திங்கள், 15 டிசம்பர், 2014

இன்னும் ஒருத்தரை அட்ஜஸ்ட் செய்யணும்...’ஜெயமணியிடம் அமைச்சர் ஆனந்தன்....

; ச.ஜெ.ரவி  ஜெயமணி என்ற பெண்ணுடன் தவறான நட்பு இருக்கிறது’ என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் மீது கடந்த ஆண்டு போயஸ் தோட்டத்துக்குப் புகார்கள் பறந்தன. 'அந்தப் பெண் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களில் அவரும் ஒருவர். அந்தப் பெண்ணையும் என்னையும் இணைத்து அசிங்கப்படுத்தும் வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்’ என அப்போது ஆவேசப்பட்டார் அமைச்சர் ஆனந்தன். இந்த விவகாரம் பற்றி நாம் 21.08.13 தேதியிட்ட ஜூ.வியில் 'பதவிக்காக என்னைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்!’  பெண் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ஆனந்தன் என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
ஓராண்டுக்கு பின்னர், மீண்டும் விவகாரத்தில் சிக்கியுள்ளார் அமைச்சர் ஆனந்தன். இந்தமுறை புகார் கொடுத்தது வேறு யாருமில்லை. அமைச்சர் பெரிய குடும்பத்துப் பெண் என சொன்ன அதே ஜெயமணிதான். தன்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கி மோசடி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது, பதவி வாங்கித் தருவதாக ஏமாற்றியது என ஏகப்பட்ட புகார்களை அமைச்சர் ஆனந்தன் மீது அடுக்குகிறார் ஜெயமணி. திருப்பூர் மாநகர போலிஸ் கமிஷனரை சந்தித்து அமைச்சர் ஆனந்தன் மீது புகார் கொடுத்துவிட்டுத் திரும்பியவரை சந்தித்தோம்.
'வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் என் தூரத்து உறவினர்தான். நான் 1984-ல் இருந்தே கட்சியில இருக்கேன். கணவரை பிரிஞ்சி இருக்கும் எனக்கு ரெண்டு குழந்தைகள். நான் இப்போ பனியன் கம்பெனி நடத்திட்டு வர்றேன். அம்மா படம் போட்ட பனியன் ஆர்டர் எல்லாம் அமைச்சர் எனக்குக் கொடுத்துட்டு வந்தார். அப்போதான் சென்னையில நான் கார்மென்ட் ஷோரூம் திறக்க முடிவு செஞ்சேன். அமைச்சரும் பார்ட்னராகச் சேர்ந்து தொழில் செய்யலாம்னு சொன்னார். அப்போ அவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார். அதனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கித் தருவதாகச் சொன்னார். அவர் சொன்னதை நம்பி நான் ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன். அதுக்கு அப்புறம் சில அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். போன வருஷம் கட்சியில புது உறுப்பினர் சேர்க்குற நிகழ்ச்சியில அம்மாகிட்டயும் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். எம்.பி சீட் வாங்கித்தர்றேன், கட்சியில பதவி வாங்கித்தர்றேன்னும் சொன்னார். அப்போ எனக்கும் அவருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்துச்சு. அதையெல்லாம் அவர் இல்லைன்னு சொல்ல முடியாது' என்றவர், சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
''எனக்கும், அவருக்கும் பிரச்னை வந்ததுக்கும் இதுதான் காரணம். அவர் மேல கார்டனுக்கு நிறைய புகார்கள் போயிட்டு இருந்துச்சு. அப்போ அந்தப் புகார் எல்லாம் அம்மா பார்வைக்குப் போகாம இருக்க ஒருத்தரை அட்ஜஸ்ட் செய்யணும்னு என்கிட்ட சொன்னார். நான் அதுக்கு ஒத்துக்கலை. அந்தப் பிரச்னையில என்னை அடிச்சார். நான் சென்னையில இருந்தப்போ வீட்டிலேயே தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன். அப்போது சென்னையில உள்ள ஹோட்டலில் வைத்து ட்ரீட்மென்ட் கொடுத்து என்னை ஃப்ளைட் ஏத்திவிட்டார். இடத்தை வாங்கித்தர்றதா ஒரு கோடி ரூபாய் வாங்கியும், இடத்தை அவர் ஒதுக்கீடு பண்ணித்தரலை. அதனால பணத்தைத் திரும்பக் கேட்டேன். வனத் துறைக்கு மாத்திட்டதால கொஞ்சம் அவகாசம் வேணும்னு கேட்டார். அப்போதான் உங்க பத்திரிகையில எங்களைப் பத்தின செய்தி வந்துச்சு. 'மீடியாக்கள்ல செய்தி வருது. இது தேவையில்லாத பிரச்னை ஆயிடும். அதனால வெளிநாட்டுக்கு போய்டு’னு சொன்னார். நானும் மலேசியா, சிங்கப்பூருன்னு போயிட்டேன். திரும்பி வந்தபோதுதான், அவரது அரசியல் எதிரிகளை பழிவாங்க என்னைப் பயன்படுத்திக்க்கிட்டது தெரிய வந்துச்சு. இது சம்பந்தமா அவர்கிட்ட கேட்டேன். 'நீ எதுவும் கேக்காதே. உன் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடறேன்’னு சொன்னார்.
ஆனா, அவர் சொன்ன எதையும் செய்யலை. இது சம்பந்தமா அம்மாவுக்குப் புகார் அனுப்பினேன். அதனால என்னை அடியாட்களை வெச்சு அடிச்சார். கட்சி நிகழ்ச்சிகளிலேயோ, பொது நிகழ்ச்சிகளிலேயோ கலந்துக்கக் கூடாதுனு மிரட்டினார். என்னோட அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை கிழிச்சு எறிஞ்சுட்டார். இது சம்பந்தமா அம்மாகிட்ட புகார் கொடுக்க சென்னைக்கு போனேன். அந்தச் சமயத்துலதான் பெங்களூரு வழக்குல அநியாயமா அம்மாவுக்கு தண்டனை கிடைச்சிருச்சு. அம்மாவைப் பாக்க சிறைக்குப் போனேன். அங்கேயும் அமைச்சர் அடியாட்கள் மிரட்டினாங்க. இது சம்பந்தமா கடந்த 2ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திச்சு அமைச்சர் மேல புகார் கொடுத்தேன். 'இந்தப் பிரச்னைய சீக்கிரம் முடிங்க’ன்னு அவரும் அமைச்சர்கிட்ட சொன்னார். கட்சி பிரமுகர்கள் 100 பேரைக்  கூட்டிட்டு போய், 'நான் மோசமான பொண்ணு’னு புகார் கொடுத்திருக்காரு. அதுக்கு அப்புறம், முதலமைச்சர் தனிப் பிரிவு, சட்டப்பேரவைனு பல இடங்கள்ல புகார் பண்ணினேன். ஆனா எந்தப் பிரயோஜனமும் இல்லை. அம்மா பார்வைக்கு என் கடிதம் போகவே இல்லை.
இப்போ கடந்த ஒரு வாரமா என்னை ரொம்ப மோசமா ட்ரீட் பண்றார். கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில, தொழில் அமைப்பு கூட்டத்துலனு ஒவ்வொரு நிகழ்ச்சியிலயும் என்னை மோசமா நடத்தினார். 'நான் பேசிக்கா லாரி டிரைவர். நான் ஒண்ணும் பார்ன் வித் கோல்டு ஸ்பூன் இல்ல. நானெல்லாம் ஆயிரத்தெட்டு கொலைகளைப்ப் பார்த்திருக்கேன். என் மேல ஏகப்பட்ட கேஸ் இருந்துச்சு. எல்லாத்தையும் ஒண்ணுமில்லாம பண்ணித்தான் அரசியலுக்கே வந்தேன். ................’னு  பொது இடங்கள்ல கட்சி நிர்வாகிகள் எல்லோருக்கும் முன்னாடியே மிரட்டுறாரு. முதல்ல என்கிட்ட தப்பா நடந்துக்க்கிட்டாரு. இப்போ என் மகளையும் மிரட்டுராறு.
என்னை யார் என்றே தெரியாதுனு சொல்றார். என்னோட கால் டீட்ட்டெய்ல் எல்லாம் தர்றேன். என்கிட்ட மணிக்கணக்குல பேசி இருக்கார். யாருன்னே தெரியாதவர்கூட அவருக்கு என்ன பேச்சு? என்னை எங்கெங்கே அழைத்துப் போனார்? யாரோடு எல்லாம் அறிமுகப்படுத்தி  வெச்சார், அம்மாகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சது இதுக்கெல்லாம் போட்டோ ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு. என்னை தரம் தாழ்ந்தவள்னு இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லை. சொல்லவும் முடியாது. அப்படி அவர் சொன்னா அவர் கேரக்டரை நான் நிரூபிப்பேன். நான் கொடுத்த ஒரு கோடி ரூபாய்க்கு கணக்கு இருக்கானு கேக்குறாங்க. நான் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். வெளிப்படையா சொல்லணும்னா திருப்பூர் கார்மென்ட் தொழில்ல முழுக்க முழுக்க ரெக்கார்டிக்கலா இல்லை. அதனால நான் கொடுத்தது எல்லாம் இல்லைனு ஆயிடாது.
லஞ்சமாகக் கொடுத்த பணத்துக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்கிறாங்க. ஆனா, மினிஸ்டர் எந்த பிசினஸ் செய்து இவ்வளவு சம்பாதிச்சார். எனக்குத் தெரிஞ்சு அவருக்கு ரூ.400 கோடி சொத்து சம்பாதிச்சிருக்கார். இதெல்லாம் அவருக்கு எங்கிருந்து வந்துச்சுங்கறதை நான் கிளறுவேன். நான் அவரோட இருந்தவ, மினிஸ்டருக்கு எவ்வளவு சொத்து, அதை எங்கெல்லாம் சேர்த்து இருக்கிறார்ங்கறதை நான் வெளியில் கொண்டு வருவேன். அவருக்கு யார்கூட எங்கெல்லாம் டீலிங் இருக்கு, எங்கிருந்தெல்லாம் அவருக்கு பணம் வருது, என்ன டேர்ம்ஸ், அவருக்குக் கிடைக்கிறது எல்லாம் எனக்குத் தெரியும். அதையெல்லாம் நான் வெளியில கொண்டு வருவேன். நான் அம்மா பேரை கெடுக்கும்படி எதுவும் செய்ய மாட்டேன். அம்மாகிட்ட புகார் கொடுக்க ட்ரை பண்றேன். அம்மா காதுக்கு கொண்டு போயும் நடவடிக்கை எடுக்கலைன்னா, அடுத்து கோர்ட்டுக்குப்  போவேன்' என்றார் உறுதியாக.
இதுதொடர்பாக அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கேட்டபோது, 'இந்தப் புகார்ல எல்லாம் துளிகூட நியாயமில்லை. தவறான புகார் கொடுத்ததால அந்தப் பொண்ணை கட்சியில இருந்தே தலைமை நீக்கிடுச்சு. என்கிட்ட 400 கோடி ரூபாய்க்கு சொத்து இருந்தா அதுக்கான ஆதாரத்தைக் கொடுக்கட்டும். யார் அந்தப் பொண்ணு, எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன இருக்கு? 100 பேரோட சேர்ந்து கட்சிக்காரங்கதான் அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்தாங்க. நான் அம்மா முன்னிலையில சேர்த்து வெச்சேன். மத்தபடி அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மேல அசிங்கமான புகார்களை எல்லாம் சொல்றார். அதெல்லாம் வேணாம். என்னால இதை ஏத்துக்கவே முடியலை. யார் மேல என்ன புகார் வேணா சொல்லிடலாமா? இந்தப் பொண்ணை பின்னாடி இருந்து சிலர் இயக்குறாங்க. கட்சியை விட்டு நீக்கப்பட்டவங்க சிலர் இருக்காங்க. அவங்களும் மந்திரி, மாவட்டச் செயலாளர் கனவுல இருக்குறவங்களும் என்னை வீழ்த்தி, பதவியை அடைஞ்சிடணும்னு பாக்குறாங்க' என்றார்.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் மீது பாலியல் ரீதியான புகார் கிளம்பி உள்ளது!  vikatan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக