வெள்ளி, 26 டிசம்பர், 2014

சுபவீ : அய்யா நெடுமாறனின் வண்டவாளங்களை வெளிப்படுத்தவேண்டிய கடமை!

எப்போது பார்த்தாலும், கலைஞரின் கடந்த காலம் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கும் நீங்கள், என்றைக்காவது உங்களின் கடந்த காலத்தைத் தூசி தட்டி எடுத்துப் பார்த்ததுண்டா? இன்று  தமிழ்த் தேசியத்திற்காகவே வாழ்வதுபோல் காட்டிக் கொள்ளும் நீங்கள், கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கும், தமிழ்மொழிக்கும் எதிராக நின்ற தருணங்களை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? நீங்கள் மறந்து போயிருக்கலாம்! ஆனாலும், மறக்க முடியாத உங்களின் சில கடந்த கால நினைவுகளை இங்கே நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
1965ஆம் ஆண்டு, இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததே, அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தீயிலே வெந்து போன சின்னச்சாமி, குண்டுக்கு மார்பு காட்டிய இராசேந்திரன், நஞ்சருந்திச் செத்த நற்றமிழர்கள் என்று அன்றைய தியாகிகளின் பட்டியல் விரிகிறதே. அந்த நாள்களில் நீங்கள் அவர்களின் பக்கம் இருந்தீர்களா, அவர்களின் சாவுக்குக் காரணமாக இருந்த அரசின் பக்கம் நின்றீர்களா? உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
1970 நவம்பர் 30 அன்று, தமிழ் வழிக் கல்விச் சட்ட முன்வடிவைத் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார். அதனை எதிர்த்து, டிசம்பர் 10ஆம் நாள் மதுரையில் மாணவர்களைக் கூட்டி, தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடத் தூண்டிய ‘தமிழ்த்தேசியத் தலைவர்’ யார் என்பதை அறிய வரலாற்றின் பக்கங்களை ஒரு முறை புரட்டிப் பாருங்கள்! பெருந்தலைவர் காமராசர் எதிர்த்த நெருக்கடி நிலைக்கு ஆதரவாக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இணைத்தவர் யார் என்று உங்கள் இதயத்தைக் கேட்டுப்பாருங்கள். கொடுமையான நெருக்கடி நிலைக்காலத்தை எதிர்த்துப் போராடிய போராளி யார், அதற்கு உறுதுணையாக இருந்த ‘காந்தியவாதி’ யார் என்பதை ஒருமுறை கண்மூடிச் சிந்தித்துப் பாருங்கள்!

 1977 அக்டோபர் 30 அன்று, மதுரையில் இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டிய போராட்டத்தை, இந்திரா காந்தி கொலை முயற்சி வழக்காக அரசு பதிவு செய்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரடி சாட்சியாக (eye witness) சாட்சியம் அளித்து, உங்கள் ‘உயிர் நண்பர்’ வைகோவிற்கே இரண்டு ஆண்டுகாலம் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தவர் யார்?

இந்திரா காந்திக்கும் ‘மகன்’ நீங்கள், இந்திரா காந்தியைக் கொல்ல முயன்றதாக நீங்கள் சாட்சியம் அளித்த வைகோவிற்கும் நண்பர் நீங்கள். இந்த நிலையில்தான், கலைஞரைப் பார்த்துக் கபட நாடகம் ஆடுகிறார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்.அய்யா நெடுமாறன் அவர்களே, ஒன்றே ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். “உலகிலேயே மிக மிக எளிமையானது, பிறரிடம் குறை காண்பது; உலகிலேயே மிக மிகக் கடினமானது, தன் குறை  உணர்வது”.  subavee-blog.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக