சனி, 13 டிசம்பர், 2014

அய்யர்களின் எச்சில் இலைமீது உருண்டு புரள தடை! உச்ச நீதிமன்றம் கர்நாடகாவில் ......


நேற்று முக்கியமான ஒரு நிகழ்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. உருளு சேவா. கேள்விப்பட்டிருக்கக் கூடும். கர்நாடகாவின் கடற்கரையோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடக்கும் உற்சவம். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பிராமணர்களுக்கு பந்தி வைப்பார்கள். அவர்கள் வரிசையாக அமர்ந்து போஜனம் முடித்தவுடன் எச்சிலையை எடுக்க மாட்டார்கள். அப்படியே வரிசையாகக் கிடக்கும் இந்த இலைகளின் மீது பிராமணர் அல்லாதவர்கள் படுத்து உருள்வார்கள். இது வேண்டுதல். பிரம்மஹத்தி தோஷமோ அல்லது பாம்பைக் கொன்ற தோஷமோ இருந்தால் விலகிவிடுமாம். இந்தப் பாவங்களினால் உருவாகும் தோல் நோய்களிலிருந்து விடுபடவும் இந்த நேர்த்திக்கடன் முக்கியம் என நம்புகிறார்கள்.
கிட்டத்தட்ட ஐந்நூறு வருட நம்பிக்கை இது. 
சூரசம்ஹாரத்தை முடித்துவிட்டு முருகர் இந்த இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். இங்குதான் தெய்வானைக்கும் முருகருக்கும் திருமணம் நடக்கிறது. இங்கிருக்கும் குகையில்தான் கருடனிடமிருந்து தப்பிப்பதற்காக வாசுகி பாம்பு தவம் புரிந்திருக்கிறது. முருகன் வாசுகிக்கு தரிசனம் கொடுத்து காத்தாராம். அதனால்தான் பாம்பைக் கொன்ற தோஷத்தை போக்குவதென்றால் இங்கே வந்து உருள்கிறார்கள்.
உருள்சேவா நிகழ்வை எதிர்த்து போராட்டங்களை நடத்துபவர்கள் ஏன் பிராமணர் அல்லாதவர்கள் மட்டுமே உருள வேண்டும் என்றும், ஏன் பிராமணர்கள் மட்டுமே பந்தியில் அமர்ந்து உண்ண வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இத்தகைய கேள்விகளைத்தான் தமிழகத்தின் நாத்திகக் குழுக்களும் எழுப்புகிறார்கள். ஏன் எந்த பிராமணனும் அலகு குத்திக் கொள்வதில்லை? ஏன் பிராமணன் தீச்சட்டி எடுப்பதில்லை? குண்டம் இறங்குவதில்லை? 
அதெல்லாம் எதற்கு? வீண் வம்பு!
ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தோம். அது கவுண்டர் வீடு. பொழுது சாய்ந்திருந்தது. பண்ணையத்து ஆள் அருந்ததியர். அவர் வந்து ‘சாமி பால் நீங்க கறந்துக்குறீங்களா? நான் கறக்கட்டுமா?’ என்றார். ஏன் அப்படி கேட்டார் என்று தெரியும்தானே? கவுண்டரின் வீட்டு உபயோகத்துக்கு என்றால் தேவையான பாலை கவுண்டரே கறந்து கொள்வார். அருந்ததியர் கறந்தால் தீட்டு. ஒருவேளை சொசைட்டிக்கு எடுத்துச் செல்வதாக இருந்தால் வேண்டுமானால் அருந்ததியர் கறக்கலாம். இது கொங்குநாட்டில் சாதாரணமான நிகழ்வுதான். தீண்டாமையை ஒழித்துவிட்டோம் என்று யார் மார் தட்ட வேண்டியதில்லை.
பெங்களூரிலும் சென்னையிலும் அமர்ந்து கொண்டு ‘இப்போவெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க?’ என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
அருந்ததியர்களின் வாழ்க்கையைவிடவா பிராமணர்களும் ஆதிக்கசாதியினரும் சிரமப்படுகிறார்கள்? இன்னமும் அந்தச் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு முழுமையான படிப்பறிவு இல்லை. சொத்து இல்லை. பலருக்கும் நிரந்தரமான வேலை இல்லை. இன்னமும் கணிசமானவர்கள் ஆதிக்க சாதியினரின் விவசாய நிலங்களில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேல்சாதியினரின் வீட்டில் மீதமாகும் பழைய சோற்றை வாங்கித் தின்கிறார்கள்.
நிலைமை ஒன்றும் அட்டகாசமாக மாறிவிடவில்லை. தொகுப்பு வீடுகள் கிடைத்திருக்கின்றன. மின்சாரவசதியைப் பெற்றிருக்கிறார்கள். இலவச டிவிக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்பிருந்ததைவிட இப்பொழுது கொஞ்சம் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். எதற்காக குனிய வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இளந்தலைமுறையினர் மில் வேலைகளுக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார்கள். பேண்ட் சர்ட் அணிகிறார்கள்.  அடிப்படையான மனித உரிமையின் முப்பது சதவீதத்தை அடைந்திருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் மற்ற சாதியினரின் பார்வையில் திமிர்த்தனம்.  ‘சக்கிலிக்கு வந்த வாழ்வை பாரு!’ என்று என்கிற வாக்கியத்தை சர்வசாதாரணமாகக் கேட்கலாம். திமிர்த்தனமாகவே இருந்துவிட்டு போகட்டுமே. காலங்காலமாகவல்லவா நம்மிடம் அடங்கியிருந்தார்கள்? எத்தனை நூறாண்டுகளாக நசுக்கி வைத்திருந்தோம்? இப்பொழுது இருபது ஆண்டுகளாக அவர்கள் தலையை மேலே தூக்குவதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. Insecurity ஆக யோசிக்கத் தொடங்குகிறோம். இல்லையா?
எங்களை ஒடுக்குகிறார்கள் என்று பதறுகிறோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று பம்முகிறோம்.
‘அட அவர்களும்தான் விவசாயம் செய்துவிட்டு போகட்டுமே..’ என்று சொல்லிப்பாருங்கள். கவுண்டர்களுக்கும் வன்னியர்களுக்கும் சுள்ளென்று கோபம் வந்துவிடும். நாங்கள்தான் காலங்காலமாக விவசாயம் செய்தோம். நாங்கள்தான் இத்தனை வருடங்களாக இந்த பூமியை பாதுகாத்தோம் என்பார்கள். எல்லாம் சரிதான். ஏன் அருந்ததியரும் ஆதிதிராவிடரும் விவசாயத்தைச் செய்யவில்லை? அவர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தோமா என்ன? ம்ஹூம். அத்தனை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு நாங்கள்தான் கொடி கட்டினோம் என்று மார்தட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? கலையையும், இலக்கியத்தையும் நாங்கள்தான் தோளில் தூக்கி சுமந்தோம் என்று பிராமணர்கள் சொல்வது போலத்தான். பிராமணர்களுக்குத்தான் படிப்பு கிடைத்தது. அதனால் அவர்கள் கலையையும் இலக்கியத்தையும் தூக்கிச் சுமந்தார்கள். கவுண்டனுக்கும், வன்னியனுக்கும், தேவனுக்கும்தானே நிலமும் அதிகாரமும் கையில் இருந்தது? அதனால் விவசாயத்தை காப்பாற்றினார்கள். 
இதில் எங்கிருந்து வந்தது சுயசாதிப்பெருமை?
எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று புலம்புவது சரிதான். ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவல்லவா அதையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம்? இன்றைக்கு நம்மை விட கீழே இருந்தவன் கொஞ்சம் எட்டிப்பார்ப்பது நம்மை நடுங்கச் செய்கிறது. அப்படித்தானே? வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கே இவ்வளவு பதறுகிறோமே இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நசுங்கிக்கிடந்தவன் எழுப்பிய குரல்கள் அவனது குரல்வளையைத் தாண்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அல்லவா நாம்?

ஒரு இனத்தை நசுக்க வேண்டும் என்றோ அல்லது விரட்ட வேண்டும் என்றோ சொல்லவில்லை. ஆனால் இத்தனை காலமாக ஒடுங்கிக் கிடந்தவன் ‘எனக்கும் கொஞ்சம் இடம் கொடு’ என்று கேட்கத் துவங்கும் போது நமக்கு கசக்கத்தான் செய்யும். Its an incremental effect. எனக்குக் கீழே இருந்தவன் என்னை நகரச் சொல்கிறான். நான் எனக்கு மேலே இருந்தவனை நகரச் சொல்கிறேன். ஒதுங்கித்தான் தீர வேண்டும். வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.  nisaptham.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக