ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் பலி - அல் பக்தாதியும் பலியா? அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் நடத்திய அதிரடி குண்டு வீச்சுத் தாக்குதல்

ஈராக்கின் வட மேற்குப் பகுதியில் அமெரிக்க விமானப்படை போர் விமானங்கள் நடத்திய அதிரடி குண்டு வீச்சுத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வட மேற்கில் உள்ள குவாயிம் என்ற நகரில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் கூடி ஒரு கூட்டம் நடத்தியபோது அந்த இடத்தைக் குறி வைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் சிக்கி பல முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. அன்பர் என்ற மாகாணத்தில் இந்த குவாயிம் நகர் உள்ளது. சிரிய நகரான புகாமலுக்கு அருகே உள்ளது. இது பாலைவனப் பகுதியாகும். இந்தத் தாக்குதலில் பல முக்கியத் தலைவர்கள் பலியாகி விட்டதாக நம்புகிறோம். யாரெல்லாம் கொல்லப்பட்டனர் என்ற தகவலுக்காக காத்திருப்பதாக ஈராக் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்தத் தாக்குதலில், இஸ்லாமியக் குடியரசின் இரண்டு பிராந்திய கவர்னர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டம் நடந்தபோது அங்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரும்,அவர்கள் நிறுவிய இஸ்லாமியக் குடியரசின் அதிபருமான அபு பக்கீர் அல் பக்தாதியும் இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. எனவே அவர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அல் பக்தாதி அஙற்கு இருந்தாரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்று ஈராக் தரப்பு கூறுகிறது. இருப்பினும் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியிருக்கலாம் என்று ஈராக் அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர். ஒருவேளை அல் பக்தாதி அங்கு இருந்து அவர் கொல்லப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய வெற்றியாக அமையும் என்று ஈராக் நம்புகிறது. நம்பிக்கையுடனும் உள்ளது. அல் பக்தாதி கொல்லப்பட்டால் அது நிச்சயம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பெரும் அடியாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையே, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்த ஆய்வாளரான ஈராக்கைச் சேர்ந்த ஹிஷம் அல் ஹஷிமி கூறுகையில், தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில், இஸ்லாமியக் குடியரசின் அன்பர் மாகாண தலைரான அபு முஹன்னத் அல் ஸ்வதேவி, சிரியாவின் டெய்ர் அல் ஸோர் மாகாண தலைவரான அபு ஸஹரா அல் மஹமதி ஆகியோர் அங்கு இருந்தனர் என்பது உண்மைதான். இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக எனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐஎஸ்ஐஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக