திங்கள், 10 நவம்பர், 2014

எந்த கல்லையும் பொறிக்கி எறிந்து பார்க்கும் பார்பனீயம்! தினமணி,குருமூர்த்தியின் வாசன் பாசம்?

 பாவம் வாசன்! - சுபவீ சிறப்புக் கட்டுரை:
  சில கட்டுரைகளில் நஞ்சு கலந்திருக்கும். சில கட்டுரைகளோ நஞ்சினாலேயே எழுதப் பட்டிருக்கும். எஸ். குருமூர்த்தியின் தினமணிக் கட்டுரை (08.11.14) இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதுவும் சாதாரண நஞ்சு இல்லை, சாதிய வெறி கலந்த நஞ்சு! மேலோட்டமாகப் படிக்கும்போது, அது ஜி.கே. வாசனுக்கு இலவச அறிவுரைகளை அள்ளித் தருவதற்காக எழுதப்பட்ட ஒன்றாகத் தெரியும். ஆனால் அதன் உள்நோக்கம் வேறு. திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவதற்கும், காயப்படுத்துவதற்கும் யார் ஒருவரையும் பயன்படுத்திக் கொள்ள முயல்வது அவாளின் இயல்பு. இப்போது வாசன் அதற்குப் பயன்படுவாரா என்ற ஆசையில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது போன்ற வன்மம் நிறைந்த கொடூரமான கட்டுரைகளை வெளியிடுவதற்கு அவர்களிடம் தினமணி போன்ற 'நடுநிலை' நாளேடுகள் உள்ளன! வாசன் போன்றவர்கள் எப்படியாவது திராவிடக் கலாசாரத்தை ஒழிக்க வேண்டுமாம். ஏன் என்றால்,அது 'ஹிந்து ஆன்மிக விரோத, தேசிய விரோத' இயக்கமாம். எது ஹிந்து விரோதம்? ஹிந்துக்கள் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்திற்குப் பெயர் சூட்டி பின் அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ள மக்களைக் கோவிலுக்குள் வரக் கூடாது என்று சொல்வதுதான் ஹிந்து விரோதம். நாய்களைப் பன்றிகளைக் கூடத் தீண்டலாம், ஆனால் அந்த மக்களைத் தீண்டக் கூடாது என்று சொன்னதுதான் ஹிந்து விரோதம். ஹிந்துக் கோயில்களின் கருவறைக்குள் வெறும் மூன்று சதவீதம் பேர் மட்டும்தான் உள்ளே போகலாம் என்று சட்டம் வகுத்ததுதான் ஹிந்து விரோதம். சொந்தச் சகோதரர்களை நான்கு வருணங்களாகவும், நான்காயிரம் சாதிகளாகவும் பிரித்து வைத்து,அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பித்ததுதான் ஹிந்து விரோதம். இத்தனை ஹிந்து விரோதச் செயல்களையும் செய்தது யார்? திராவிட இயக்கமா? இவைகளை எல்லாம் ஒழிக்கப் போராடிய இயக்கம் அன்றோ அது! அதனால்தான் குருமூர்த்திகள் கோபப்படுகிறார்கள். சாதிச் சட்டகத்தின் கோபுரத்தில் அமர்ந்திருந்தவர்களைச் சந்ததிக்கு இழுத்து வந்து விட்டார்களே என்று சினம் கொள்ளுகிறார்கள்! பாவம் வாசன்! - சுபவீ சிறப்புக் கட்டுரை பொங்கியெழுந்த கோபத்தால் எதனையும் பொருள்படச் சொல்ல முடியவில்லை குருமூர்த்தியால்! முன்பின் முரணாகப் பேசுகின்றார். இதோ அவருடைய எழுத்துகளைப் பாருங்கள்..... "1967லிருந்து இன்றுவரை ஒன்று மாற்றி ஒன்று திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான். 1967க்குப் பிறகு,திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தால் தேசிய மரபுகள் மறைந்து, தேசிய தமிழக அரசியல் குறுகி, மாநில அராசியலாக மாறியது....தமிழகத்தில் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்த தேசிய நீரோட்டம் நாளடைவில் குறுகிக் குறுகி ஒரு சிறு நீரோடையாக - சொல்லப்போனால் - சாக்கடையாக மாறியது." இப்படி எழுதுகிறார் குருமூர்த்தி. அதாவது இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆண்டதால் இங்கு தேசிய நீரோட்டம் இப்போது சாக்கடையாக ஆகிவிட்டதாம். (பாவம், சாக்கடையில் நின்றுகொண்டுதான் இவர்கள் இப்போது தேசிய அரசியலை இங்கு நடத்துகிறார்கள் போலும்!). எனவே இரண்டு கட்சிகளையும் ஒரே மாதிரியாகப் பாவிப்பது போன்ற ஒரு தோற்றம் இங்கு ஏற்படுகிறது. ஆனாலும் அடுத்த சில வரிகளிலேயே 'பூனைக் குட்டி வெளியில் வந்து விடுகின்றது.' அவர் எழுதுகிறார்....... "அவருக்கு (ஜெயலலிதா) எதிரான வழக்கில் சாரம் இல்லை. அதனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையலாம் என்றும் சில நடுநிலை சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். அப்படி நடந்தால் தமிழக அரசியல் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும். இல்லை என்றால், தமிழக அரசியலில் தீர்க்க முடியாத குழப்பம் நீடிக்கும்." இரண்டு கட்சிகளும் ஒன்றுதான் என்றால், ஜெயலலிதாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதில் குருமூர்த்திக்கு அப்படி என்ன ஆர்வம்? அவர் வழக்கில் சாரமில்லை என்று சொல்லும் நடுநிலைச் சட்ட நிபுணர்கள் யார் யார்? திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் குருமூர்த்தி, ஜெயலலிதாவை மட்டும் ஏன் ஆதரிக்கிறார்? பெயருக்கு இருவரையும் ஒப்பிடுகின்றாரே தவிர, ஜெயலலிதா திராவிடக் கட்சி நடத்தவில்லை என்பது குருமூர்த்திக்குத் தெரிகின்றது. ஆனால் அவரிடம் சிக்கியுள்ள 'சிறந்த அடிமைகளுக்குத்' தெரியவில்லையே! அகில இந்திய அளவிலான பா.ஜ.க.வின் எழுச்சி, தமிழ்நாட்டிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சிந்தனையாளர்கள் பலர் நினைக்கிறார்கள்" என்கிறார் குருமூர்த்தி. யார் அந்தச் சிந்தனையாளர்கள்? சோவும், குருமூர்த்தியும்தானே? தாங்கள் நினைப்பதை நாடு நினைப்பதாகவும், தங்களுக்கு ஆபத்து வந்தால் நாட்டுக்கே ஆபத்து என்றும் சொல்லிப் பழகி விட்டவர்கள் அல்லவோ அவர்கள்! திராவிட இயக்கக் கோட்பாடுகளை எல்லாம் தாண்டி, "50 ஆண்டுகளுக்கு முன் எந்த அளவுக்கு தெய்வ நம்பிக்கை தமிழ்நாட்டில் இருந்ததோ அதை விடப் பலமடங்கு இப்போது வளர்ந்து இருக்கின்றது" என்று எழுதிப் பூரித்துப் போகின்றார் குருமூர்த்தி. தெய்வ நம்பிக்கை பலமடங்கு வளர்ந்திருக்கிறதே, கொலையும் கொள்ளையும், குற்றங்களும் நாட்டில் குறைந்திருக்கின்றனவா? அதே அளவுக்கு அவையும் கூடியுள்ளன என்பதுதானே உண்மை? பிறகு உங்கள் தெய்வ பக்தி வளர்ந்தால் என்ன, வளராவிட்டால் என்ன? திராவிட இயக்கம், ஹிந்து மதத்தை மட்டுதான் தாக்குகிறது என்னும் பழைய, புளித்துப்போன குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். கடவுள் மறுப்பு என்பது எப்படி ஹிந்து மதத்திற்கு மட்டும் எதிரானதாகும்? அது அனைத்து மதக் கோட்பாட்டிற்கும் எதிரானதுதான். எனினும் திராவிட இயக்கம் ஹிந்து மதத்தைக் கூடுதலாகத் தாக்குவது உண்மையே! ஏனெனில், இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர் முதலான எந்த மதத்தினரும் கோடிக்கணக்கான தமிழரகளைச் சூத்திரர் என்றோ பஞ்சமர் என்றோ கூறி இழிவு செய்வதில்லை. யார் எங்களை அவ்வாறு சொல்லி இழிவு படுத்துகின்றானோ அவனை எதிர்க்கும் 'சுயமரியாதை' எங்கள் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது, கிடக்கும்!  "வாசன் நல்லவவர்தானாம்" - சான்றிதழ் கொடுத்துவிட்டார், நன்னடத்தை அதிகாரி குருமூர்த்தி! பொத்தாம் பொதுவாகக் கொடுக்கப்படும் 'நல்லவர்' பட்டத்திற்கு பொருள் என்ன என்று நமக்குத் தெரியாதா என்ன! அரசியல், இலக்கிய, திரைப்படம் என எந்தத் துறையாக இருந்தாலும் அவாளை நேரடியாக எதிர்க்காதவர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்கள் ஆதிக்கத்தையோ, சாதி இழிவையோ, தீண்டாமையையோ எதிர்த்தால், அவர்கள் எல்லோரும் 'துஷ்டர்கள்.' நல்லவரான வாசன் வல்லவராகவும் ஆக வேண்டுமே என கவலைப்படுகிறார் குருமூர்த்தி. "அதற்கு சரியான தலைவர்களையும், அறிவு ஜீவிகளையும்,ஆலோசகர்களையும் அவர் நாட வேண்டும்" என்பது இவர் தரும் அறிவுரை. அதாவது, எவன் ஒருவன் ராஜாவாக வேண்டுமானாலும், இந்த 'ராஜகுரு'க்களை மறந்துவிடக் கூடாது என்கிறார். திராவிடக் கட்சிகளை (அதாவது தி.மு.க.வை) ஒழிப்பது என்பதைத் தவிர, தேர்தல் வெற்றி பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது என்றும் வாசனுக்கு ஆலோசனை கூறுகின்றார். தேர்தல் வெற்றி ஜெயலலிதாவிற்கோ, பா.ஜ.க.விற்கோ உரியதாக இருக்க வேண்டுமே அல்லாமல், வாசன் உள்பட எந்தச் சூத்திரனுக்கும் போய்விடக் கூடாது. எனவே 'கடமையைச் செய்ய வேண்டுமே அன்றி பலனை எதிபார்க்கக் கூடாது'. "தோல்வியைச் சந்திக்கும் தைரியம் யாருக்கு இருக்கிறதோ, அவர்தான் வெற்றி அடைய முடியும்" -இதுவும் குருமூர்த்தி தத்துவம்தான் இந்தத் தத்துவத்தை மோடியிடம் அவர் எப்போதும் சொல்லமாட்டார். வாசனுக்கு அவர் தரும் முத்தாய்ப்பான அறிவுரைகள் இரண்டு. ஒன்று, அரசிடம் இருக்கும் அறநிலையத் துறையை மீட்டு, ஆன்மிகவாதிவாதிகள் கைகளில் ஒப்படைப்பேன் என்று கூறும் அரசியல் தலைவரை நாடு எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறதாம். அதனை பா.ஜ.க. செய்வது சாதாரணமாம். வாசன் செய்தால் அது ஆன்மிகப் புரட்சியாம். ம்ம்...இன்னொரு புரட்சித் தலைவருக்கு ஏங்குகிறார்கள் போலிருக்கிறது! இரண்டாவது அறிவுரை... பணத்திற்குத் தங்கள் வாக்குகளை மக்கள் விற்கக் கூடாது என்று ஒவ்வொரு கோயிலாய்ப் போய் அவர் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம்! பாவம் வாசன்! அவருக்குக் காவி கட்டி, திருநீறு பூசிப் பஜனை மடத்திற்கு அனுப்பி விடுவார்கள் போலிருக்கிறது!
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக