திங்கள், 22 டிசம்பர், 2014

குஷ்பூ ராஜ்யசபா எம் பி ? அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்?


Kushboo for Rajya Sabha plus congress spokesperson?  டெல்லி: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்புவை ராஜ்யசபா எம்.பியாக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஆரம்பத்தில் ஜெயா டிவியின் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவர் குஷ்பு. பின்னர் கற்பு குறித்த கருத்தால் ஏற்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் அவர் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்டன.  ஆனால் இந்த வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தால் ஒரே உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த உத்தரவைப் பிறப்பித்தது அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச். அதன் பின்னர் அவர் காங்கிரஸில் சேரப் போவதாக அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவுக்கு வந்து சேர்ந்தார் குஷ்பு.
திமுகவில் சேர்ந்த பிறகு அவருக்கு நல்ல முக்கியத்துவம் கிடைத்தது. கட்சிக் கூட்டங்களில் அவருக்கு லைம்லைட் கிடைத்தது. ஸ்டார் பிரசார பீரங்கியாகவும் மாறினார். ஆனால் திடீரென மு.க.ஸ்டாலின் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களால் ஸ்டாலின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிட்டது. இதையடுத்து கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் குஷ்பு. இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் முதல் முறையாக விருதுநகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு அனல் பறக்க பேசினார். இதையடுத்து காங்கிரஸில் அவருக்கு முக்கியப் பொறுப்பு எப்போது கொடுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குஷ்பு தமிழக மக்களுக்கு நன்றாக அறிமுகம் ஆன பிரபல நடிகை. எனவே, குஷ்பு பேசும் கூட்டங்களுக்கு ஏராளமானோர் வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். எங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. மும்பையில் உள்ள எங்களது குடும்பத்தினர் காங்கிரஸுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். காங்கிரசில் சேர்வது தான் எனது கனவு அது நிறைவேறி விட்டது என்று குஷ்பு கூறிவருகிறார். இந்த நிலையில் குஷ்புவை வைத்து பல மாங்காய்களை அடிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. என்னதான் தமிழகத்திலிருந்து காங்கிரஸுக்கு குஷ்பு வந்திருந்தாலும் கூட அவர் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். தமிழிலும் பேசக் கூடியவரான குஷ்புவுக்கு இந்தி, உருது, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளைப் பேசத் தெரியும். முட்டாள்தனமாக பேசாமல் பொட்டில் அடித்தாற் போல நறுக்கென பேசக் கூடிய திறமை படைத்தவர். சுயமாக சிந்தித்துப் பேசக் கூடியவர். கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் திறமையானவர். புத்திசாலியும் கூட. இப்படி பல வகையிலும் மேம்பட்டவராக குஷ்பு இருப்பதால் அவரை தமிழகத்தோடு சுருக்கி விடாமல் அகில இந்திய அளவில் பயன்படுத்த காங்கிரஸ் நினைக்கிறதாம். குறிப்பாக ராகுல் காந்தி நினைக்கிறாராம். எனவே செய்தித் தொடர்பாளர் என்ற அளவில் அவருக்குப் பதவி கொடுத்து அகில இந்திய அளவில் பயன்படுத்த ராகுல் காந்தி யோசனை தெரிவித்துள்ளாராம். அதேபோல அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியைக் கொடுத்து நாடாளுமன்றத்திலும் முழங்க விடலாம் என்ற யோசனையிலும் காங்கிரஸ் மேலிடம் உள்ளதாம். தமிழகத்திலிருந்து குஷ்புவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடியாது என்பதால் அவரை அவர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குக் கொண்டு வர முயலுகிறதாம் காங்கிரஸ். அதற்கு வசதியாக அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் ராஜ்யசபா தேர்தல் வரவுள்ளது. அதில் குஷ்பு நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. ஆக, தமிழகத்து குஷ்பு அகில இந்திய ஸ்டார் காங்கிரஸ் பிரசாரகராக மாறப் போவது என்னவோ நிஜம்தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
//tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக