வியாழன், 25 டிசம்பர், 2014

2ஜி Spectrum: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு! முரளி மனோகர் ஜோஷி போன்ற பார்பனர்கள் .......


கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.

சேகர் குப்தா
2ஜி ஊழலை ஊடகங்களை ஊதிப் பெருக்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ள இந்தியா டுடே குழுமத்தின் துணைத்தலைவர் சேகர் குப்தா : காலங்கடந்த ஞானோதயத்தின் காரணமென்னவோ?
காங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவிதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.
மன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார்.  ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.
பா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.
எனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது.  நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது.  வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.
"கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்" எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ
“கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசு மீது வீணாகச் சந்தேகப்பட்டு, அதற்கு அநீதி இழைத்து விட்டோம்” எனக் கூறி பா.ஜ.க.வின் பல்டியை நியாயப்படுத்துகிறார், துக்ளக் சோ
அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:
“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)
ஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது.  ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம்.  சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.
இந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா? மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா? தே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)
2ஜி ஊழல்
பூஜ்யங்களின் எண்ணிக்கையைக் காட்டியே 2ஜி ஊழலைப் பரபரப்பூட்டும் செய்தியாக்கின ஊடகங்கள்.
ஊழல் விவகாரம் போலவே கருப்புப் பண விவகாரமும் மிகைப்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ள சேகர் குப்தா, “கருப்புப் பணம் தொடர்பான எண்ணிக்கையை நடைமுறை சாத்தியம் எனும் சோதனைக்கு (யாரும்) உட்படுத்தவில்லை. இது ஜிடிபியைவிட பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் இவை முடங்கிக் கிடக்கிறது என்றும் பாபா ராம்தேவ் மட்டுமே கூறமுடியும். இதைத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக்குவதற்கு முன்பாக, ஆட்சிக்கு வரும் வாப்பு உண்மையில் இருக்கிறது என்றும், இது உருவாக்கிய பூதத்தை சமாளித்தாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும்நினைவில் கொள்ள யாரேனும் பா.ஜ.க.விற்கு அறிவுறுத்தியிருக்கலாம். உங்கள் சொந்த கற்பனையில் சிக்கித் தவிப்பதைவிட தர்மசங்கடமானது வேறில்லை” என அடக்கி எழுதுகிறார்.
கருப்புப் பண விவகாரத்தில் சேகர் குப்தாவைவிட துக்ளக் சோவின் மழுப்பல்கள், மோடியின் ‘தர்மசங்கடத்தை’ நமக்கு இன்னும் தெளிவாக விளங்க வைக்கின்றன.
“கருப்புப் பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றும்கூட, அதை வெளியிடாமல் இருந்ததற்குச் சில காரணங்களை அந்த அரசு கூறியது. அவை பொய்கள் என்று தீர்மானித்து, அந்த அடிப்படையில் அப்போது மத்திய அரசை விமர்சனம் செய்தவர்களில் நாமும் அடங்குகிறோம்.
2ஜி ஊழல்
2ஜி ஒதுக்கீட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங்கை ஆ.ராசா ஏமாற்றி விட்டதைப் போல அவதூறு செய்து ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரப் படத்தின் ஒரு வகை மாதிரி.
இப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது.  காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”
(துக்ளக், 12.11.2014)
“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.
முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார்.  இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ராயை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)
நிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார்.  (துக்ளக், 19.11.2014)
இந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது.  இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)
“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)
முன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும்!  இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது.  ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை.  கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.
- திப்பு  வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக