சனி, 13 டிசம்பர், 2014

துரைமுருகன் சமாதானமானார் ! வாரிசுகளுக்கு பதவி இல்லையென ஸ்டாலின் எடுத்துரைத்தார்!

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த துணை பொதுச் செயலர் துரை முருகன், கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைவர் கருணாநிதியிடம் சொல்லிச் சென்றதாக கூறப்பட்டதை அடுத்து, கட்சியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் அதிர்ந்தனர்.இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி ஆகியோர், துரைமுருகனுடன் கருணாநிதியின் தூதுவர்களாகப் பேசி, அவரை சமாதானமடைய வைத்துள்ளனர். இதனால், தி.மு.க.,வில் இருந்து விலகி, வீர வன்னியர் பேரவையை துவக்க திட்டமிட்டிருந்த துரைமுருகன், அதை கைவிட்டு, தி.மு.க.,விலேயே நீடிப்பதாக, அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனால், வீர வன்னியர் பேரவை துவக்கம் தொடர்பாக, துரைமுருகனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட வன்னிய இனத்தின் பிரதிநிதிகள், துரைமுருகன் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.    
;இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: வேலூர் மத்திய மாவட்ட செயலர் பதவியை, தன் மகன் கதிர் ஆனந்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சமீபத்தில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு துரைமுருகன் சென்றார். அப்போது அங்கிருந்த ஸ்டாலினை சந்தித்து, 'என் மகனுக்கு இம்முறை மாவட்ட செயலர் பதவி வழங்க வேண்டும்' என, கேட்டுள்ளார். கோபப்பட்ட ஸ்டாலின், 'உங்கள் மகனுக்கு, மாவட்ட செயலர் பதவியில் இருந்து திறமையாக செயல்பட முடியாது; அதனால், இம்முறை பதவி கொடுக்க வாய்ப்பில்லை. அதோடு, கட்சியின் சீரமைப்பு குழுவின் அறிவுரைபடி, கட்சியின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்க வாய்ப்பில்லை' என, கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், 'என் மகனைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; எனக்கு திறமை இருக்கிறது' என்றவர், 'கட்சியின் மறுசீரமைப்பு குழு சொல்கிறபடிதான் நடந்து கொள்கிறீர்களா? அப்படியென்றால், தூத்துக்குடி பெரியசாமி, சுப.தங்கவேலன் வாரிசுகளுக்கு எப்படி மாவட்ட செயலர் பதவி கொடுக்க தீர்மானித்துள்ளீர்கள்?' என்றும் கேட்க, ஸ்டாலின் கோபமாகி விட்டார். சற்று நேரத்தில், ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று விட, துரைமுருகன், கருணாநிதியை சந்தித்தார். 'தி.மு.க.,வில் எனக்கும், குடும்பத்துக்கும் துளி கூட மரியாதை இல்லை. அதனால், இனிமேல், இங்கிருந்து செயல்படுவது முடியாது; உங்களை பார்க்காமல், என்னால், இருக்க முடியாது. இருந்தாலும் வேறு வழியில்லை; விடைபெறுகிறேன்' என, சொல்லி விட்டு, படபடப்புடன் வீட்டில் இருந்து வாசல் வந்தார். 

அங்கே, அவருக்கு டீ கொடுத்தனர். டீ குடித்த துரைமுருகன், 'இதுதான் நான் இந்த வீட்டில் குடிக்கும் கடைசி டீ...' என, சத்தமாக சொல்லிவிட்டு, வீட்டுக்கு வெளியே வந்தார். பின் தரையை தொட்டு கும்பிட்டு விட்டு, குலுங்கி, குலுங்கி அழுதார். அதை பார்த்த கட்சியினரும் அழுதனர். வேறு சிலர் துரைமுருகனை சமாதானப்படுத்தினர். அதை ஏற்காமல், காரை வரவழைத்து, வீடு நோக்கி சென்றார். அதன்பின், வீட்டில் இருந்தபடியே, சிலரை அழைத்து வீர வன்னியர் பேரவை துவக்குவது குறித்து, பேசியிருக்கிறார். வன்னிய இனத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரையும் வரவழைத்து பேசினார். இத்தகவல் கருணாநிதிக்கு தெரிய வந்ததும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை அனுப்பி துரை முருகனை சமரசம் செய்துள்ளார். கனிமொழியும் சமாதானப்படுத்தினார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தி.மு.க.,விலிருந்து விலக மாட்டேன்:

'தி.மு.க.,விலிருந்து, நான் விலக மாட்டேன்' என, மூத்த துணை பொது செயலர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: நான் முறையாக, கட்சியில் வளர்ந்தவன். நிறை வாழ்க்கையோடு வாழ்ந்து வருபவன். கடந்த 50 ஆண்டுகளாக, கருணாநிதி அடியொற்றி நிற்பவன். தி.மு.க., மீது அடித்த எந்த புயலிலும் காணாமல் போகாமல் இருப்பவன். என் மீது, நான் செய்யாத ஒன்றை செய்து விட்டதாக கற்பனையில் ஒரு செய்தியை உருவாக்கி, செய்தி வெளியாகி இருப்பதை கண்டிருக்கிறேன். தி.மு.க., தான் என்றும், என் கட்சி. கருணாநிதி தான் என்றும், என் தலைவர். ஸ்டாலின் எங்கள் வழிகாட்டி. இது தான் என் முடிவு. கட்சியிலிருந்து விலகல் என்பது, என்றும் நடக்காது. இவ்வாறு, துரைமுருகன் கூறியுள்ளார்.  
சட்ட பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு ஸ்டாலின் அவர்களின் திறமை இன்மை காரணம். உடன் ஸ்டாலின் அவர்கள் அனைத்து பதவிகளை துறப்பது நல்லது.
- நமது நிருபர் -    dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக