செவ்வாய், 16 டிசம்பர், 2014

Cyber Crime இந்தியாவுக்கு 24,000 கோடி இழப்பு: ரிசர்வ் வங்கி பெயரிலேயே போலி வலைதளம்

புதுடில்லி : வலைதளங்களில் ஊடுருவி பண மோசடி செய்யும் குற்றவாளிகளால், கடந்த ஆண்டு, இந்திய நிறுவனங்கள் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது, இந்தாண்டு, 31 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று மதிப்பிட்டுள்ளது.தனி நபர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி, மோசடி செய்து வந்தவர்களின் பார்வை, இப்போது பெரிய நிறுவனங்கள் பக்கம் திரும்பியுள்ளது.சில்லரை திருட்டை விட, நிறுவனங்களை ஏமாற்றி, கோடி கோடியாக அள்ளலாம் என, மோசடி பேர்வழிகள் நினைக்கின்றனர்.இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க அது தான் காரணம்.நைஜீரியா மோசடி எனப்படும் இத்தகைய குற்றங்களுக்கு, வங்கி கணக்கு விவரங்களை கணினியில் திருடி விற்கும், 'ஹாக்கர்ஸ்' எனப்படுவோர் துணை புரிகின்றனர்.பெங்களூருவில், ஐ.டி., நிறுவனமொன்றின், 1,000த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டுள்ளன.இதற்கு, அந்நிறுவனத்தின் கணினி பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.


இதுபோன்ற, வலைதள அச்சுறுத்தல்களை சமாளிக்கக் கூடிய அளவிற்கு, இந்திய நிறுவனங்கள் தயாராகவில்லை. அவை, பழைய கட்டமைப்பிலேயே இயங்கி வருவது, மோசடி செய்வோருக்கு சாதகமாக உள்ளதாக, கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.மோசடிகளை தடுக்க, கணினி ஒருங்கிணைப்புக்கான பாதுகாப்பை நிறுவனங்கள் பலப்படுத்த வேண்டும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியைப் போல், போலி வலைதளத்தை உருவாக்கி, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதும் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து, ''தனி நபர்களுடன் எந்த வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை; இது போன்று வரும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம்,'' என, அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன், வதோதராவை சேர்ந்த ஒரு நிறுவனம், தான் அனுப்பிய பொருட்களுக்கான பணத்தை வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளது.அதற்கு, அவர், மலேசியாவில் உள்ள புதிய வங்கி கணக்கில், பணம் செலுத்துமாறு நிறுவனம் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், அதன்படியே அத்தொகை போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம், மோசடி மின்னஞ்சல் மூலம் பணம் பறித்த பேர்வழி குறித்து, போலீசில் புகார் தெரிவித்துள்ளது. அண்மையில், ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு, அவரது ஐரோப்பிய பயண டிக்கெட்டுகள் ரத்தான தகவல் வந்துள்ளது.உடனே அவர், தமது மின்னஞ்சலை திறந்து பார்க்க முயன்றபோது, அது, கணினி நாசக்காரர்களால் முடக்கப்பட்டது தெரியவந்தது.மறுநாள், அவரது மின்னஞ்சல் முகவரியில் இருந்து, தென்னாப்ரிக்க வங்கிக்கு, 20 கோடி ரூபாய் அனுப்புமாறு, நிறுவனத்தின் நிதிப் பிரிவிற்கு, தகவல் போயுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக