சனி, 24 ஜனவரி, 2015

தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்: குருமூர்த்தி

சென்னை ‘‘தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்’’ என்றும், என் மீது மானநஷ்ட வழக்கு போடுவதாக கூறி, ஏன் போடவில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, ஆடிட்டர் குருமூர்த்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று தயாநிதிமாறன் சொன்னதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால், 2007-ம் ஆண்டு தான் இந்த விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது அப்போது. 323 ஐ.எஸ்.டி. இணைப்புகள் தயாநிதிமாறன் வீட்டில் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் பெயரில் பதுக்கப்பட்டு இருந்தது. அதாவது, கம்ப்யூட்டரில் இல்லாத, யாருக்குமே தெரியாத, சில பேருக்கு மாத்திரம் தெரிந்த மாதிரி இந்த 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு, அதில் இருந்து பாதாள குழி தோண்டி கேபிள் மூலம் சன் டி.வி.யில் இணைத்தார்கள். இதுபற்றி விசாரித்த சி.பி.ஐ., இது உண்மை, இது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனுமதி தேவை என்று 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்கள்.

அப்போது யார் அதிகாரத்தில் இருந்தார்கள். அப்போது தயாநிதிமாறன் தி.மு.க.வில் இல்லை. அவர் 2007-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க.வை விட்டு விலகினார். அதன்பிறகு, 2008-ம் ஆண்டு திரும்பவும் தி.மு.க.வில் இணைந்தார். இணைந்த பிறகு இந்த வழக்கு மட்டும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால்தான் இவ்வளவு நாள் தாமதம்.
அது 2011-ம் ஆண்டு வெளியில் கொண்டுவரப்பட்டது. அதாவது நான் இதை வெளியில் கொண்டுவரவில்லை. சி.பி.ஐ. கண்டுபிடித்ததை வெளியில் கொண்டு வந்தேன். இந்த புலன்விசாரணையை நான் செய்யவில்லை. சி.பி.ஐ. செய்தார்கள். அவர்கள் செய்த விசாரணை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது, மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை தாமதமாக்கினார்கள்.
கிட்டத்தட்ட அதை மறைப்பதற்கான எல்லா முயற்சிகளும் நடந்தபோது அதை வெளியில் நான் கொண்டுவந்தேன். வெளியில் கொண்டுவந்தபோது தயாநிதிமாறன் இப்போது என்ன கூறுகிறாரோ, அப்போதும் அதைத்தான் கூறினார். என்னிடம் ஒரேயொரு இணைப்புதான் இருந்தது என்கிறார். அப்போது தயாநிதிமாறன் செய்த தவறு என்னவென்றால், இந்த 300 இணைப்பு எப்படி இருந்தது என்றால், 24371500, 24371799 என்று மொத்தமாக இருந்தது.
அதில் இவர் மந்திரியாக இருந்து, பின்னர் ராஜினாமா செய்த பிறகு எனக்கு இதில் 2 இணைப்பு மட்டும் கொடுங்கள் என்றார். அப்போது இந்த நம்பர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை, தேடுகிறார்கள். பி.எஸ்.என்.எல். குறிப்பில் எழுதுகிறார்கள். அதாவது, நாங்கள் தேடிப்பார்த்தோம், கடைசியில் அது எங்கு கிடைத்தது என்றால், மாம்பலம் தொலைதொடர்பு அலுவலகத்தில் போய் பார்த்து, கடைசியில் அது தயாநிதிமாறன் வீட்டில் இருந்தது என்று சொன்னார்கள்.
இந்த 2 இணைப்பையும் அவரது வீட்டிற்கு கொடுக்க வேண்டும் என்றால், இந்த 300 இணைப்புகளையும் நீக்க வேண்டும் என்று எழுதினார்கள். 323 இணைப்புகள் அவரது வீட்டில் இருந்ததா இல்லையா?. இவர் சொல்கிறார், என்னிடம் ஒரு இணைப்புதான் இருந்தது, குருமூர்த்தி அவதூறாக எழுதியிருந்தார். அவர் மீது 10 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று சொன்னார்.
உடனே நான் ஒரு கட்டுரை எழுதினேன். ‘‘வரவேற்கிறேன் மாறன். என்னிடம் உண்மை எல்லாம் இருக்கிறது. என்மீது மானநஷ்ட வழக்கு போடுங்கள்’’ என்றேன். ஏன் போடவில்லை?. மானம் உள்ளவர்கள் தானே மானநஷ்ட வழக்கு போட முடியும்.
இன்றைக்கு சொன்ன பொய்யைத்தான் அன்றைக்கும் அவர் சொன்னார். என் மீது வழக்கு போடுங்கள் என்று சொன்னபோது ஏன் நிறுத்தினார்?. ஏன் தெரியுமா, அவரால் இந்த பொய்யை சொல்ல முடிகிறது. மீடியாவில் யாரும் இதை படிக்கவில்லை. படித்து அவரை கேட்டிருந்தால், ஏன் சார்.. நீங்கள் 2011-ம் ஆண்டே அவர் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று சொன்னீர்கள். அவரும் மானநஷ்ட வழக்கு போடுங்கள் என்று சவால்விட்டார். நீங்கள் ஏன் போடவில்லை? என்று கேட்டால் அவரால் இன்று இந்த பொய்யை சொல்ல முடியுமா?. அவர் கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய்.
இதை நான் 2011-ம் ஆண்டு வெளிப்படுத்தியபோது சி.பி.ஐ. எதுவும் நடவடிக்கை எடுக்காததால், 2013-ம் ஆண்டு நான் சுப்ரீம் கோர்ட்டு போனேன். 2014-ம் ஆண்டு ஜனவரியில் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் எப்.ஐ.ஆர். போடுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்தார்கள்.
அப்போது யார் பவரில் இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் இருந்தது. அந்த சி.பி.ஐ. தான் இந்த எப்.ஐ.ஆர்.-ஐ பதிவு பண்ணினார்கள். அதன் பிறகு நடவடிக்கை தொடர்வதற்கு காரணம் சுப்ரீம் கோர்ட்டில் இவர்கள் உத்தரவாதம் கொடுத்ததால் தானே தவிர, இந்த அரசாங்கம் எதுவும் செய்ததாக நான் சொல்ல மாட்டேன்.
இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.  thinaboomi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக