வியாழன், 22 ஜனவரி, 2015

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் (AVM) குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிட வேண்டுமெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அணி உரிமையாளர் என்ற பொறுப்பை அவர் உதற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அடுத்த 6 வாரங்களில் பிசிசிஐ தேர்தல்களை நடத்தலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அதில் சீனிவாசன் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வாசித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர் மற்றும் கலிபுல்லா லாபநோக்கிலான இரட்டை நலன்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இதன்படி சீனிவாசன் ஒன்று பிசிசிஐ பதவிகளில் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும், அல்லது பிசிசிஐ பதவி முக்கியமெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பொறுப்பை உதற வேண்டும்.


இரட்டை நலன்களை ஆதரிக்கும் 2008-ஆம் ஆண்டு பிசிசிஐ விதிமுறைகள் இத்தோடு முடிவுக்கு வருகிறது என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதே போல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் குந்த்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இருவரும் அணி நிர்வாகிகளே என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அல்ல என்றும் கூறியதோடு, இவர்கள் மீதான குற்றச்சாட்டு தனிநபர்கள் சார்ந்ததல்ல, இவர்கள் சார்ந்த அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளையும் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது.

இதனையடுத்து குருநாத் மெய்யப்பன், குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றின் மீதான முடிவுகளை அறிவிக்க உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிசிசிஐ தேர்தல், போட்டியிடுபவர்களின் தகுதி, தகுதி இழப்பிற்கான அளவு கோல் ஆகியவற்றில் லோதா தலைமையிலான குழு பரிந்துரைகள் செய்யவும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

முத்கல் கமிட்டி பரிந்துரைகளையும் இந்த கமிட்டி நிறைவேற்றும். இவ்வாறாக இந்த கமிட்டி எடுக்கும் முடிவே இறுதியானது, இதற்கு பிசிசிஐ கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுமார் 138 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதிகள் சுமார் 90 நிமிடங்கள் அதன் முக்கிய அம்சங்களை வாசித்துக் காட்டினர்.

உச்ச நீதிமன்றம் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
> பிப்ரவரி 2008-ல் விதிமுறை எண் 6.2.4 மீது திருத்தங்கள் கொண்டு வந்து பிசிசிஐ பதவி வகிப்பவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக நலன்களில் பங்கேற்க வழங்கியது ரத்து செய்யப்பட்டது.
> லாப நோக்கிலான முரண்பட்ட இரட்டை நலன்கள் விவகாரத்தில் சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ் அளிக்கவில்லை.
> பிசிசிஐ, அல்லது ஐபிஎல் இதில் ஏதாவது ஒன்றை சீனிவாசன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
> சீனிவாசன் மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை.
> குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியிருக்கிறது. இவர்கள் இருவரும் அணியைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகளே.
> முத்கல் கமிட்டி தனது விசாரணையில் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தது. குந்த்ரா மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தது.
> முத்கல் கமிட்டியின் விசாரணையை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை.
> பிசிசிஐ தலைவராகவும் ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரட்டைப் பதவி வகித்ததன் மூலம் லாப நோக்கிலான இரட்டை நலன்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டார் சீனிவாசன்.
> ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விசாரணையில் நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பிசிசிஐ கடைபிடிக்கவில்லை.
> எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியும் வணிக நலன்களை வைத்துக் கொள்ள முடியாது.
> வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. tamil.hindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக