ஞாயிறு, 25 ஜனவரி, 2015

மானியத்தைக் குறைக்கும் சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: கருணாநிதி

பொது விநியோகத் திட்டத்துக்கு எதிரான சாந்தகுமார் குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் பரிந்துரைகளை சாந்தகுமார் குழு மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
நாட்டின் 67 சதவீத மக்களுக்கு, உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவு வழங்குவதற்குப் பதிலாக 40 சதவீதம் பேருக்கு மட்டுமே அளிக்கும் வகையில் மானியத்தைக் குறைத்துவிடலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உரம், பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியத்தைப் பெருமளவுக்குக் குறைத்திட முடிவு செய்திருப்பதைப் போல, உணவுக்கான மானியத்தையும் குறைத்திட மத்திய பாஜக அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளும், ஏழைய எளிய மக்களும்தான் பாதிக்கப்படுவர் என்பதை மத்திய அரசு அலட்சியம் செய்துவருகிறது.சுமார் 15 லட்சம் டன் அரிசி மான்ய அளவை குறைக்கக் முயற்சி? மோடி அரசின் மேட்டுக்குடி மனோபாவம்!

பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை, தன்னுடைய பொறுப்பில் இருந்து விலக்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றியுள்ள மத்திய அரசு, சமையல்
எரிவாயு மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, மானியம் வழங்குவதில் மாற்றம் செய்து வருகிறது.
உர மானியத்தையும் கொஞ்சம்கொஞ்சமாக கை கழுவத் திட்டமிட்டுள்ளது.
அந்த வழியில், உணவு மானியத்தையும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாந்தகுமார் அளித்துள்ள பரிந்துரைகளின்படி, தமிழக அரசு நியாய விலை அரிசிக்காக மட்டும் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி செலவழிக்க வேண்டும்.
பயனாளிகளின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க சாந்தகுமார் குழு பரிந்துரைப்பதால், தமிழகத்துக்கான அரசி ஒதுக்கீடு 14.80 லட்சம் டன்னாகக் குறைந்துவிடும்.  அதன்
காரணமாக பொது விநியோகத் திட்டத்துக்காக, தமிழக அரசு தற்போது செலவழிப்பதைவிட, மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.
எனவே, பொது விநியோகத் திட்டத்தையே ஒட்டுமொத்தமாக மூடுவதற்கு வழி வகுக்கும் சாந்தகுமார் பரிந்துரைகளை மத்திய அரசு ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக