருநாத் மெய்யப்பன் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானதும், பொது வெளியில் எழுந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும் சமாளிக்க சீனிவாசன் தலைமையிலான கிரிக்கெட் வாரியம் அவசர அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 முன்னாள் நீதிபதிகள் உட்பட 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவிக்கிறது. இடையிலேயே குழுவின் ஒரு உறுப்பினர் அதிலிருந்து விலகி விடுகிறார்.
மீதியிருந்த இரண்டு பேரைக் கொண்ட அந்தக் குழு “பத்திரிகைகளில் வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தான் விசாரணை எதுவும் செய்ய முடியாது” என்று அறிக்கை அளித்து விடுகிறது. அதைப் பயன்படுத்தி விஷயத்தை இழுத்து மூட முயற்சித்தது கிரிக்கெட் வாரியம்.
(இந்த விசாரணைக் குழு தொடர்பாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில்தான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.)
5. கிரிக்கெட் வாரியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எல் அணியை சொந்தமாக்கிக் கொண்டு வணிக லாபம் ஈட்டுவதை அனுமதிக்கும் வகையில் 2008-ம் ஆண்டில் வாரியத்தின் விதி 6.2.4 திருத்தப்பட்டது செல்லாது. ஒரு விஷயத்தை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவரே அந்த முடிவால் ஆதாயம் அடைபவராகவும் இருப்பது இயற்கை நீதிக்கு முரணானது.
6. ஐ.பி.எல் போட்டிகளின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சுந்தரராமன் (சீனிவாசனின் ஆள்) முறைகேடுகளில் ஈடுபட்டாரா என்பதை மேலும் விசாரித்து அது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகங்களை களைய வேண்டும்.
தாவூத் இப்ராகிம்
கிரிக்கெட் வாரியத்தை தமது குடும்ப வியாபார நிறுவனமாக நடத்தி வரும் இந்தியத் தரகு முதலாளிகளின் செயல்பாடுகளில் அவர்கள் விரும்பாத தலையீடுகள் எதுவும் முளைக்காமல் உறுதி செய்திருகிறது. (படம் : கிரிக்கெட் சூதாடிகளில் ஒருவரான தாவூத் இப்ராகிம்)
இந்தத் தீர்ப்பின் தொடக்கமே உச்ச நீதிமன்றத்தின் சுய சந்தேகத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கிரிக்கெட் வாரியம் தொடர்பான விவகாரங்களில் விசாரணை செய்ய உயர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் சொல்கிறது நீதிமன்றம். கிரிக்கெட் வாரியத்தை அரசு நிறுவனம் என்று சொல்ல முடியுமா, மற்றும் அரசியல் சட்டப் பிரிவு 226-ன் கீழ் அதன் விவகாரங்களில் தான் தலையிட முடியுமா என்று முதலில் விளக்குகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை கட்டுப்படுத்துவதாலும், கிரிக்கெட் போட்டிகள் பல கோடி ரசிகர்களின் ஆர்வத்திற்குரியவையாக இருப்பதாலும், அதன் செயல்பாடுகள் பொது நலனை பாதிப்பதால் அதில் நீதிமன்றங்கள் தலையிடலாம் என்று எச்சரிக்கையாக சொல்கிறது.
அதற்கு முன்னதாக, கிரிக்கெட் வாரியத்தை ஒரு அரசு நிறுவனம் என்று கூற முடியாது என்று தெளிவுபடுத்தி விடுகிறது. அதன் மூலம் கிரிக்கெட் வாரியத்தை வியாபார நிறுவனமாக நடத்தி வரும் இந்தியத் தரகு முதலாளிகளின் செயல்பாடுகளில் அவர்கள் விரும்பாத தலையீடுகள் எதுவும் முளைக்காமல் உறுதி செய்திருகிறது.
இவ்வாறு, கிரிக்கெட் வாரிய நடைமுறைகளை விசாரிப்பதாக கூறிக் கொண்டு, அவற்றை கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளின் கீழாகவே விசாரிக்கப் போவதாக விலகி நிற்கிறது. கிரிக்கெட் உலகில் சீனிவாசன் முதலானவர்கள் நடத்தி வரும் குற்றச் செயல்களை, தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரத்தை தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
“ஒரு சிலர் தமது வணிக நோக்கத்துக்காக கிரிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்று  மக்கள் உணர ஆரம்பித்தால் கிரிக்கெட் வாரியம் தனது லாபத்துக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் லாபத்துக்காகவும் உருவாக்கியிருக்கும் வருமான வாய்ப்புகள் அனைத்தும் பாழாகி விடும்” – உச்ச நீதிமன்றம்
கிரிக்கெட் ஊழல் குறித்த விசாரணையை வெறும் சென்டிமெண்டாக மட்டுமே உச்சநீதிமன்றம் பார்க்கிறது.
“கிரிக்கெட் விளையாட்டை கண்டு களிக்கும் மக்கள் அது நேர்மையாக விளையாடப்படுகிறது என்றும், அதன் கோட்பாடுகளுக்கும் புனிதமான மீறப்படக்கூடாத நோக்கங்களுக்கும் மாறாக எந்த விதமான ஊழல்களும் நடக்கவில்லை என்று நம்புகின்றனர். அதனால்தான், கிரிக்கெட் இன்னும் பரவலாக பார்க்கப்படுகிறது.”
“மாறாக, ஒரு சிலர் தமது வணிக நோக்கத்துக்காக கிரிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்று அவர்கள் உணர ஆரம்பித்தால், போட்டிகளிலும், அதன் நிர்வாகத்திலும் நடக்கும் மோசடிகள் கிரிக்கெட்டின் உண்மை வடிவத்தை சிதைத்து விட்டன என்று அதன் மீது ஆர்வம் இழக்க ஆரம்பித்தால், கிரிக்கெட் வாரியம் தனது லாபத்துக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் லாபத்துக்காகவும் உருவாக்கியிருக்கும் வருமான வாய்ப்புகள் அனைத்தும் பாழாகி விடும்“ என்று தீர்ப்பில் விளக்கமளித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.
இதைத் தவிர்க்க வேண்டும். அதாவது கிரிக்கெட் வாரியத்திலோ, ஐ.பி.எல் போட்டிகளிலோ ஊழலோ, மோசடியோ இருப்பதாக பொதுமக்கள் உணராத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நோக்கம். ஊழலையும், மோசடிகளையும் தடுப்பதையோ அவற்றுக்குக் காரணமானவர்களை தண்டிப்பதையோ அது செய்யப் போவதில்லை என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
குற்றக் கும்பல் தலைவர் சீனிவாசன்
பல தரப்பினருக்கும் வாயடைப்பு நிதியாக பல கோடி ரூபாய் வாரி வழங்கி குற்றக் கும்பல் தரகர்களிலேயே தலை சிறந்தவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சீனிவாசன்.
ஊழல்கள், பந்தயம் வைத்து சூதாடுவது, அணி நிர்வாகிகளே சூதாட்டத்துக்காக போட்டியின் போக்கை மாற்றியதாக கூறப்படும் குற்றசாட்டுகள், பெருமளவு பணம் கைமாறுவது என்று சகிக்க முடியாத முடைநாற்றம் இந்திய கிரிக்கெட் உலகை சூழ்ந்திருக்கும் போது அதை மறைப்பதற்கு ஊதுவத்தி ஏற்றி வைக்கும் வேலையை மட்டும் செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
அதற்காக, கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக, ‘கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளிலிருந்து (ஐ.பி.எல்) அதன் நிர்வாகிகளே ஆதாயம் பெறலாம் என்ற வகையில் விதி திருத்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.’ என்று உத்தரவிட்டிருக்கிறது. அதன் மூலம், சீனிவாசன் கிரிக்கெட் வாரிய பதவி அல்லது சென்னை ஐ.பி.எல் அணி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருப்பதாக ஊடகங்கள் பில்ட்-அப் கொடுக்கின்றன.
ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் இந்திய கிரிக்கெட் எனும் மாபெரும் மோசடி தொடர்பாக ஒரு துரும்பைக் கூட சரிசெய்ய முன்வரவில்லை உச்ச நீதிமன்றம்.
முதலாவதாக, இந்தியாவின் பிரம்மஸ்ரீ கிரிமினல்கள் வரிசையில் வரும் சீனிவாசன், கிரிக்கெட் வாரியத் தலைவர் என்ற முறையில், இயற்கை நீதிக்கு விரோதமாக சென்னை அணிக்கு ஆதாயம் தேடும் வகையில் நடந்து கொண்டார் என்பதற்கான சான்றுகளை குறிப்பிட்டாலும், அவர் குருநாதன் விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்ததற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவரை விடுவித்திருக்கின்றது.
இரண்டாவதாக, 2008-ம் ஆண்டு அவ்வாறு “இயற்கை நீதி”க்கு விரோதமாக வாரிய விதியைத் திருத்திய இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், மகாராஷ்டிரா தரகர் சரத்பவார், சசாங்க் மனோகர், ஐ.எஸ் பிந்த்ரா, லலித் மோடி ஆகியோருக்கு தண்டனை என்று முணுமுணுக்கக் கூடத் துணியவில்லை நீதிபதிகள்.
மூன்றாவதாக, “இந்தியா சிமென்ட்ஸ் தனது அணியில் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதால்” அப்படி ‘இயற்கை நீதி’க்கு மாறாக சீனிவாசன் பெற்றுக் கொண்ட ஐ.பி.எல் அணி உரிமையில் தான் இப்போது தலையிட முடியாது என்கிறது தீர்ப்பு. அதாவது, பண மூட்டைகளின் நலன்களை பாதுகாப்பது ஒன்றுதான் உச்சநீதி மன்றத்தின் ஒரே நோக்கம்.
நான்காவதாக, குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவர் சென்னை அணியின் நிர்வாகியாகவே செயல்பட்டாலும், அவரது நடவடிக்கைகளுக்கும் சீனிவாசனுக்கும் தொடர்பில்லை என்று முடிவு செய்கின்றனர் நீதிபதிகள். குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகத்தில் தலையிட்டதும், பிரதிநிதியாக அமர்த்தப்பட்டதும் சீனிவாசனின் மருமகன் என்ற ஹோதாவில்தான் என்ற ஊரறிந்த உண்மை கிரிக்கெட்டின் புனிதத்தை காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கும் நீதிபதிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.
சீனிவாசன் - தோனி
“அணி நிர்வாகத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு எந்த பங்கும் இல்லை, அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர்தான்” என்று சென்னை அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனியும், அவ்வணியின் முதலாளி சீனிவாசனும் முட்கல் கமிட்டியிடம் கொடுத்த வாக்குமூலம் பொய் .
ஐந்தாவதாக, இந்நிலையில் “அணி நிர்வாகத்தில் குருநாத் மெய்யப்பனுக்கு எந்த பங்கும் இல்லை, அவர் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர்தான்” என்று சென்னை அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனியும், அவ்வணியின் முதலாளி சீனிவாசனும் முட்கல் கமிட்டியிடம் கொடுத்த வாக்குமூலம் பொய் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொய் வாக்குமூலம் கொடுத்தவர்களுக்கு ஒரு பெயரளவு அபராதம் விதிக்கக் கூட துணியவில்லை இந்த ‘உச்ச்ச்சா’ நீதிமன்றம்.
ஆறாவதாக, தனது தீர்ப்பு கிரிக்கெட் வாரியத்துக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற அவநம்பிக்கையோ என்னவோ, அந்த வாரிய முதலைகளின் நல் இயல்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தீர்ப்பு.
“ஊழலுக்கு எதிரான உங்கள் விதிகள் கூட, விளையாட்டின் தூய்மையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து விட்டால், கிரிக்கெட்டின் சாராம்சமே ஆட்டம் கண்டு விடும் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றன. கிரிக்கெட் ஆட்டத்தின் புனிதத்தை பாதுகாக்கவும், அதன் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகளை தடுக்கவும் நீங்களே உறுதி பூண்டிருக்கிறீர்கள்.
வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத அளவுக்கு ஆர்வத்துடனும் உணர்ச்சியுடனும் கிரிக்கெட் மைதானத்திலும், தொலைக்காட்சியிலும் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து மகிழும் அப்பாவி பார்வையாளர்களை ஏமாற்றுவதற்கான மோசடிதான் இந்த அமைப்பு என்ற கருத்து அவர்களிடையே பரவினால் அதை கிரிக்கெட் வாரியம் சகித்துக் கொள்ள முடியுமா” என்று அவர்களிடம் மன்றாடுகிறது உச்ச நீதிமன்றம்.
சீனிவாசன் வாரியத் தலைவர்
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சீனிவாசன் எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஏழாவதாக, சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பனுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் என்ன தண்டனை, சுந்தர ராமன் தவறு செய்தாரா, கிரிக்கெட் வாரிய விதிகளை எப்படி திருத்த வேண்டும் இவற்றை முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையில் நீதிபதி அசோக் பான், நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் என்ற இரண்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை உறுப்பினராக கொண்டு ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
இந்த கமிட்டி 6 மாதங்களுக்குள் மேற்சொன்ன விவகாரங்களில் தனது தீர்ப்பைச் சொல்ல வேண்டும். கமிட்டி உறுப்பினர்களுக்கான ஊதியம், அதன் அலுவலகம், போக்குவரத்து, தங்குமிடம், பிற செலவுகள் என்னவென்று கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தமது பங்குக்கு அதிகாரத்தையும் அது கொண்டு வரும் வசதிகளையும் அனுபவித்துக் கொள்ள வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, இந்த முறைகேடுகள் தொடர்பாக கிரிக்கெட் வாரியமே விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று சொன்னால், அதற்கு எந்த நம்பகத்தன்மையும் இருக்காது என்பதை உணர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம் அந்த விசாரணைக்கு ஒரு புனிதத்தை கொடுக்கிறது இந்தத் தீர்ப்பு.
இது தொடர்பாக எழுதியிருக்கும் கிரிக் இன்ஃபோ தளத்தின் கிரிக்கெட் ஆசிரியர் சம்பித் பால், “கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல்களில் ஐ.பி.எல் சூதாட்டம் என்பது ஒரே ஊழலோ அல்லது முதலாவதோ இல்லை. பல ஆண்டுகளாக பணக்காரர்களின் ஒரு மேட்டுக்குடி கிளப்பாக செயல்படும் கிரிக்கெட் வாரியத்தின் மேலும் வசதியான மேட்டுக் குடி கிளப்தான் ஐ.பி.எல்” என்று எழுதுகிறார்.
இந்திய கிரிக்கெட்டை முழுக்க முழுக்க ஊழல் மயமாக்கி, முன்னாள் இன்னாள் வீரர்கள், மாநில சங்கங்களின் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பினருக்கும் வாயடைப்பு நிதியாக பல கோடி ரூபாய் வாரி வழங்கி குற்றக் கும்பல் தரகர்களிலேயே தலை சிறந்தவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் சீனிவாசன். அவரிடம் பொறுக்கித் தின்ற தோனி, கவாஸ்கர், ரவி சாஸ்திரி முதலான இந்த ஒட்டு மொத்த அமைப்புமே புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சீனிவாசன் எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதிலிருந்து இந்திய கிரிக்கெட் குடும்பத்தின் ஊழலை புரிந்து கொள்ளலாம்.
புரோக்கர் சரத்பவார்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புரோக்கர் சரத் பவாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்று ஊடகங்கள் பரபரப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.
கிரிக்கெட் என்ற விளையாட்டில் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈடுபடுத்தி, அவர்களை மையமாக வைத்து முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் கல்லா கட்டுவதை அங்கீகரித்து அதைப் பாதுகாக்க கடுமையாக உழைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சின்னவீடு வைத்திருக்கும் பண்ணையார்கள் அந்த பெண்களின் வளர்ப்பு மகள்களையும் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பது போல கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டே ஐ.பி.எல் அணியையும் சொந்தமாக வைத்திருந்தார் சீனிவாசன்.
“ஒன்று இதை வைத்துக் கொள், இல்லை அதை வைத்துக் கொள், இரண்டையும் நீயே வைத்துக் கொண்டால் ஊரில் பேர் கெட்டு விடும். அப்புறம் ஒரு பய கிரிக்கெட் பார்க்க வர மாட்டான்” என்று மட்டும் செல்லமாக கண்டித்து சீனிவாசனும் மற்ற முதலாளிகளும் தமது திருவிளையாடல்களை தொடர ஏற்பாடு செய்திருக்கிறது நாட்டாமை உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்த 6 வாரங்களுக்குள் நடக்கவிருக்கும் கிரிக்கெட் வாரிய தேர்தல்களில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு செய்திகளை எழுத ஆரம்பித்திருக்கின்றன ஊடகங்கள். சென்னை அணியை சட்ட ரீதியாக (கண்துடைப்புக்கு) கைமாற்றிக் கொடுத்து விட்டு தலைவர் போட்டிக்கு சீனிவாசன் போட்டியிடுவாரா, மேற்கு வங்கத்தின் டால்மியா அவரை எதிர்ப்பாரா, மகாராஷ்டிராவின் புரோக்கர் சரத் பவாரின் முயற்சிக்கு ஆதரவு கிடைக்குமா என்று பரபரப்பூட்டிக் கொண்டிருக்கின்றன.
சீனிவாசன் நாட் அவுட்
வெற்றி பெறப் போவது சீனிவாசன் + பா.ஜ.க கூட்டணியா, சரத்பவார் + பா.ஜ.க கூட்டணியா, அல்லது சீனிவாசன் + சரத்பவார் கூட்டணியா?
இதில் தீர்மானிக்கும் காரணியாக இருக்கப் போவது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் ஆதரவுதான் என்கிறது தி ஹிந்து நாளிதழ். அதாவது சீனிவாசனுக்கும், சரத்பவாருக்கும் தலா 8 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதாம். மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 8 உறுப்பினர்கள் யார் தலைவராவார்கள் என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருப்பார்களாம்.
வெற்றி பெறப் போவது சீனிவாசன் + பா.ஜ.க கூட்டணியா, சரத்பவார் + பா.ஜ.க கூட்டணியா, அல்லது சீனிவாசன் + சரத்பவார் கூட்டணியா? இவற்றில் எந்த கும்பல் கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மக்களுக்கு மொட்டையடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.
ஊழல், மோசடி, கருப்புப் பணம், ஏமாற்றுதல்  நிறைந்த இந்த விளையாட்டை மாலை நேர பொழுதுபோக்காக பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதன் மீதான தமது தீர்ப்பை எழுதும் நேரம் வந்து விட்டது. இல்லையென்றால் ஆட்டத்தில் அடிக்கப்படும் சிக்சர் மட்டுமல்ல, ஆட்டத்தை நடத்தும் வாரியமும் தொடர்ந்து “மேட்ச் பிக்சிங்கில்” ஈடுபடும். அதை கொஞ்சம் நேர்த்தியாக செய்யுமாறு கோருகிறது உச்சநீதிமன்றம். இந்தச் சதிக்கு பலியாகப் போகிறீர்களா?
- செழியன்vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக