வியாழன், 18 டிசம்பர், 2014

ஒரு Ex பார்ப்பனனின் பார்வையில் தமிழ்நாட்டில் பார்பன ஆதிக்கம்?

மாதிரிப் படம்வினவு தோழர்களுக்கு வணக்கம்,
ஜெயமோகனின் ஒடுக்கப்படுகிறார்களா பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) எனும் கட்டுரையை படிக்க நேர்ந்ததின் விளைவே இம்மடல். இருப்பினும் இதற்கு மூலமான பத்ரியின் கட்டுரைக்கு குருஜீயே விளக்கமளித்த பின் சிஷ்யரின் வார்த்தையை படித்து துன்புறவேண்டுமா என நினைத்து படிக்கவில்லை.
ஜெயமோகனின் அகஒளி தரிசனத்திற்க்கும் சமூக எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி பாரியது. பல்வேறு விசயங்களில் அபத்தமாக எதையாவது உளறி கொட்டி விட்டு தனது மொழிநடையின் மூலம் அதை பூசிச்செல்வது அவரது தந்திரம். பிறகு அழுத்தி கேட்டால் நான் ஆய்வாளன் இல்லை, அது எனது பணியும் கிடையாது என ஒரே போடாக போட்டுவிடுவார்.
இந்த விசயத்தை பொறுத்தவரை பூர்வாசிரமத்தில் பார்ப்பனனாக இருந்த எனக்கு இதைப்பற்றி பேச அதிகம் தகுதி உள்ளதாகவே நினைக்கிறேன்.
பிறப்பில் எனது பங்கு எதுவும் இல்லாவிட்டாலும், பின்பு நான் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளுக்காக இப்போதும் குற்ற உணர்ச்சி கொள்கிறேன். குற்ற உணர்ச்சியை சகித்து கொண்டு ஜெயமோகனுக்காக என் ரிஷிமூலத்தை கொஞ்சம் கிளறி அளிக்கலாம் என நினைக்கிறேன்.
என் வார்த்தைகள் எதுவும் அசீரீரியாய் உள்ளிருந்து ஒலித்தவை அல்ல. என் வாழ்வில் எனக்கே எனக்கேயுமாகவும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்.
பார்ப்பனர்களும் சமூக அவமதிப்பும் எனும் இரண்டாவது தலைப்புக்கு முதலில் செல்லலாம் என நினைக்கிறேன். ஆயிரம்தான் உதாரணங்கள் காட்டினாலும், சொந்த அனுபவத்தின் வாயிலாக உண்மையை அடைவது போல ஆகுமா? ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன். முதலில் நம்பகதன்மைக்காக என்னுடைய சாதியை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
நான் ­­­­­_________ எனும் ஊரில் மாத்வா எனப்படும் கன்னட பார்ப்பன வகுப்பில் பிறந்தவன். சுமார் இரண்டு லட்சம் பேர் கொண்ட ஊரில் மூன்றே குடும்பங்களை கொண்ட ஆகச்சிறுபான்மையிலும் சிறுபான்மை பார்ப்பன சாதி எங்களுடையது.
ஒரு காலத்தில் பல கிராமங்களை சொத்தாக கொண்ட உத்ராதி மடமும், பல நூறு பார்ப்பன குடும்பங்களையும் கொண்ட ஊரில் மற்றவர் அனைவரும் உயர்ந்த வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என அமர்ந்துவிட கடைசியாக மிஞ்சியது எங்கள் மூவர் குடும்பங்களும் உத்ராதி மடமும் மட்டுமே.
எங்களை தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அய்யர், அய்யங்கார் குடும்பங்களும் இங்குள்ளது. என்னதான் பார்ப்பனர்களாய் இருந்தாலும் எங்கள் சாதிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. வருடந்தோறும் நடக்கும் மடத்தின் ஆராதனை விழாக்களின் போது எங்கள் சாதியினர் உணவின் போது முன்வரிசையில் அமர அய்யர், அய்யங்கார்களுக்கு பின் வரிசையில் இடம் கிடைக்கும். இதனாலேயே அந்த சாதியினரில் பலர் மடத்தின் விழாவின் போது வருவதில்லை. நாங்களும் அவர்களின் மடத்தின் விழாக்களுக்கு செல்வதில்லை.
இந்த உணவருந்தும் நிகழ்ச்சியும் பார்ப்பனர்களுக்கானது மட்டுமே, இதில் மற்ற சாதியினர் கலந்து கொள்ள முடியாது. அது மட்டுமின்றி பார்ப்பனர்கள் உணவருந்தும்பொழுது மற்றவர்கள் பார்த்தால் தீட்டாகிவிடுமென்று கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டுவிடும். இது இன்றும் நடைமுறையில் தொடர்கிறது. இதை கண்டு _________யில் யாரும் பொங்கி எழுவதில்லை, என்ன இது பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி பந்தியா என்று…
guiltinessஉணவு அருந்தி முடித்தபின் கர்நாடகாவில் உள்ளது போல் எச்சில் இலையில் உருளும் நிகழ்ச்சியும் நடைபெறும், என்ன வித்தியாசமென்றால் இங்கே உணவருந்துவதும் பார்ப்பனர்கள் உருளுவதும் பார்ப்பனர்கள். உருண்டு முடித்த பின் எச்சில் இலைகள் எடுக்கப்பட்டு தனியாக புதைக்கபட்டுவிடும். காரணம் பார்ப்பனர் உருண்ட இலைகள் புனிதமானவையல்லவா, அவை பிற இலைகளுடன் கலந்து அசுத்தமாகலாமா?
இதே போன்று திருவரங்கத்தில் உள்ள இராகவேந்தர் மடத்திலும் ஆராதனை சமயத்தில் வெளியே சூத்திரர்க்கு ஒரு பந்தியும், பிராமணர்களுக்கு ஒரு பந்தியும் நடக்கும். இதன் தலைமை மடமான மந்த்ராலயத்தில் பிராமணர்களுக்கான பந்தியில் உணவருந்த சென்று அவமான பட்ட கதையை அரவிந்த் மாளகத்தி தனது கவர்மெண்ட் பிராமணன் நூலில் எழுதியிருப்பார். இதையெல்லாம் கண்டு யாரும் கொதித்து கொந்தளித்து தமிழகத்தில் மாத்வர்கள் எனப்படும் சாதியே இருக்க கூடாதென்று அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டார்களா? இல்லையே! எப்போதும் போல் அவர்கள் தீண்டாமையை கடைபிடித்துதான் வருகிறார்கள். இத்தனைக்கும் இது மற்ற பார்ப்பன சாதிகளை போல அதிகார வர்க்கத்தில் அதிகம் பங்கெடுக்காத பார்ப்பன சாதி.
பார்ப்பனன் என்ற ஒற்றை காரணத்துக்காக எந்த அவமதிப்பையும், ஒதுக்கலையும் நானும் என் குடும்பமும் பெற்றதில்லை. இன்றும் கூட சாமி என்றே எனது தந்தை ஊர்மக்கள் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இத்தனைக்கும் என் தந்தை ஆரம்ப நாட்களில் பலகார கடையும் அது நொடித்த பின் பெரும்பாலான நாட்களில் சிறுகடைகளிலும் பணி புரிந்தவர். பார்ப்பன சிறுவன் என்பதற்க்காக தனிமைபடுத்த பட்டதோ, கிண்டல் செய்யப்பட்டதோ, ஒதுக்கப்பட்டதோ இல்லை.
மாறாக நரசிம்மன் எனும் இன்னொரு பார்ப்பன சிறுவனின் வீட்டிற்க்கு சென்ற பொழுதுதான் தனி அலுமினிய குவளையில் நீர் கொடுக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டேன். ஆச்சாரமான அவர்கள் வீட்டில் யார் வந்தாலும் தனிக்குவளை!
மற்ற சிறுவர்களிடமிருந்து பார்ப்பனன் என்ற காரணத்தால் ‘ஒதுக்கப்பட்ட’ சுவையான சம்பவமும் ஒன்று உண்டு. நான்காவது படிக்கும் பொழுது ‘கெட்ட’ வார்த்தை பேசும் குழுவொன்று இருந்தது. அந்த குழுவில் இடம்பெற்று கெட்டவார்த்தைகள் பேச வேண்டுமென்பது என் அவா!
ஆனால்,
“நீயெல்லாம் அய்யருடா, நீ கெட்ட வார்த்தை பேசக்கூடாதுடா” என்று ஒதுக்கப்பட்டேன்.
“ஏண்டா அய்யருக்கு மட்டும் ரெண்டு ________ இருக்கு” என கூறி வலுக்கட்டாயமாக பல கெட்டவார்த்தைகள் பேசி அந்த குழுவுடன் சேர்ந்தது தனிக்கதை. இன்றும் என் பள்ளிக்கால நண்பர்களின் மத்தியில் சிரிப்புடன் நினைவுக்கூறப்படும் கதை இது. அந்த வயதில் பார்ப்பனர்கள் மட்டும் ஏன் தனிப்பட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு புரியவில்லை.
எனது தம்பியின் வாழ்வில் இது போன்று வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. சம்பவம் என்னமோ வேடிக்கையானதாக இருந்தாலும் அதன் முடிவு அத்தனை வேடிக்கையாக இருக்கவில்லை. இது அவன் ஒன்றோ அல்லது இரண்டோ படிக்கும் பொழுது நடந்தது. அவனுடைய சக வகுப்பு தோழன் ஒருவன் வலுக்கட்டாயமாக மீன் குழம்பை எனது தம்பிக்கு ஊட்டிவிட முயன்று, உதடெல்லாம் மீன் குழம்பாகி வீட்டில் வந்து தம்பி அழத்தொடங்க என் அம்மா பள்ளிக்கு சென்று புகார் அளித்தார்.
பின்னர்தான் நடந்தது கொடுமை. ஊட்டி விட்ட பையனை வெளுத்து வாங்கிய வாத்தியார், பின்னர் அந்த சிறுவனை என் தம்பியின் காலிலும் விழச்செய்தார். சிறு பிள்ளையின் விளையாட்டுத்தனமான சேட்டைகளுக்கு இந்த தண்டனைகள் எந்த விதத்தில் சரி?
மாதிரிப் படம்
மாதிரிப் படம்
பார்ப்பனர்களின் ஆச்சாரத்திற்கு ஆபத்து வரும்போது ஏற்படுத்தியவர்களுக்குத்தான் கடும் தண்டனை. பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்வதிலிருந்து, குப்பையை திண்ண சொல்வது வரை பல்வேறு கொடுமைகள் அரங்கேறும் காலத்தில்,அரிதினும் அரிதாகவாவது ஊளைச்சாம்பார் சத்தம் உண்மையில் கேட்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
பள்ளி கல்லூரி காலங்கள் தொடங்கி யாரும் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதில்லை. வளைகுடா நாட்டில் நான் பணிபுரிந்த பொழுது அங்குள்ள அராபியர்களுடன் அவர்கள் வீட்டில் சேர்ந்து உணவருந்தும்போது கூட அவர்கள் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயபடுத்தியதில்லை.
நிலப்பிரச்சனை பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா? எளியவர்களின் சாதாரண நிலங்கள் எங்கும் பிடுங்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார் கொடுக்க வரிசையில் நின்றவர் எத்தனை பேர்?
வன்னிய பெண்களை கூலிங்கிளாசும், ஜீன்சும் போட்டு மயக்குறாங்க என்று இராமதாசு சொன்னது போல, தமிழகத்தின் அத்தனை பொறுக்கிகளும் பார்ப்பன பெண்களாக பார்த்து வம்பு செய்கிறார்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். சாலையில் தனியாக நடந்து செல்லும் அத்தனை சாதி,மத பெண்களும் ஆணாதிக்க பொறுக்கிகளிடம் அனுபவிக்கும் துன்பத்தை பார்ப்பன பெண்களுக்கு மட்டும் மடை மாற்றி விட இலக்கிய குருஜீ ஒருவராலேயே முடியும்.
பெண்கள் மீதான் ஆண்களின் இத்தகைய வக்கிரங்கள் நிகழும் இடங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. அலுவலகம், பேருந்து நிலையம், முகநூல் தொடங்கி ஏன் இலக்கிய உலகம் (சாரு நிவேதிதாவை மனதில் கொள்க) வரை இது தொடர்கிறது. இதையெல்லாம் தனிப்பட்ட சாதியின் பிரச்சனையாக மாற்ற தனித்திறமை வேண்டும்.
லவ் ஜிகாத் புகழ் ஆர்.எஸ்.எஸ்-இடம் ஆரம்ப கல்வி பயின்றவராகையால் ஜெயமோகனக்கு இது எளிதாகவே வருகிறது. சாதி என்பது என் அளவில் அரசியல்வாதிகளுக்கும், பெருந்தொழிலதிபர்களுக்கும் தங்களின் அதிகாரத்தையும், சொத்துக்களையும் பெருக்கி பாதுகாத்து கொள்ள ஒரு வழி அல்லது கருவி. இதில் மயங்கி பலியாகும் அடித்தட்டு வர்க்கத்திற்க்கு எந்த ஒரு பலனும் இதில் இல்லை.
இராமதாசோ, வைகுண்டராஜனோ அல்லது டிவிஎஸ் முதலாளியோ அனைவருக்கும் சாதி என்பது ஒரு கேடயம்தான். சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ்ல் பணி புரிந்ததின் அடிப்படையிலேயெ சொல்கிறேன், பார்ப்பன தொழிலாளர்களுக்கும் பார்ப்பனராய் இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
பார்ப்பனர்கள் வெளியேறுகிறார்களா?
ஆமாம், அவங்க ஊரை காலி பண்ணி போய் ரொம்ப காலமாச்சு. பொழைக்க தெரியாத வழியில்லாத சில பேருதான் ஊர்ல இருக்காங்க. பீகார்ல இருந்தும் உ.பியில இருந்தும் ஏதோ பொழைக்க முடியமா தமிழ்நாட்டுக்கு வந்த மாதிரியில்ல சொல்றாரு அவரு. போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லாதானே இருக்கான், ஏதோ அஞ்சுக்கும் பத்துக்கும் கல்லு உடைக்குற மாதிரியில்ல இருக்கு ஜெயமோகன் சொல்றது. நான் கூட வளைகுடாவுலயும் இப்போ வேறு ஒரு வெளிநாட்டிலும் இருக்கேன்.
இதுக்கும் காரணம் திராவிடச்சதியா? இன்றைய உலகமயமாக்கல் இப்படித்தான் தொழிலாளர்களோட வாழ்வை சூறையாடுது, இதுல பார்ப்பனர்கள் படுற பாடு ரொம்பவும் குறைவுதான். எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல இருந்து மற்ற சாதி மக்கள் நிறைய பேரு கேரளாவுக்கும் குஜராத்துக்கும் போறாங்க கூலி வேலைக்கு. சுகந்திரமடையுறதுக்கு முன்னாடி தென் ஆப்ரிக்காவுக்கும், மொரிஷியசுக்கும் கூட தமிழன் அடிமையா போனான். ஒருத்தன் பொழைக்கவே வழியில்லாம போறான், இன்னொருத்தன் தன் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்க போறான். இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒன்னுனு சொன்னா எதால சிரிக்கனு தெரியலை.
பண்பாட்டு அடையாளம்
எங்கள் குடும்பத்திற்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க ஆரம்பித்ததே இது போன்ற சிறப்பு பூசைகள் செய்யும் பொழுதுதான். என் அம்மாவின் பூசையினால் மாமி ரொம்ப பக்தியானவுங்க என்று எங்கள் தெரு முழுவதும் பெயர் வேறு. அந்த மரியாதையும் பெயரும் மொத்தமும் சரிந்தது, நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொழுதுதான்.
தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது. பிரதோசம் என்றால் என்னவென்ற தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்றோ எல்லா சிவன் கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. அட்சய திரிதியை தொடங்கி பல்வேறு பார்ப்பன பண்பாட்டு புரட்டுகள் மக்களின் பர்சை சூறையாடி கொண்டிருக்கிற காலகட்டத்தில் எங்கே ஐயா பார்ப்பனியம் தன் பண்பாட்டு அடையாளத்தை இழந்தது?
குமுதம், விகடன் தொடங்கி தினமலர்,தினத்தந்தி வரை ஆன்மிக இதழ் போட்டு பக்தியை காசாக்கும் காலமிது. பார்ப்பனிய பண்பாட்டையே அனைவரின் பண்பாடாய் நிறுத்தும் இவ்விதழ்களின் காலத்தில் ஸ்ரீராம நவமியை பார்த்து சிரிப்பது யார்? ஒருவேளை அவரது நாத்திக நண்பர் கமலஹாசனாய் இருக்குமோ!
பார்ப்பனர்களும் அதிகாரமும்
selfசட்ட சபையிலேயே தான் ஒரு பார்ப்பனத்தி என அறிவித்து கொண்ட தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வரென சங்க பரிவாரங்களால் போற்றப்படும் ஜெயாவின் காலத்திலா இப்படி ஒரு அசட்டுத்தனமான ஆதங்கம்? தமிழ்நாட்டுக்கு ஒரு மாமி டெல்லிக்கு சுப்பரமணிய சாமி. மத்தியிலும் மாநிலத்திலும் பார்ப்பனியத்தின் ஆட்சிதானே பிறகென்ன மீண்டும் அதிகாரமில்லை என்ற ஒப்பாரி!
அருந்ததிராயின் சமீபத்திய கட்டுரையான இந்தியாவின் இழிவு கட்டுரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்வந்சிங் எழுதியதை மேற்கோள் காட்டியிருப்பார். நண்பர்களையும் தோழர்களையும் மீண்டுமொருமுறை நிதானமாக இக்கட்டுரையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் நீதித்துறையிலும் ஊடகங்களிலும் பார்ப்பனர்களின் செல்வாக்கு எப்படி மேலோங்கி இருக்கிறது என்று விளக்கியிருப்பார். அதிகாரத்திலும் உயர்பொறுப்பிலும் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்கும் உண்மை இவ்வாறிருக்க அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல துரத்தப்படுகிறோம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
வினவை தொடர்ச்சியாக படித்து வரும் வாசகன் என்ற முறையிலே கடைசியாக சொல்வது இதுதான், பார்ப்பனர்களை மட்டுமல்ல தேவர் வன்னியர் உள்ளிட்ட இடை நிலை சாதிகளைகளை எதிர்த்தும் அவர்களின் வெறியாட்டத்தின் போது பகிரங்கமாக சாதியின் பெயரை சொல்லி கண்டித்தும் போராடுவது புரட்சிகர அமைப்புகள்தான்.முத்துராமலிங்கம் மீதான விமரிசனம் தொடங்கி தர்மபுரி இளவரசன் முதல் உசிலம்பட்டி விமலாதேவி வரை பல கட்டுரைகள் வினவில் உள்ளன.
திருவையாறு போராட்டங்களை குறித்து கீழைக்காற்று நூலான இசை,போதை, பொழுதுபோக்கு- நூலில் விரிவான கட்டுரைகள் உள்ளன. அறிவு நாணயமிருந்தால் ஜெயமோகன் அதற்க்கு முதலில் பதில் சொல்லட்டும். தமிழை நீச மொழியாக்கி மேடை ஏறவிடாத திருவையாறும், கன்னட ஒக்கலிக்கர் மாநாடும் ஒன்றா?
கலைஞருக்கும்,செயலலிதாவுக்கும்,ராகுல்காந்திக்கும் கருப்பு கொடி காட்டி அடியும் உதையும் பெற்று சிறையும் சென்றவர்கள் எம் தோழர்கள். மொழி,இன வெறியை எதிர்த்து வர்க்க அடிப்படையில் வட மாநில தொழிலாளர்களை ஆதரிப்பதும் எம் தோழர்கள். இவை அனைத்திற்க்கும் ஆதாரம் வினவிலேயே உள்ளது, படித்து பார்த்து பின்னர் வழக்கம் போலதன் அகஒளி தரிசனத்தின் வாயிலாக இந்தியாவை தகர்க்க சீன சதி என ஜெயமோகன் தாரளமாய் அவதூறு எழுப்பலாம்.
தோழமையுடன் வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக