வெள்ளி, 26 டிசம்பர், 2014

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள்! இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்கும்?


எங்க மாவட்டங்கள்ல் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூரா மத்தவங்களை மிருகத்தனமா  துன்புறுத்துறாங்க.
அன்பு வினவு நண்பர்களுக்கு, வணக்கம்என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.
சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.
கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.

அது பார்க்க ரொம்ப அழகான அப்பார்ட்மெண்ட். சிங்கிள் பெட் ரூம் என்றாலும் வெளியே டு வீலர் பார்க்கிங், குழந்தைகள் விளையாட வசதி, காற்றோட்டமான குடியிருப்பு, எங்க பட்ஜெட்டுக்கு ஏத்த வாடகைன்னு எல்லாம் பொருந்தி வந்தது.
எங்களுக்கு பூர்வீகம் தென்மாவட்டம். அங்க இருக்கும் மக்கள் மாதிரி அன்னியோன்யமாய் இல்லாட்டாலும் இங்கேயும் ஓரளவுக்கு நல்லாத்தான் பழகுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆரம்பத்தில் அப்பார்ட்மெண்ட் பெண்கள் சினேகமாக சிரிச்சாங்க. என்ன ஏதுன்னு பொதுவா பேசிக்குவாங்க. சரி நல்லாத்தான் போகுதுன்னு நினைச்சேன். ஆனா அது கொஞ்ச நாளைக்குத்தான்.
எங்கள் அப்பார்ட்மெண்டில் 30 வீடுங்க, மூன்று ஃபுளோரில் இருக்கு. தரை தளத்துல முகப்பு கேட்டுக்கு உள்புறம் அழகான குரோட்டன்ஸ் செடியெல்லாம் நிறைய வச்சருந்தாங்க. ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு கிளம்பிய போது எதிர்த்த வீட்டு அம்மா நிறுத்தி கேட்டார்.
brahmin“பூச்செடி நன்னா வளரணுமுன்னு, மீன் கழுவுன தண்ணியெல்லாம் ஊத்றேளாமே”!?”
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. மீன் கழுவன தண்ணியை சிங்குல ஊத்தாம பூச்செடிக்கு ஏன் ஊத்தப்போறேன்?
“யார் சொன்னாங்க மேடம்” திருப்பிக் கேட்டேன்.
பக்கத்து வூட்டு மாமிதான்ன்னு அந்த அம்மா சொன்னாங்க. சரி அவுங்ககிட்ட கேக்குறேன்னு எரிச்சலுடன் சட்டுனு திரும்பினேன். உடனே அந்த அம்மா இல்லையில்லை அப்படி சட்டுபுட்டுன்னு கேக்காதீங்கோ, சும்மா இட்டுக்கட்டி சொன்னதாக்கும், மீன் தண்ணியெல்லாம் அங்க ஊத்தக் கூடாதுன்னு சொல்ல வந்தேன்னு சொன்னாங்க.
இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பாங்க! இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே அப்ப புரியல. கொஞ்ச நாட்களல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்.
அங்க இருக்குறவங்க யார், என்ன சாதின்னு ஆரம்பத்துல தெரியாது. அது தேவையுமில்லை. என்னென்ன வெலை பார்க்குறாங்கன்னு மட்டும்தான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தைகள் என் குழந்தையோட விளையாட வீட்டுக்கு வருவாங்க. ஆனா அந்த அப்பார்ட்மெண்டுல என்னமோ கண்ணுக்குத் தெரியாத பிரிவினை, என்னண்ணு சொல்லத் தெரியாத ஒரு அலர்ஜி இதையெல்லாம் நானே கொஞ்ச நாள்ல உணர்ந்தேன். கணவருக்கும் இதே மாதிரி சில அனுபவங்கள்.
அப்பார்ட்மெண்டுல 20 வீடுகள்ள பிராமிண்ஸ் இருந்தாங்க. ஐஞ்சு வீடு நான்-பிராமின்ஸ், மூன்று வீடுகள்ள கத்தோலிக்ஸ், இரண்டுல நார்த் இன்டியன்ஸ் இருந்தாங்க. எங்க வீட்டுல ஜீசஸ், மாதா படங்கள பார்த்துட்டு ஆரம்பத்திலேயே நாங்க இன்னாருன்னு அவங்க கண்டு பிடிச்சிருப்பாங்க போல. மதம் மட்டுமில்ல, சாதியும் அவுங்களுக்கு முக்கியமில்லையா?
தூத்துக்குடியா, தூத்துக்குடியில எங்க-ன்னு ஆரம்பிச்சு தெரு, டோர் நம்பர் வரைக்கும் போவாங்க. இதுதான் நோக்கமான்னு தெரிஞ்சாச்சு, பிறகு எதுக்கு தயக்கம்? நான் மீனவர் சமுதாயம், கணவர் நாடார்னு ஒரே போடா போட்டுருவேன். இப்ப நடுத்தர வர்க்கமா மாறினாலும் ஒரு மீனவச்சிக்கு இருக்கும் சுயமரியாதை எங்கிட்ட நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்.
அவங்களுக்கு கருவாட்டு சாதி பிடிக்காதுன்னாலும் எங்களோட மாறிப்போன வர்க்கம் காரணமா சகிச்சுக்கிட்டாங்க போல. இது மேலும் எனக்கு அறுவெறுப்பை உண்டாக்கிச்சு.
பிராமின்ஸ் வீடுகள்ள இருக்கும் குழந்தைங்க எங்க வீட்டுக்கு எப்பவாச்சும் வருவாங்க, சாக்லேட், பாக்கட் சிப்ஸ் கொடுத்தா சாப்பிடுவாங்க. பரவாயில்லயே நல்லாத்தானே பழகுறாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சேன். பிறகு பார்த்தா அவங்க பேக்டு ( உறை போட்ட) உணவு மட்டும்தான் சாப்பிடுவாங்க, வடை, பணியாரம்முனு இதர பதார்த்தங்கள கொடுத்தா நாசுக்கா தவிர்ப்பாங்க. ஒருநாள் ஏன் என்னென்னு கேட்டப்பிறகுதான் சொன்னாங்க. நம்ம கைபட்ட பதார்த்தம் அவங்களுக்கு தீட்டாம். அதே மாதிரி தண்ணியும் குடிக்க மாட்டாங்க. இதெல்லாம் அந்த குழந்தைங்க சரளமா செய்யுறதப் பாத்து எனக்கு இன்னும் அதிர்ச்சி. எப்படியெல்லாம் டிரெயினிங் கொடுத்துருக்காங்க!
மாசத்துக்கு ரெண்டு நாளாவாது முழு அப்பார்ட்மெண்டையும் கழுவி ஊத்துவாங்க. ஏதோ பிரதோஷம், இன்னும் வாய்க்குள் நுழையாத சடங்கு சாஸ்திரமுன்னு சொல்லி தண்ணி இல்லாத ஊருல வெள்ளமா ஊத்துவாங்க. காலைல ஸ்கூலுக்கு கிளம்பும் போது இவங்க ஊத்துண தண்ணியல விழாம கவனமாக பாத்துப் போகணும். மற்றவர்களுக்கு இப்படி இடையூறு செய்யுறமேன்னு கொஞ்சம் கூட நினைக்கமாட்டாங்க.
rentஇவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான் கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. காலையில் வேலைக்கு வந்தா அப்பார்ட்மெண்ட் வெளி கேட்டுக்கு பக்கத்துல செருப்பை கழட்டிவிட்டுத்தான் இந்த பெண்கள் வரணும். இவங்க சமையலறையில அந்த பெண்கள் நுழைய கூடாது. பாத்திரங்களையெல்லாம் குளியலறையில்தான் கழுவணும். பழையது, மிஞ்சனதெல்லாம் யூஸ் அண்ட் த்ரோ டப்பாக்களில்தான் கொடுப்பாங்க.
அவங்க குழந்தைங்க எங்க வீட்டுக்கு வர மாதிரி (அதுலயும் நிறைய கட்டுப்பாடு) என் குழந்தை அவங்க வீட்டுக்கு போக மாட்டான். இது குழந்தை தன்மையிலேயே அவனே தெரிஞ்சிக்கிட்ட விசயம்கிறதால பல நாட்கள் நான் உடைஞ்சு போயிருக்கேன். குழந்தைங்கள விடுங்க, நாங்களே ஒரு ஆத்திர அவசரத்துக்கு அவங்க வீட்டுக்கு போயி மணிய அழுத்துனா வீட்டு ஜனங்க அத்தன பேரும் வாசலை மறிச்சுக்கிட்டு என்ன, என்னன்னு கேப்பாங்க. எதா இருந்தாலும் வாசலிலேயே பேசி முடிச்சிக்கலாம், வீட்டுக்குள்ள என்ன வேலைங்குற மாதிரி இருக்கும்.
வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு சொல்லி பழகுனவங்களுக்கு இது ரொம்ப நெருடலா இருக்கும். ஒரு முறை நான் சொன்ன நான் – பிராமின் குடும்பத்துல ஒருத்தங்க பொங்கலுக்கு அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் ஏரியாவுல ஒரு ஓரத்துல கோலமெல்லாம் போட்டு, அடுப்பு மூட்டி பொங்கல் சமைச்சாங்க. பொங்கலோ பொங்கல்னு குழந்தைகள் கும்மாளமும் வேடிக்கையுமா இருந்தது. பிறகு ஆளுக்கொரு இலையில பொங்கல கொடுத்து சாப்பிடச் சொன்னாங்க. பிராமண குழந்தைங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஸட்ரக்சனை மறந்துட்டாங்களான்னு தெரியல, சாப்பிட்டாங்க. என்ன இருந்தாலும் குழந்தைங்க இல்லையா!
பிறகென்ன நான்கைந்து வீடுகள்ள கதவ சாத்திட்டு அடி உதை, எதுக்கு சாப்பிட்டேன்னு! பொங்கல் போட்ட அந்த பெண் அவ எனக்கும் தோழிதான், இத கேட்டு அவங்கிட்ட போய் சண்டை போட்டா! நீங்க குழந்தைங்கள ஆச்சாரமா வளர்க்கிறதா இருந்தா வீட்டுக்குள்ள பூட்டி வச்சு வளருங்க, எங்க்கிட்ட வந்தா இப்படித்தான் பொங்கல கொடுப்போம், அதை மறைச்ச வைச்சு சாப்பிடுற பழக்கம் எங்களுக்கு இல்லேன்னா.
கத்தோலிக்ஸ் பொதுவா பொட்டு, பூவெல்லாம் வைப்பாங்க. எனக்கு அது விருப்பமில்லேன்னாலும் எப்பவாச்சும் வைப்பேன். அப்ப முறைச்சு பாப்பாங்க. ஒரு நாள் தலை குளிச்சிட்டு சாம்பிராணி போட்டேன். உடனே வெளிய வந்து நீங்களெல்லாம் சாம்பிராணி போடுவேளான்னு கேட்டாங்க. வந்த புதிசில் என் கணவர் வேட்டியுடன் சென்ற போது நீங்களெல்லாம் வேட்டி கட்டுவேளான்னு கேட்டாங்க. அவரோ நாங்க மட்டும்தான் வேட்டி கட்டி பழக்கமுணு சொன்னாரு.
இது மாதிரி சின்ன விசயங்கள் நிறைய இருக்கு. எதுக்கு சொல்றேன்னா இதெல்லாம் அவங்களுக்கு பாத்தியப்பட்ட சமாச்சாரங்கள்னு ஒரு நினைப்பு. குங்கும பொட்டு வைக்காதது, வகிடெடுத்து பொட்டு வைக்காதது, மஞ்சள் பூசி குளிக்காதது இதெல்லாம் அவங்க கருத்துப்படி ஒழுக்கமில்லாத பெண்களோட குணம்.
அந்த பிராமின் வீடுகள்ள ஒருத்தரு ஏதோ சில கோவில்கள்ல ஐயரா இருக்காரம். அவரு செல்போன், பைக்குனு அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு சேரைப் போட்டு உக்காருவாங்க. ஒரு பெண்ணா எனக்கு அது பயங்கர கூச்சமாவும், வெறுப்பாவும் இருக்கும். மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க. வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க. இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!
kanchiபிராமின் வீட்டு பசங்க எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறாங்க. என்னோட பையனை ஸ்டேட் போர்டு பள்ளிக்கூடத்துல அதுவும் சாதாரண மக்கள் படிக்கும் பள்ளின்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு நாசுக்கா ஆனா ரொம்ப கீழா பேசுவாங்க. அங்க படிக்கிற பிள்ளைங்களெல்லாம் மக்காச்சே, சிபிஎஸ்இ இல்லேன்னா பியூச்சர் பாழாச்சே, மத்த படிப்பெல்லாம் வேஸ்ட்டாச்சேன்னு இதுதான் அல்டிமேட் உண்மை போல பேசுவாங்க. அதே மாதிரி வெளிய போனா உடுப்பி, கிராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன்னு ரொம்ப ஆச்சாரமான சைவக் கடையா பாத்துத்தான் சாப்பிடுவாங்க!
இதன் மறுபுறமும் உண்டு. தள்ளு வண்டியில் வரும் கடைக்காரர்களிடம் இவர்கள் பேரம் பேசும் சித்ரவதைய தனியா சொல்லணும். பத்து ரூபாய்க்கு ஐந்து விதமான காய் வாங்கி அதில் ஐம்பது காசு மிச்சம் பிடிக்க பிளான் பண்ணுவாங்க. காய்க்காரரிடம் வத்தலும், தொத்தலுமாய் இருக்கே, என்னா இவளோ ரேட்டு என்று ஆரம்பித்து நாலணா, எட்டணாவுக்க்கு உலக அரசியலே பேசுவாங்க. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசும் அந்த வியாபாரிகள் இவர்களை மட்டும் ஜன்ம எதிரி போல நடத்துவாங்க. ஆனால் அவர்களுக்கிடையே தினமும் வியாபாரம் நடந்துதான் வருகிறது.
எங்கள் அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் மின்வாரியம், தலைமைச் செயலகம், இன்சூரன்சுன்னு பல அரசு, தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் வாழ்றவங்கதான். ஆனா பாத்தீங்கன்னா ரேசன் பொருட்கள் ஒன்று விடாமல் வாங்கி வருவாங்க. அதில் பொங்கல் இலவச வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் கூட அடக்கம். நாங்களெல்லாம் ரேசன் கடைகளில்தான் கால்வயிற்று கஞ்சியுடன் வளர்ந்து ஆளானவங்கதான். ஆனா இன்னைக்கு ஒரு நடுத்தர வர்க்க வாழ்வு கிடைத்ததும், வறுமைக் கோடுக்கு கீழே இருக்கும் மக்களின் பங்கை நாம எடுக்க கூடாதுங்கிறதெல்லாம் யோசிக்காமலே செய்கிறோம். அவங்களோ எந்த குற்ற உணர்வும் அடையறதில்லை.
இவங்களோட ஆச்சார அனுஷ்டாங்களாவது உண்மையான்னு பார்த்தால் அது இன்னும் போலியா இருக்கும். ஒரு வீட்டில் கையில் ஏதோ ஜபமாலை வைத்துக் கொண்டு எதிரில் குட்டி ஹோமம் மாதிரி ஒன்றில் (நெருப்பு கிடையாது) ஏதோ எடுத்து போட்டு கொண்டிருப்பார் ஒருவர். எதிரில் ஷேர் மார்கெட் சானல் ஓடிக் கொண்டிருக்கும். அதுல ஷேர் விலைகளை பாத்துகிட்டு இங்கே மந்திரம் ஓதிகிட்டு………எப்படி இது?
எங்களைப் போன்ற பின்தங்கிய சமூகத்தின் முதல் தலைமுறை அறியாத பங்கு மார்கெட்டெல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடி. இதர வருமானங்களை இதற்கென்றே ஒதுக்கி பணம் சேர்க்கிறார்கள். அதில் கோவில் பூசாரியாக இருக்கும் ஐயரும் உண்டு. பிராமண வீட்டு பெண்கள் பகலில் எல்லா சேனலிலும் சீரியல் பாப்பாங்க. கைகளில் இருக்கும் நோட்டுக்களில் ராம மந்திரமோ ஏதோ ஒன்றோ எழுதிக் கொண்டே இருப்பார்கள். இதுல எது உண்மை?
Kalady Avani Avittamகோடைகாலத்தில் தண்ணீரில்லை, தினமும் ஒரு குடிநீர் லாரி நிரப்ப வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் சேர்த்து மெயின்டெனன்சுக்கு மொத்தம் 2000 ரூபாய் வாங்கினார்கள். என் கணவர் யதேச்சையாக வாச்மேனிடம் தினமும் லாரி வருகிறாதா என்று கேட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது என்று அவர் சொன்னார். அவருக்கு பிறகு வந்த புது வாச்மேனோ குடிநீர் லாரி வாரத்துக்கு ஒரு தடவைதான் வருகிறது என்றார். ஆத்திரமடைந்த கணவர் அங்கேயே இவர்களை திட்டி விட்டு சென்றார். அடுத்த நாள் அந்த வீட்டு பெண்கள் என்னிடம் வந்து குழந்தைங்க ஸ்கூலுக்கு போகும் போது திட்ட வேண்டாமென கேட்டுக் கொண்டார்கள். இது என்னன்னு சொல்ல?
அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர், செயலர், பொருளாளர் எல்லாம் இவங்கதான். அனேகமா பிரமாணரல்லாதோரிடம் மட்டும்தான் அவங்க அதிக பணம் வசூலிக்கிறாங்க. அதை வைத்து அப்பார்ட்மெண்ட் கிளீனிங் இதர செலவு என்று அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை இலவசமாக வேலை செய்ய வைக்கிறாங்க. இந்த டெக்னிக்கெல்லாம் எங்கேயும் பாக்கவே முடியாது.
இப்போது என் குழந்தை இந்த சூழலில் ஒன்ற முடியாமல் தனியா தவிக்கிறான். அவனோட உலகில் இது ஒரு பொதுவிதி போல புரிந்து கொள்ளப்படுது. பிராமண வீட்டு குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல ஏதாவது கெட்ட வார்த்தை பேசினாலும் அதில் பெரிய வித்தியாசம் இருக்கு. மற்றவர்கள் பேசுவது பிடிவாதம், அடம், சேட்டை என்று மட்டும் போகும். இவர்களோ தங்களது ஏசுதலில் ஒரு போலிஸ்காரரது தோரணையோடு அதிகாரமாக திட்டுவாங்க. அதாவது மற்ற குழந்தைகளெல்லாம் இவர்களை விட கீழே என்பதா அந்த தொனி இருக்கும்.
முக்கியமான ஒன்று உண்டு. இந்த குடியிருப்பில் பிராமண உரிமையாளர்கள் வீடு விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது பிராமணர்களுக்கு மட்டும்தான். ஏழெட்டு பிராமணரல்லாதோருக்கு சொந்தமான வீடுகளில் மட்டும் எங்களைப் போன்றோரை குடி வைக்கிறாங்க.
உங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.
எங்க அப்பார்ட்மெண்ட விடுங்க. கணவர் வேலைபார்க்கும் சிறுசேரி ஐடி கம்பெனிய எடுத்துக்கங்க. இங்க மேனேஜர் லெவலில் இருக்கிறவங்கள்ல 90 சதவீதம் பிராமணருங்கதான். இதெல்லாம் எப்படி மத்தவங்களுக்கு தெரியும்?
ஆவணி அவிட்டம்முனு ஒரு நாளில்தான் பிராமணர்கள் பூணூல் மாத்துறாங்களாம். அதுக்கு அவங்க அத்தனை பேரும் விடுமுறை எடுப்பாங்களாம். அப்படி எடுக்கும் போது உங்களுக்கும் அவிட்டமான்னு சக பிராமண மனிதர்களை அடையாளம் கண்டு கொள்றாங்க. போலவே மத்த டெக்கிசுக்கும் நம்ம ஆபிசுல, டீம்ல யாரு பிராமின், நான் பிராமின்கிறது தெரிஞ்சு போகும்.
இப்படி சொல்லலாம்ணு தோணுது. பிராமணர்கள் மத்த சாதிக்காரங்கிட்ட என்ன சாதின்னு கேட்டு தெரிஞ்சுக்குவாங்க, பிராமணங்க மட்டும் என்ன சாதின்னு அவங்களே சொல்லுவாங்க.
கணவரு ஆபிசில் ஒரு பிரமாண பெண் மேனேஜர் ஆன்சைட்டுக்கு போன கணவருடன் சேர அமெரிக்கா போறாங்க. அங்க சைவ உணவு சரவண பவன் எங்க இருக்கமுணு பாத்து வீடு பார்க்கிறாங்க. அதிலயும் கருப்பர்கள் இல்லாத வெள்ளையினத்தவர் மட்டும் வாழும் குடியிருப்பா பாத்து போறாங்க. இதுக்காக அவங்க டீமே ஒரு நாள் இணையத்துல கூகிள்ள தேடிப் பாத்தாங்களாம்.
பிரதமரா மோடி ஜெயிச்சதோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைச்சதோ இந்த ஐ.டி துறை பிராமணர்கள் பகிரங்கமாக ஆபிசுல கூடி கொண்டாடியிருக்காங்க. என் கணவர மாதிரி ஆளுங்களெல்லாம் வினவு கட்டுரைகளை கூட திருட்டுத்தனமா படிக்க வேண்டிய நிலையை இதோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
பிறகு ஆபிசில இருக்கும் பிராமணர்களோட பாடி லேங்குவேஜ், கம்யூனிகேசன், அப்ரைசில் ரேட்டிங் எல்லாமே ரொம்ப நுட்பமா அவங்களோட குணத்தை காட்டுற மாதிரி இருக்கும். அதையெல்லாம் சொல்லி புரிய வைக்கிறது ரொம்ப சிரமம். இதனால எல்லா பிராமணருங்களும் இப்படித்தான்னு சொல்லலை. ஆனா அவங்க கண்டிப்பா விதி விலக்காத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
DSC_0055பிரமாணரல்லாதோருகிட்ட சாதி உணர்வு நிச்சயமா இருக்கு. இல்லேங்கல. எங்க அப்பார்ட்மென்டிலேயே அவங்க கூட நான் எஸ்சியான்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மீனவர்னு தெரிஞ்சப்பிறகு பெரிய பாதிப்பில்லேன்னு விட்டுட்டாங்க போல. ஆனா அவங்கிட்ட இருக்குற சாதி உணர்வு ரொம்ப வெளிப்படையானது, கொஞ்சம் வெள்ளேந்தியாவும் இருக்கும். அதாவது கொஞ்சம் பேசி கூட மாத்த முடியும். ஆனா பிராமின்ஸ்கிட்ட இருக்கும் சாதி உணர்வுங்கிறது ஒரு ஆடிட்டர் பேலன்ஸ் ஷீட் போட்டு பைனான்ஸ் நிலைமைய கண்டுபிடிக்கிற மாதிரி ரொம்ப ஆழமா இருக்கும்.
எங்க மாவட்டங்கள்ல் இருக்கும் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூராவும் ஏதோ ஒரு சாஃப்ட் வேரை வச்சு மத்தவங்களை துன்புறுத்துறாங்க. அது என்ன, எப்படின்னெல்லாம் என்னால விரிச்சு சொல்ல முடியல.
சரி, வினவு, ஒரு போராட்ட குணம் கொண்ட மீனவப் பெண்ணான நானே இப்ப ரொம்ப களைச்சு போயிட்டேன். இனியும் இங்க குடியிருக்க மனமில்லை. கணவர் மீன் வாங்க செல்லும் போது நல்ல சாளை மீனா, சுறா மீனா, ஆந்திரா நண்டா பாத்து வாங்குங்கன்னு கத்திகிட்டே சொல்லுவேன். ஏம்மா அப்படி கத்தி அவங்கள வம்புக்கு இழுக்குறேன்னு அவர் கேட்பார். அதெல்லாம் அடிபட்ட ஒருத்தியோட சின்ன சின்ன எதிர்ப்புகள்தான். ஆனா அதெல்லாம் நம்ம மனக்காயங்கள குணமாக்காது.
வேற வழி? இப்ப வேறு வீடு பார்த்துட்டு போகப் போறோம். ஆனா ஒரு கண்டிசன் உண்டு. அந்த அப்பார்ட்மெண்டுல மெஜாரட்டியா பிராமின்ஸ் இருக்க கூடாது.
இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்குமுணு என் கணவர் அடிக்கடி சொல்வார்! அத நினைக்கவே பீதியா இருக்கு.
அன்புடன்
மாலா
குறிப்பு: இந்த கடிதம் வெளியிடத் தகுந்ததுன்னா வெளியிடுங்க. பிறகு இந்த கிறிஸ்மசுக்கு உங்களை விருந்துண்ண அழைக்கிறோம். உங்களுக்கு மதம் இல்லேன்னாலும் இன்னைக்கு சர்ச் மாறியிருந்தாலும் ஆரம்பத்துல ஏசுநாதரும் ஏழைகளுக்காக பாடுபட்டவருன்னு ஏத்துக்கிவீங்கள்ல? எனக்கு ஏசுநாதரும் வேணும், பெரியாரும் வேணும். என் குழந்தை படிக்கிற மிஷனரி பள்ளியில அவன் இந்த வருடம் மாறுவேடப் போட்டியில பெரியார் வேஷத்தோடதான் போனான். தாடி வச்சா தாகூரான்னு என் காது படவே அவங்க பேசுனாங்க. எனக்கு என்ன தோணுதுன்னா பெரியாரோ உங்கள மாதிரி கட்சிங்களோ இருந்தாதான் ஜீசஸ் பாதுகாப்பா இருப்பாருன்னு தோணுது. இந்த அப்பார்ட்மெண்டுல இதுதான் கடைசி கிறிஸ்மஸ்!
(ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன – வினவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக