வியாழன், 4 டிசம்பர், 2014

ரோதக் சகோதரிகளால் தாக்கப்பட்ட இளைஞர்கள் மீது தவறு இல்லை... 6 பெண் பயணிகளின் ஆதரவால் திடீர் திருப்பம்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில், ரோதக்கைச் சேர்ந்த 2 சகோதரிகளிடம் 3 இளைஞர்கள் தவறாக நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அந்த இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அதே பேருந்தில் பயணம் செய்த 6 பெண் பயணிகள் போலீஸில் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோதக்கைச் சேர்ந்த சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா ஆகியோர் அந்த மூன்று இளைஞர்களையும் சரமாரியாக அடித்தனர். தங்களிடமிருந்த பெல்ட்டால் அவர்களை அடித்தனர். இதுதொடர்பான காட்சி வீடியோவில் படமாக்கப்பட்டு வெளியிலும் வந்தது. இதையடுத்து குல்தீப், மோஹித், தீபக் ஆகிய மூன்று இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர்.  இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அந்தப் பேருந்தில் சம்பவத்தின்போது பயணம் செய்த 6 பெண்களில் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தங்களது சாட்சியத்தையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இதை ரோதக் டிஎஸ்பி யாஷ்பால் கத்னா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் டிஎஸ்பி கூறியுள்ளார். சோனிப்பட்டைச் சேர்ந்த விமலா என்ற பெண் கொடுத்துள்ள சாட்சியத்தில், ரோதக் பஸ் நிலையத்தில் பஸ் நின்றிருந்தபோது உடல் நலம் இல்லாத ஒறு பெண்ணுக்காக டிக்கெட் வாங்கித் தருமாறு நான் குல்தீப்பிடம் பணம் கொடுத்து கேட்டேன். அப்போது அந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் உட்கார வேண்டிய சீ்ட்டில் இந்த இரு சகோதரிகளும் உட்கார்ந்திருந்தனர். இதைப் பார்த்த குல்தீப், அவர்களிடம் அந்தப் பெண் அமர இடம் கொடுங்கள் என்று கூறினார். மேலும் டிக்கெட்டையும் காட்டினார். ஆனால் அவர்கள் எழுந்திருக்கவில்லை. மாறாக குல்தீப்பிடம் சண்டைக்குப் போய் விட்டனர். பின்னர் திடீரென பெல்ட்டை எடுத்து குல்தீப்பை அடிக்க ஆரம்பித்து விட்டனர். அவரை உதைக்கவும் செய்தனர். இதை ஒரு பெண் தான் வைத்திருந்த மொபைல் போனில் பதிவு செய்ய ஆரம்பித்தார். இந்த நிலையில் குல்தீப் பஸ்சிலிருந்து இறங்கி விட்டார். ஆனால் அந்தப் பெண்களும் கீழே குதித்து அவரை துரத்தினர். போலீஸார் வந்த பின்னர்தான் அவர்கள் அடங்கினர். போலீஸாரிடம் குல்தீப்பையும், அவருடன் வந்த மற்ற இருவரையும் சேர்த்து புகார் கூறினர் அந்தப் பெண்கள். ஆனால் அந்த மூன்று இளைஞர்களுமே அப்பாவிகள், அவரக்ள் தவறு செய்யவில்லை என்று கூறியுள்ளார் விமலா. இதேபோல மேலும் 5 பெண்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் 4 பேர் அந்த சகோதரிகளின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.co

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக