ஞாயிறு, 9 நவம்பர், 2014

சகாயம் IAS கடந்து வந்த பாதை! இவர் தந்தை பெரியாரின் தயாரிப்பு?

சகாயம் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியும், தவறு செய்தவர்களுக்கு எதிராக இருக்கும்
அடிப்படையில் நேர்மை இல்லாத எவரும் எந்த அதிரடி நடவடிக்கைகள்  மூலமாகவும் தங்களை நீண்டகாலம் நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் தந்தை பெரியாரின் வார்த்தைகளை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் சொல்லுவார், ‘ஒரு லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்து விடுங்கள். ஒரு மகா அயோக்கியனை யோக்கியனாக இந்த சமூகத்தில் விளம்பரப்படுத்திக் காட்டுகிறேன் - பிரபலப்படுத்திக் காட்டுகிறேன் என்று’ பணமிருந்தால் எவரும் இந்த சமூகத்தில் பிரபலப்படுத்திக் கொள்ள முடியும். என்னிடத்தில் இருப்பது சத்தியமும், நீதியும் இந்த சமூகத்திற்குமான உண்மையான பரிவும்’’ என்றும் சொல்கிறார் சகாயம். 
ரு மாலை நேரம்.. காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. மழை விடுவதற்கும், பள்ளிக்கூடம் முடிவதற்கும் சரியாக இருந்தது. ‘ஹே...’வென கத்தியபடி அந்த ஆரம்பப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்தனர்.
பள்ளிக்கூடத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்குப் போகும் வழிநெடுக மாந்தோப்புகள் நிறைந்திருக்கும். சுழற்றி வீசிய சூறாவளி காற்றில் மாந்தோப்பில் மாங்காய் பிஞ்சுகள் சிதறிக்கிடந்தன. செட்டியார் தோப்பிலும் மாங்காய் பிஞ்சுகள் நிறையவே சிதறிக்கிடந்தன.
பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு மாங்காய் பிஞ்சைப் பாத்ததும் மனசு பிரேக் போட்டது. செட்டியார் தோப்பில் இருந்து இரண்டு மாங்காய் பிஞ்சுகளை எடுத்துப் பைக்குள் போட, ‘யாருடா அது...’ - தடியுடன் நின்றிருந்த காவல்காரன் ஓடி வந்தான். சிறுவன் எடுத்தான் ஓட்டம். வீட்டுக்குப் போனதும், அந்த சிறுவன் தான் எடுத்து வந்த மாங்காயை அம்மாவிடம் காட்டி சந்தோஷப்பட்டான்.

‘‘ஏதுடா மாங்காய்...?’’ - சிறுவனின் அம்மா குரலை உயர்த்திக் கேட்டார்.


‘‘செட்டியார் தோப்புல இருந்து எடுத்துட்டு வந்தேம்மா... காவக்காரன் தொறத்தினான். என்னைப் பிடிக்கவே முடியலை தெரியுமா?’’ - பெருமையோடு சொன்னான்.

‘‘நீ செஞ்சது தப்புடா... இந்த மாங்காய் நமக்கானது இல்ல... எங்கே எடுத்தியோ அங்கேயே போய் கொடுத்துட்டு வா... அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை நாம கேட்காம எடுக்குறது தப்பு. கேட்டே வாங்கினாலும் அது தப்புதான்! புரிஞ்சுதா’’ - என்று அந்த அம்மா சொல்ல... புரிந்தவனாகத் தலையாட்டிவிட்டு செட்டியார் தோப்புக்குப் போனான் அந்த சிறுவன். எடுத்த மாங்காயை காவல்காரனிடம் திருப்பிக்கொடுத்தான்.
‘‘போய் சாப்பிடு தம்பி...’’ என்று காவல்காரன் எவ்வளவோ சொல்லியும் மாங்காயை திருப்பிக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான் அந்த சிறுவன். இது நடந்தது அந்த சிறுவன் நான்காம் வகுப்புப் படிக்கும்போது! இப்போது அந்த சிறுவன் நாற்பது வயதைக் கடந்து விட்டார். அம்மா சொல்லிக்கொடுத்தப் பாடம் இன்னும் அவர் நெஞ்சில் இருந்து அகலவில்லை. அந்த சிறுவன் வேறு யாருமல்ல... இன்று நேர்மைக்கு இன்னொரு பெயராக ஊரெங்கும் உச்சரிக்கப்படும் சகாயம் ஐ.ஏ.எஸ். தான்! அப்படிப்பட்ட சகாயத்தை தான் இப்போது நீதிமன்றம் குவாரிகளை ஆய்வு செய்வதற்கான சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறது.

புதுக்கோட்டை அருகில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த  உபகாரம் பிள்ளை - சவரியம்மாள் தம்பதியருக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். அதில் கடைசி மகன்தான் சகாயம். ‘‘ஒவ்வொரு மனுஷனும் வாழ்க்கையில எப்படியெல்லாம் இருக்க போறாங்குறதுக்கான விதை நிச்சயமா அவனோட சின்ன வயசுலயே விதைக்கப்படுது. எனக்கும் அப்படித்தான் விதைக்கப்பட்டது என்பதை நான் நிச்சயமாக நம்புறேன்.

பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சபோதுதான் கலெக்டர் ஆகணும்னா என்ன படிக்கணும்.. என்ற விவரமே எனக்குத் தெரிஞ்சுது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. வரலாறு சேர்ந்தேன். கலெக்டர் ஆகப் போறேன்னு சொன்னவன், வரலாறு படிக்கப் போயிட்டான்னு பேசினாங்க. நான் அதைப் பத்திக் கவலையே படலை. என்னோட எண்ணம் எல்லாமே கலெக்டர் என்பதில் மட்டும்தான் இருந்தது.

மன்னர் கல்லூரியில படிக்கும்போது பாடப் புத்தகங்கள் தாண்டி நிறையப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. அங்கே மூணு வருஷம் முடிச்ச கையோடு சென்னைக்குக் கிளம்பினேன். சென்னை சட்டக் கல்லூரியில பி.எல். சேர்ந்தேன். ஒருவேளை என்னால் கலெக்டர் ஆக முடியாமல் போனால்கூட சட்டம் படித்தால், ஏழை மக்களுக்கு உதவலாம் என நினைத்தேன். ஒருபக்கம் சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாலும் என் மனசு என்னவோ கலெக்டர் கனவிலேயே இருந்தது’’ என்று சொல்லும் சகாயம் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் தன் சொத்துப் பட்டியலை வெளியிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி.
மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுசிங் லோனில் ஒரு வீடு. பேங்க் பேலன்ஸ் 7,172 ரூபாய் என்பதுதான் அவரது சொத்துப் பட்டியல். நாமக்கல்லில் கலெக்டராக இருந்த சமயத்தில்தான் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தார் சகாயம்.

2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல். அது மதுரையில் அழகிரி சொல்வது மட்டுமே நடக்கும் என்று இருந்த காலம். அந்த நேரத்தில்தான் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார் சகாயம். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறியவர்களை கட்சி பாகுபாடு பார்க்காமல் கைது செய்ய உத்தரவு இட்டார். ‘அ.தி.மு.க.காரர் போல செயல்படுகிறார் சகாயம்’ என்று அழகிரி கொந்தளித்தார். வழக்கும் தொடர்ந்தார். ஆனால், சகாயம் தன் நேர்மையில் இருந்து தடம் மாறவில்லை.

மதுரை மக்கள் ஆச்சர்யத்துடன் சகாயத்தைப் பார்த்தார்கள். இன்னும் சிலரோ, ‘மதுரையைக் காக்க மீனாட்சி அம்மன் தான் சகாயத்தின் உருவில் வந்திருக்கிறது’ என்று வாய்விட்டுப் பாராட்டினார்கள். தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மதுரை மாவட்டத்தில் பல பூத்களுக்கு சகாயம் நேரில் சென்றார். வாக்களிக்க வரிசையில் காத்திருந்த இளைஞர்கள் சகாயத்தைப் பார்த்ததும், விரைப்பாக நின்று சல்யூட் அடித்தனர். பெண்களோ, ‘இவருதான் நமக்கெல்லாம் நல்லது பண்ண வந்திருக்கிற கலெக்டர்...’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

‘சட்டத்தின் ஆட்சியை சரியாக செய்து வருகிறார் சகாயம். அவரைப் பாராட்ட வேண்டும். எந்த காலத்திலும் அவருக்கு யாரும் தொந்தரவு கொடுக்கக்கூடாது’ என்று பகீரங்கமாகவே பேசினார் மதுரை ஆதீனம்.

தேர்தல் முடிந்தது ஆட்சி மாறியது. சகாயத்துக்கு அடுத்த சவாலும் வந்தது. ‘மதுரை மாவட்டம் மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் பகுதிகளில் சுமார் 56 கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அரசு குவாரிகளை விடவும் தனியார் பட்டா நிலத்தில் இயங்கும் குவாரிகளே அதிகம். இந்த குவாரிகளால் வெளியூர்வாசிகள் சிலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்றால், உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கிறார்கள். தனியார் பட்டா நிலங்களில் குவாரி நடத்துபவர்கள், அருகிலுள்ள புறம்போக்கு நிலங்களையும் வளைத்து, கோடிகளைச் சம்பாதிப்பது அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கிறது.

இதைக் கண்டும் காணாமல் இருப்பதற்காக இங்குள்ள கிரானைட் கம்பெனிகள் சில, அரசுத் துறையினருக்கு தனியாக மாத சம்பளமே வழங்குகிறார்களாம். இதனால், இந்தப் பகுதிகளில் வி.ஏ.ஓ. வேலைக்கு வருவதற்கே சில லட்சங்களைக் கப்பம் கட்டுகிறார்கள். அந்த அளவுக்குக் காஸ்ட்லியான ஏரியா. இந்த முறைகேடுகள் குறித்து அவ்வப்போது புகார்களும், போராட்டங்களும் வெடித்தாலும், அதிகாரிகள் அப்படியே அமுக்கிவிடுவார்கள். கனிமத்தைச் சுரண்டும் கும்பல், அருகிலுள்ள நீர் ஆதாரங்களையும், விளைநிலங்களையும் பாழ்படுத்துவதால் இந்தப் பகுதியில் விவசாயமும் படுத்துவிட்டது. நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கடைசி நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.’ -இப்படி ஒரு கடிதம் சகாயத்துக்குப் போனது. சாட்டையை எடுத்தார் சகாயம்.

ஒரு தனியார் நிறுவனம் அரசியல் பிரமுகர்கள் சிலருடன் நெருக்கத்தில் இருப்பதும், அந்த நிறுவனமே முறைகேடாக பல்வேறு குவாரிகளை நடத்தி வருவதையும் தன் விசாரணையில் கண்டுபிடித்தார் சகாயம். ‘வேண்டாம் சார்... அவங்க செல்வாக்கான ஆளுங்க. அவங்க மேல கை வெச்சா சிக்கல் வரும்..’ என்று சிலர் சகாயத்தை எச்சரித்தனர். ஆனாலும், கிரானைட் குவாரிகளைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பித்தவர், தன்னிடம் புகார் கொடுத்தவர்களிடம், ‘என்னை ரொம்ப நாளைக்கு இங்கே இருக்கவிட மாட்டாங்கப்பா’ என்று சொல்லிவிட்டுதான் மளமளவெனக் காரியத்தில் இறங்கினார்.
சம்பந்தப்பட்ட அந்த குவாரிக்கு விசிட் போனவர், ‘கண்மாய், குளங்களைத் தூர்த்து விவசாயிகளோட வாழ்வாதாரத்தையே பாழாக்கீட்டீங்களே... இது சுதந்திர நாடுதானா?’ என அங்கே இருந்தவர்களிடம் எகிறினார். அதே வேகத்துடன், அந்த பிரபல குவாரி நிர்வாகம், சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படி எல்லாம் சுருட்டி இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் அறிக்கை தயாரித்தார்.

அவர் அறிக்கை தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், சென்னையில் உள்ள உயரதிகாரி ஒருவரிடம் இருந்து, ‘நீங்க உடனே கிளம்பி சென்னை வாங்க...’ என்று அழைப்பு வந்தது. சென்னைக்குப் புறப்பட்டார் சகாயம். அந்த அதிகாரி ஏதேதோ பேசிவிட்டு கிளம்பும் நேரத்தில், ‘நீங்கள்தான் ஒன் மேன் ஆர்மியாச்சே சகாயம். எங்கே இருந்தாலும் தனி ஆளாப் போராடி சைன் பண்ணுவீங்க... ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தாராம். தலைமைச் செயலகத்தில் இருந்து கிளம்பிய சகாயம் சென்னை ஏர்போர்ட்டுக்கு வருவதற்குள் டிரான்ஸ்ஃபர் உத்தரவு வெளிவந்து விட்டது. கோ-ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.

சகாயம் மதுரையில் கிளம்புவதற்கு முன்பு தான் தயார் செய்த அறிக்கையை ஒரு கடிதமாக தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பிவிட்டுப் புறப்பட்டார்.

அந்தக் கடிதம் இதுதான்....

‘‘மதிப்புக்குரிய தொழில்துறை முதன்மை செயலர் அவர்களுக்கு, வணக்கம்.
மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் அரசு அனுமதி பெற்று குவாரிகள் நடத்தி வரும் பலர் அரசு புறம்போக்கு, பொதுப்பாதைகள், கண்மாய்கள், குளங்கள், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும் எனக்குப் புகார்கள் வந்தன.
இதனால், தமிழக அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அதுகுறித்து நான் விசாரித்தேன். எனது தலைமையில் துணை கலெக்டர்கள், தாசில்தார்கள் என்ற நிலையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது கிரானைட் கற்களை கடத்திய வாகனங்கள் எதுவும் சிக்கவில்லை.

கிரானைட் கற்கள் கடத்தல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது தெளிவாகிறது. மேலூர் பகுதியில் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன. அதனை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், சில பகுதிகளில் ஆய்வு செய்தபோது அனுமதி இல்லாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அறிவுறுத்தியும் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு கிரானைட் உரிமையாளர்கள் மூலம் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதும் ஒரு காரணம். அத்துடன் அதிகாரிகளுக்கு பெருமளவில் நிதி ஆதாயமும் கிடைத்துள்ளது. குறிப்பாக வருவாய்த் துறையில் கீழ் நிலையில் பணியில் இருப்போரும், கனிமவளத் துறை அலுவலர்களும் பெரும் பலனை அடைந்திருக்கிறார்கள்.

அதற்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க நினைத்தபோது கனமவளத் துறையினரிடம் இருந்து முழுமையான தகவல்களை பெற முடியவில்லை. அத்துடன் நான் தணிக்கைக்கு செல்லும் விவரங்களை கிரானைட் உரிமையாளர்களுக்கு சில அலுவலர்கள் முன்னதாகவே தெரிவிக்கும் நிலையும் இருந்தது. கனிம வளம் என்பது தேசத்தின் சொத்து. அதனை தனி நபர்களும், நிறுவனங்களும் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது.

குறிப்பாக, மேலூர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இது நடந்துள்ளது. கிரானைட் கற்கள் கடத்தலால் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்தநிலை தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் திருடப்பட்ட கற்களை கைப்பற்றி பொது ஏலம் விட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாடு கனிமவள நிறுவனமே கிரானைட் கற்களை எடுத்து விற்பனை செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட பறக்கும்படை அமைத்து கிரானைட் குவாரிகளை சோதனை செய்ய வேண்டும்.’’ என்று முடிந்தது அந்தக் கடிதம்.

இந்தக் கடிதம் முதல்வர் கவனத்துக்கும் போனது. அதன் பிறகு நடந்த அதிரடி ஆக்க்ஷனில்தான் பி.ஆர்.பி. கிரானைட் குவாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மதுரையில் இருந்து சகாயம் கிளம்பும்போது சொன்னது இதுதான்....

‘‘எங்கு போனாலும் சகாயம், சகாயமாகத்தான் இருப்பான். இதுவரை கிடைக்காத அனுபவங்களை, இந்த ஓர் ஆண்டில் பெற்றிருக்கிறேன். மனிதர்களைப் படித்தால் மட்டும் போதாது, இடத்துக்குத் தக்க நடக்கும் அதிபுத்திசாலித்தனமும் வேணும் என்பதை மதுரை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!’’

தான் மட்டுமல்ல... தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் சகாயம். ‘‘ஆங்கில நாட்டின் பிரதம அமைச்சராக விளங்கிய சர்.ராபர்ட் வால்போல் ''All those men have their price''  என்று ஆட்சியாளர்களைப் பார்த்து நேர்மையற்றவர்கள் என்ற பொருளில் குறிப்பிட்டதை பொய்யாக்க விரும்பினேன். விளைவு, என் பணிக்காலத்தின் தொடக்கம் முதலே லஞ்சத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை நான் எடுத்து வந்திருக்கிறேன். அதைப் போல என் கீழ் பணியாற்றும் ஊழியர்களில் அபூர்வமான நேர்மையாளர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். அப்படி இருந்தாலும், என் கீழ் பணியாற்றுபவர்களில் குறிப்பிடதக்க எண்ணிக்கையில் லஞ்ச புகார்களுக்கு இடம் கொடுப்பவர்களாய் இருந்தனர். அவர்கள் மீது லஞ்சப் புகார்கள் வருகின்ற போதெல்லாம் கண்டிப்பதற்கும், தண்டிப்பதற்கும் நான் ஒரு காலும் தயங்கியதில்லை.

ஆனாலும், இந்த லஞ்ச சீர்கேடு தொடர்கதையாய் இருந்து தொல்லை தந்ததென்பது தான் உண்மை. லஞ்சத்தைப் பொறுத்தவரைக்கும் நான் உறுதியாக, அது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எதிரானது; நாட்டின் வளர்ச்சிக்கு கேட்டினைத் தருவது; மானுட பண்பாட்டிற்கு மாறானது என நம்புகிறேன். லஞ்சம் பெறுவது என்பது ஏதோ ஒரு பொருளாதார தேவையை பூர்த்தி செய்திடும் வழி என்று சிலர் கருதலாம். ஆனால், லஞ்சம் பெறக்கூடிய ஒரு அரசு ஊழியர் மிக அரிய மனித மான்பான சுயமரியாதையை - தன்மானத்தை இழக்கிறார். அவரிடத்திலிருந்து இயல்பான மனிதாபிமானம் கொஞ்சமாய் குறைகிறது - மொத்தமாய் மறைகிறது. இது எனக்கு வருத்தத்தை அளிக்கக் கூடிய ஒன்று.

சட்டத்தை கம்பீரமாக அமல்படுத்த வேண்டிய அதிகாரமிக்க அலுவலர்கள் லஞ்சத்தால் கோழைத்தனமாய் குறுகிப் போவது என் மனதை பாதிக்கிறது. எனவே, எனக்கு கீழே பணியாற்றுகின்ற அலுவலர்களை தன்மானம் மிக்கவர்களாக, மனிதாபிமானம் கொண்டவர்களாக மாற்றிட வேண்டும் என்று எண்ணி ஒரு வழிகாட்டியான சொற்றொடராக இதை உருவாக்கி பயன்படுத்துகிறேன்.

மேலும், ‘தத்துவங்களே ஆட்சிக்கு அடித்தளம் வகுக்கிறது’ என்கிற கேரக்க நாட்டின் சீரிய சிந்தனையாளன் பிளேட்டோவின் கூற்றுக்கு ஒப்ப, ‘வார்த்தைகளே வரலாற்றை உருவாக்குகின்றன’ என்ற உண்மையை உணர்ந்த நான் ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற சொற்றொடரை நிர்வாகத் தாரக மந்திரமாய், நேர்மைப் புரட்சிக்கு அடிப்படையாய் - அடையாளமாய் என்னுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, எல்லா அலுவலகங்களிலும் எழுதச் சொல்லி பின்பற்ற அறிவுறுத்தினேன். நான் ஏதோ அதிரடியாக செய்ய வேண்டும் என்பதற்காக நேர்மையாக இருக்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த சமூகத்தை ஆழமாக நேசிப்பதும், சமூக அவலங்களை அறுத்தெரிகின்ற ஆவேசமும், நிகரற்ற நீதி உணர்வும் நெடுங்கால நேர்மையும் இல்லாமல் இந்த நிகழ்வுகள் சாத்தியமில்லை.

அடிப்படையில் நேர்மை இல்லாத எவரும் எந்த அதிரடி நடவடிக்கைகள்  மூலமாகவும் தங்களை நீண்டகாலம் நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் தந்தை பெரியாரின் வார்த்தைகளை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் சொல்லுவார், ‘ஒரு லட்சம் ரூபாயை என்னிடம் கொடுத்து விடுங்கள். ஒரு மகா அயோக்கியனை யோக்கியனாக இந்த சமூகத்தில் விளம்பரப்படுத்திக் காட்டுகிறேன் - பிரபலப்படுத்திக் காட்டுகிறேன் என்று’ பணமிருந்தால் எவரும் இந்த சமூகத்தில் பிரபலப்படுத்திக் கொள்ள முடியும். என்னிடத்தில் இருப்பது சத்தியமும், நீதியும் இந்த சமூகத்திற்குமான உண்மையான பரிவும்’’ என்றும் சொல்கிறார் சகாயம்.

இனி சகாயம் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியும், தவறு செய்தவர்களுக்கு எதிராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் கிரானைட் விசாரணையில் அவரை முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தொடர்கிறது. எல்லா எதிர்ப்புகளையும் மீறி நடந்த ஊழல்களை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

-கே.ராஜாதிருவேங்கடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக