ஞாயிறு, 30 நவம்பர், 2014

குளித்தலை தொகுதியில் கனிமொழி போட்டி?

வரும் சட்டசபை தேர்தலில், மயிலம், விழுப்புரம், குளித்தலை ஆகிய மூன்று தொகுதிகளில், எதாவது ஒன்றில் கனிமொழி எம்.பி., போட்டியிட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கனிமொழி ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தி.மு.க.,வில், உட்கட்சி தேர்தல், அடுத்த மாதம் முடிவடைகிறது. அதன்பின், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பித்து, ஓராண்டில் 5,000 பொதுக்கூட்டங்களை, தமிழகம் முழுவதும் நடத்த கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான் என்பது முடிவாகி விட்டது. தி.மு.க.,வுக்கு வன்னியர், முத்தரையர், நாடார் சமுதாய ஓட்டுகள் இருக்க வேண்டும் என சொல்லி, அந்த ஓட்டுக்களை கவருவதற்கு, திட்டம் தீட்டி கொடுத்துள்ளார் கனிமொழி. வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தினர், 120 தொகுதிகளில் செல்வாக்காக இருப்பதால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில், 60 தொகுதிகளில் வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.
இதனால், வன்னியர்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு அதிகரிக்கும் செல்வாக்கை வைத்து, வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான மயிலம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் கனிமொழியை போட்டியிட வைக்கவும் அவரது ஆதரவாளர்கள் விருப்பப்படுகின்றனர். அதேபோல, டெல்டா மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் முத்தரையர்களுக்கும் கட்சியிலும் வேட்பாளர் பட்டியலிலும் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், அந்த சமூகத்தினர் மத்தியிலும் தி.மு.க.,வுக்கு செல்வாக்கு கூடும் என, கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி செய்யப்பட்டால், முத்தரையர்கள் அதிகமாக உள்ள குளித்தலை தொகுதியில், கனிமொழி போட்டியிட வேண்டும் என, திருச்சி மாவட்ட தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். இந்த தொகுதிதான், கருணாநிதி போட்டியிட்டு வென்ற முதல் தொகுதி என்பதால்,சென்டிமென்ட்டாகவும் இந்த தொகுதியை கனிமொழி தேர்வு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக