செவ்வாய், 16 டிசம்பர், 2014

நரபலிகள் கொடுத்த பி ஆர் பி கிரானைட்உரிமையாளர் பழனிசாமி ! சகாயத்திடம் கண்ணீர் விட்ட போலீசார்:

மதுரை : கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக, மதுரையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் விட்டனர். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் நேற்று 2வது கட்ட விசாரணையை துவக்கினார். அவருடன் சென்னை அறிவியல் நகர மூத்த விஞ்ஞானிகள் ஹேமா, தேவசேனாபதி வந்திருந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, குவாரி உரிமையாளர்கள் அபகரித்ததாக பாதிக்கப்பட்டோர் கண்ணீர் விட்டனர்.அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் விஜயாள், சாந்தி, மைக்கேல் ஜெரால்டு, கான்ஸ்டபிள் வசந்தி: புதுதாமரைபட்டியில் போலீசாருக்கு அப்போதைய கமிஷனர் ஜாங்கிட் ஏற்பாட்டில் வீட்டு மனை கிரையத்திற்கு வழங்கப்பட்டது. நாங்கள் ரூ.35 ஆயிரத்திற்கு தலா ஒரு பிளாட் பெற்றோம். அந்த நிலங்களை பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தினார் மிரட்டி ரூ.55 ஆயிரம் வழங்கி வாங்கி கொண்டனர்.இறந்த ஏட்டு நரசிம்மன் மனைவி சுந்தரம்மாள்: என் கணவர் புதுதாமரைப்பட்டியில் வீட்டு மனை வாங்கினார். அவரது ஓய்வு பணத்தில் வீடு கட்ட திட்டமிட்டு செங்கல், மணல் இறக்கி விட்டோம். வீடு கட்ட விடாமல் குவாரி நிறுவனத்தினர் கற்களை கொட்டி ஆக்கிரமித்தனர். மனமுடைந்த கணவர் இறந்து விட்டார்.  அப்போதைய கமிஷனர் ஜாங்கிட்.........இவருக்கு முதல் தொழிலே "Builder Promoter '.Real estate ..business தான் சென்னையில் உள்ளோருக்கு நன்கு தெரியும்..குழந்தையை கேட்டால் கூட சொல்லும்..எப்படி 'இன்னும்' மாட்டாமலிருக்கிறார்?


எஸ்.மணி, கீழவளவு: அடஞ்சான்கண்மாய் செல்லும் பாதையை குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து கொண்டனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாராயணப்பா, காளைநெட்டி: கிரானைட் குவாரி குறித்து விசாரணை கமிஷனில் புகார் செய்தேன். இதனால் மோசடி செய்தவர்கள் என்னை கடத்தி தாக்கினர்.

செல்வம், கீழவளவு: நான் இடங்களை வாங்கி விற்கும் தொழில் செய்தேன். குழிச்சேவல்பட்டியில் காரைக்குடி கண்ணப்பசெட்டியார் குடும்பத்தினரிடம் ரூ.75 லட்சத்திற்கு 44 ஏக்கர் நிலத்தை கிரையம் ஒப்பந்தம் செய்தேன். இந்த நிலங்களை ரூ.3 கோடிக்கு பி.ஆர்.பி., கிரானைட் பங்குதாரர் முருகேசனுக்கு பேசி முடித்தோம். அவர் ரூ.ஒரு லட்சம் முன்பணம் கொடுத்தார். எனக்கு தெரியாமல் முருகேசன் நில உரிமையாளர்களிடம் கிரையம் பதிவு செய்தார்.

ஜெயராமன் மற்றும் அகிலன், மேலூர்: மாவட்டத்தில் நீர் நிலை ஆதாரங்களை ஆக்கிரமித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கொள்ளையர்கள், பல மாவட்டங்களில் இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். தலையாரி முதல் மாவட்ட கலெக்டர்கள் வரை அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

கருப்பையா, தலித் விடுதலை இயக்கம்: மேலூர் தாலுகாவில் 827 தலித் குடும்பங்களுக்கு சொந்தமான 2,522 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலங்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும்.

சோமசுந்தரம், நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம்: கிரானைட் ஊழல் வழக்கில் தொடர்புள்ள வாகனங்கள், ஆவணங்கள் கோர்ட்டிலிருந்து குவாரி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கலாகவில்லை. பினாமி பெயரில் பல மாவட்டங்களில் கிரானைட் குவாரிகள் நடக்கின்றன.

சுந்தரம், காதக்கிணறு: மாணிக்கம்பட்டியில் கல் குவாரி நடத்தும் தி.மு.க., மாவட்ட செயலாளர் மூர்த்தி விதிகளை மீறி ஜல்லிகற்களை அள்ளி வருகிறார்.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இயங்கும் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும்.

எஸ்.ரவி, புதுதாமரைபட்டி: நான் குவாரியில் வேலை செய்து வந்தேன். 2008ல் ரவி என்பவரது குழந்தை கோபிகாவை காணவில்லை. கால்வாயில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. குவாரியில் பணி செய்தமையால் குவாரிக்கு நரபலி கொடுக்கப்பட்டதாக எண்ணி, என்னை கைது செய்தனர். இதில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்கள் அளித்தனர்.

நேற்றுமட்டும் 84 மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை 224 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சகாயம் மனுதாரர்களிடம் உறுதியளித்தார். நேற்று மாலை குவாரி முறைகேடு புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை நீர் ஆதார செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், கோட்டாட்சியர் செந்தில்குமாரி மேலூர் தாசில்தார் மணிமாறன் மற்றும் 10 கிராம ஆர்.ஐ.,க்கள், தலையாரிகளிடம் சகாயம் விசாரணை நடத்தினார். விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு, நீர் ஆதாரங்கள் அழிப்பு, வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு போன்றவை குறித்து ஆவணங்களை ஆய்வு செய்து விசாரித்தார். இன்று(டிச.,16) காலை 11 முதல் மதியம் 1 மணிவரை மனுக்கள் பெறுகிறார்.வேளாண் துறைக்கு சகாயம் உத்தரவு: மதுரை மாவட்டத்தில் 2000 லிருந்து தற்போது வரை குவாரிகளால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வேளாண்துறைக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார். புதிய குவாரிகளில் நரபலி: கீழவளவு கம்பர்மலைப்பட்டி நீர் வள பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத் துணை தலைவர் சேவற்கொடியோன் வழங்கிய மனு: கீழவளவு பி.ஆர்.பி., கிரானைட் குவாரியில் 1998 முதல் 2003 வரை டிரைவராக வேலை செய்தேன். அப்போது வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தலித் ஏழைகளை நரபலி கொடுத்தனர். அவர்களை அழைத்து வரும் ஏஜன்ட்கள் மூலம் அவர்கள் விபத்தில் இறந்ததாக தெரிவித்து விடுவர். இதில் பிரச்னை ஏற்பட்டதும் ரோடுகளில் திரியும் வெளிமாநில மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து புதிய கிரேன், குவாரி, மணல் அள்ளும் இயந்திரம் துவக்கும் போது நரபலி கொடுப்பர் என கூறியுள்ளார். இதுபோல கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து பலர் மனுக்கள் கொடுத்தனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக