வெள்ளி, 21 நவம்பர், 2014

ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்! சினிமாகாரர் மறந்து போன சிருஷ்டிகர்த்தாக்கள்.

pandian_cropped_tookuவே.மதிமாறன்
இயக்குநர் ருத்ரையா வை 1992 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நண்பர் தீஸ்மாஸ், (Theesmas Desilva) இயக்குநர் அருண்மொழி,(Arunmozhi Sivaprakasam) நான் மந்தைவெளியில இருந்த அவர் வீட்டில் சந்ததித்தோம். நாங்கள் நடத்திய ‘இசைஞானி இளையராஜா ரசிகன்’ இதழின் சிறப்புப் பேட்டிக்காக.
இளையராஜாவுடனான அவர் அனுபங்களைச் சுவரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதும் அவர் அடுத்தப் படத்திற்கான முயற்சியில் இருந்தார்.
அவருடன் பழகியவர்கள், இப்போது அவரைப் பற்றி நெகிழ்ச்சியாக எழுதுவதைப் படிக்கும்போது மனது கலக்கமுறுகிறது.
இதுபோன்ற எழுத்துக்களை அவர் இருக்கும்போது எழுதியிருந்தால்.. அவர் இறந்திருக்க மாட்டார்.
அவரின் சிறப்புகளை நெருக்கமாகச் சொல்லுகிற இந்த எழுத்துக்கள், தனியாக இருந்த அவருக்குத் துணையாக இருந்திருக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற தோழமையான கட்டுரைகள் மூலம் அவர் கொண்டாடப்பட்டிருந்தால்.. அவர் மிகச் சிறந்த 10 சினிமாக்களைத் தந்திருப்பார்.
எம்.எஸ்.எஸ். பாண்டியன் மரணத்தின்போதும் இப்படித்தான் சிறப்புக் கட்டுரைகள் அவரைக் கொண்டாடின.
திறமைசாலிகளைக் கொண்டாடுவதற்கு அவர்கள், ‘தங்கள் உயிரை விட்டிருக்கவேண்டும்’ என்ற நிபந்தனை நம்மிடம் இருக்கிறது.
இரங்கல் கூட்டம் நடத்துவதில் காட்டுகிற வேகத்தை, அவர்களை வைத்துக் கருத்தரங்கம் நடத்துவதில் காட்டியதில்லை.
திரைத்துறையோ, அரசியலோ, பிரபலமானவர்களாக இருந்தால் ‘பிரபலத்திற்கே பிரபலம்’ என்பதுபோல் பாராட்டு விழா, விருது விழா நடத்திக் கொண்டாடுகிறவர்கள்; பிரபலமாகாத திறமைசாலிகளுக்கு அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ் கூடத் தருவதில்லை.
பெற்றோர்களுக்கு உரிய மருத்துவம் செய்யத் துப்பில்லாத மகன்கள், பெற்றோர் இறந்தப் பிறகு செலவு செய்து கருமதி செய்வது ஊர் மெச்சதான் என்பதுபோலவே, நாம் நடத்துகிற பல இரங்கல் கூட்டங்களும் அமைந்து விடுகிறது.
செத்தப் பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக