வெள்ளி, 21 நவம்பர், 2014

Mayor சைதை துரைசாமியின் 10 ஏக்கர் பண்ணை பங்களா படங்கள்!

சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் பொழுதெல்லாம் மேயர் துரைசாமி தி.மு.கழக மாநகராட்சி நிர்வாகங்களின் போது நிதி இழப்பு ஏற்பட்டது, நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தணிக்கைத் துறை சொன்னதாக ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இதையே அவர் சொல்லி வருவதும், உடனடியாக தி.மு.கழக மன்ற உறுப்பினர்களும், நாங்களும் பதில் சொல்லுவதுமாகவே இருந்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ முறை மேற்க்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவர்கள் யார்? யார்? என்பதை நேரடியாக விவாதிக்கத் தயாரா எனக் கேட்டிருந்தோம். அதற்கு இதுவரை பதிலளிக்க அல்லது நேரம் ஒதுக்கி விவாதிக்க தயாராக இல்லாத சைதை துரைசாமி மீண்டும் நேற்று (20.11.2014) நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்காலம் மு.க.ஸ்டாலின் அவர்களை வம்புக்கு இழுத்து மன்றக் கூட்டத்தில் விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.


சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் ஜனநாயகம் எந்தளவுக்கு கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கிறது என்பதை எல்லோருமே நன்கு அறிவார்கள். இந்நிலையில் நாகரீகமற்ற நரகல் நடை மட்டுமே எங்களுக்குரியது என்கிற வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மன்றத்திற்கு மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் மேயர் பொறுப்பு வகித்த சமயத்திலும், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் எனும் பொறுப்புகள் வகித்த சமயங்களிளெல்லாம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவார்ந்த ஆலோசனைகளின்படி நிர்வாகத்தினை திறம்பட நடத்தி தமிழக மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்று, மத்திய - மாநில அரசுகளின் விருதுகள் பலவற்றை பெற்ற பெருமைக்குரியவர்.

அவர் கொளத்தூர் தொகுயின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் மாநகராட்சியினால் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலகத்தை பறிக்கும் நோக்கத்தோடு தீர்மானம் நிறைவேற்றியதும், மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த அலுவலகத்தை காப்பதற்கு உயர்நீதிமன்றம் சென்று தக்கவைத்துக் கொண்டதையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.கழகத்தின் பொருளாளராகவும், இளைஞர் அணியின் செயலாளராகவும், தமிழகம் முழுவதும் சென்று இயக்கத்தினை வலுப்படுத்திடும் பணிகள் செய்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், தி.மு.கழக சட்டமன்ற கட்சித் தலைவர் என்கிற முறையில் அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை, அடாவடித்தனங்களை, அத்துமீறல்களை, அவலங்களை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி வருகிறார்.

மேலும், வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தன்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் மக்களுக்கு சேவையாற்றிட, தொகுதிக்கும் தனது அலுவலகத்திற்கும் வந்து செல்வதை பத்திரிகைகள் மற்றும் ஊடங்களின் மூலம் நன்கு அறியலாம்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்து உன்னுடன் விவாதிக்கக் கேட்கும் அரசியல் அரை வேக்காடு சைதை துரைசாமியே, அவரின் தொண்டன், நான் விடுத்த அழைப்பை ஏற்க ஏன் உனக்கு துணிவில்லை. உனது இயக்கத் தொலைக்காட்சியான ஜெயா டிவிக்கே கூட வருகிறேன்; விவாதிக்கத் தயாரா? எனக் கேட்டிருந்தேனே. ஏன் இன்னும் அதற்கு பதிலளிக்க தைரியம் இல்லை?

மன்றத்தை கேடயமாகப் பயன்படுத்தி அங்கே சவால் விட்டுக் கொண்டிருக்கும் “அரசியல் சாக்கடை” சைதை துரைசாமியே, உனது யோக்கியதை மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சைதாப்பேட்டையில் வசித்து வருகிற எனக்கு நன்றாகத் தெரியும்.

வணக்கத்திற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களும், நானும் தவறு செய்திருக்கிறோம் என்று சொல்லி வருகிற உனக்கு எங்கள் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? யார் உன்னை தடுத்தது? அரசியலுக்காக பேசுகிற உனது உளறலில் உண்மை சிறிதும் இல்லாததால்தான் நாங்களே வலியச் சென்று எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எங்கள் மீது நீ சொன்ன குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பதற்காக வழக்கு தொடுத்தோம்.

மேயர் மீது வழக்கு போட வேண்டுமெனில் அரசின் அனுமதி பெற வேண்டும் எனச் சொல்லி, அவ்வழக்கை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளிந்துகொண்ட நீயா எங்களை மீண்டும் மீண்டும் வம்புக்கிழுப்பது?

கடந்த மாதம் மன்றக் கூட்டத்தில் முன்னாள் மேயர்கள் “கேம்ப் ஆபீஸ்” நடத்தியதால் பணம் விரயமாகிவிட்டது என்று திருவாய் மலர்ந்தருளினாய். உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எப்போதும், எந்நேரத்திலும், எங்கேயும் மக்களை சந்திப்பதற்கு வசதியாக கேம்ப் ஆபீஸ்கள் வைத்துக் கொள்வது என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.

வாய்ச் சவடால் வீரர் சைதை துரைசாமி சைதாப்பேட்டை முகவரியை தந்து விட்டு, தாம்பரம் அருகில் உள்ள ராஜகீழ்ப்பாக்கத்தில் பத்து ஏக்கர் பண்ணை பங்களாவில் வசித்து வருகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அறிக்கை எனும் பெயரில் அதை மறுத்து ஒரு மொட்டை அறிக்கை வெளியிட்டிருந்தாய்.

ஆனால், ஒவ்வொரு நாளும் மாநகராட்சி கொடி கட்டிய காரை சைதாப்பேட்டையில் விட்டுவிட்டு வேறொரு காரில் ராஜகீழ்ப்பாக்கத்திற்கு சென்று வருவதை அங்குள்ள போக்குவரத்து காவலர்கள் நன்றாகவே அறிவார்கள். இப்போதும் கேட்கிறேன் நீ ராஜகீழ்ப்பாக்கத்தில் வசிப்பதை மறுத்தால் சிறுதாவூர், கொடநாடு பங்களாக்களுக்கு இணையாக உள்ள இந்த 10 ஏக்கர் பண்ணை வீடு யாருக்குச் சொந்தமானது? துணிவிருந்தால், அதிகாரிகள் சொன்னார்கள், கவுன்சிலர்கள் சொன்னார்கள் என்று மொட்டை அறிக்கைகள் விடுவதை தவிர்த்து நேரடியாக பதிலளித்தால் உனது ஆண்மைத்தனத்தை நான் மெச்சிக் கொள்வேன். இவ்வாறு மா.சுப்பிரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார். nakkheeran.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக