வியாழன், 11 டிசம்பர், 2014

தி.மு.க.வில் உருவாகும் வர்த்தக அணி:

தமிழகத்தில், பல கட்சி களிலும் இருக்கும் வர்த்தக அணி போல, தி.மு.க., விலும் உடனடியாக அந்த அணியை ஏற்படுத்த வேண்டும்; அது சட்ட சபைத் தேர்தலுக்கு, பெரும் உதவியாக இருக்கும் என, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வலியுறுத்தி சொல்லியுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த லோக்சபா தேர்தலில், கட்சி படுதோல்வி அடைந்ததும், கட்சியை சீரமைத்து பலப்படுத்துவதற்கென்று, ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு தலைமைக்கு ஏகப்பட்ட பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, 34 மாவட்டங்களாக இருந்த தி.மு.க., நிர்வாக அமைப்பு, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கட்சித் தோல்விக்கு காரணமானவர்கள் என, கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையையும் ஏற்று, கட்சித் தலைமை, பலரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது.
இதற்கிடையில், உட்கட்சித் தேர்தல் வந்துவிட, கட்சிக்குள் ஏகப்பட்ட ரகளை. அறிவாலயத்துக்கு புகார் பட்டியலோடு வரும், கட்சியினரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமானது. இருந்தபோதும், கட்சித் தேர்தலை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். மாவட்ட செயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டும் தான், நடக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில், கட்சியை வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியில், கட்சி மேலிடம் தீவிரமாகி உள்ளது. அதற்காக, செய்ய வேண்டிய பணிகள் குறித்து, கட்சியின் முக்கியத் தலைவர்களிடம், கருணாநிதி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன்...:

அந்த வகையில், சமீபத்தில், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழியும், கருணாநிதியை சந்தித்து, தேர்தலுக்கு முன், கட்சி சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சில விஷயங்களை எடுத்து வைத்தார். அதில் முக்கியமானது, கட்சியில் வர்த்தக அணியை உருவாக்க வேண்டும்.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:
பலமுனை வரியை ஒரு முனை வரியாக்கியது; உணவுப் பொருட்களுக்கு வரி நீக்கம்; எண்ணெய் பொருட்களுக்கு வரி நீக்கம்; வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்தது; தொழில் வரியை நீக்கியது; 5 லட்சம் வரையில், வியாபாரிகள் விற்பனை வரி செலுத்த வேண்டியதில்லை என, வியாபாரிகளுக்கு, நிறைய சலுகைகளை செய்து கொடுத்தது, தி.மு.க., ஆட்சியில் தான். இப்படியெல்லாம், வியாபாரிகளுக்கு நிறைய நல்லதுகளை செய்து கொடுத்த தி.மு.க., அதை மக்களிடம் எடுத்து சொல்லாததால், 50 லட்சம் வணிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கூட, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கவில்லை.
வர்த்தகர் அணி:
அதனால், அவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்து செல்ல, தி.மு.க., வில் மற்ற கட்சிகளைப் போல, வர்த்தகர் அணி உருவாக்க வேண்டும். அதற்கு, கட்சியின் எம்.எல்.ஏ.,வான அனிதா ராதாகிருஷ்ணனை, மாநில செயலராக நியமிக்க வேண்டும் என்பது உட்பட, பல விஷயங்கள் குறித்து, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு எடுத்து சொன்னார். அதை பரிசீலிப்பதாக, கருணாநிதி சொல்லியிருக்கிறார். இதனால், தி.மு.க.,வில் விரைவில் வர்த்தகர் அணி உருவாக்கப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக