செவ்வாய், 25 நவம்பர், 2014

ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை”? உச்சநீதி மன்றம் தீர்ப்பு?

மதச்சார்பின்மை வரையறுக்கப்படாதது இருக்கட்டும். மதம் என்றால் என்னவென்று வரையறுப்பது மத உரிமையைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருந்தது. ஏனென்றால் ஆணாதிக்கத்திலிருந்து தொடங்கி சாதி ஆதிக்கம், நிலவுடைமை ஆதிக்கம் வரையிலான அனைத்து வகை ஆதிக்கங்களுமே மத ஒழுக்கமாகவும் மத சம்பிரதாயமாகவும் மதச்சட்டமாவும் பின்னர் அதுவே அரசின் சட்டமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த ஆதிக்க உணர்வுகளையும் மத உணர்வுகள் என்று தான் மதவாதிகள் கூறி வருகின்றனர். இதனடிப்படையில்தான் மதத் தனிநபர் சட்டங்களையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.
நவீன “இந்தியக் குடியரசு” அமையும் சந்தர்ப்பத்தில் இதற்கு முடிவு கட்ட விரும்பிய அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

“மதத்தின் சாரம் (தீன்) என்பதைப் பொறுத்தவரை வழிபாடு மற்றும் நம்பிக்கை தொடர்பான சடங்குகள்தான் (இபாதத், இதிகுவாதத்) மாற்றக் கூடாதவை; மற்றவை (அதாவது ஷரியத் சட்டம் போன்றவை) மாறலாம்” என்ற நிலையை மவுலானா அபுல் கலாம் ஆசாத் மேற்கொண்டார்.
இந்து என்பது வெறும் மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை (சநாதன தருமம்) என்று கூறும் பார்ப்பன மதவாதிகளும், இசுலாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் (வாழ்க்கை நெறி) என்று கூறும் இசுலாமியப் பழமைவாதிகளும் இணைந்து நின்று அம்பேத்கரின் கருத்தை எதிர்த்தனர்.
பெரியாரைப் போன்று அம்பேத்கர் நாத்திகர் அல்ல. மனிதனின் ஆனமீகத் தேவையை நிறைவு செய்ய மதம் அவசியம் என்ற கருத்து கொண்டவர் என்பதையும் இங்கே நினைவிற்கொள்ள வேண்டும். ஆன்மீக உரிமையைக் காட்டிலும் ஆதிக்க உரிமையில் அதிக நாட்டம் கொண்ட மதவாதிகள்தான் இறுதியில் வெற்றி பெற்றனர். மதம் மற்றும் மத உரிமையை இன்னதென்று வரையறுக்காமல் அந்தப் பொறுப்பை பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையின் தோள்களுக்குத் தள்ளிவிட்டது அரசியல் நிர்ணய சபை.
அன்று தொடங்கி இன்று வரை பாராளுமன்றம் அந்தப் பணியை மேற்கொள்ளவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக எது மத உரிமை, எது மத நம்பிக்கை என்பதை ஆய்ந்து தீர்ப்பு சொல்லும் வேலையை உச்சநீதி மன்றம்தான் செய்து வருகிறது.
சுதந்திரமா, சமத்துவமா?
அரசியல் சட்டத்தின் 25 மற்றும் 26- வது பிரிவுகள் வழங்குகின்ற மதச் சுதந்திரத்தின் அடிப்படையில் தான் அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுமே அதிகாரம் பெறுகின்றன. அதாவது குறிப்பிட்ட மதத்தில் ஒரு இந்தியக் குடிமகன் பிறந்தான் என்ற காரணத்தைக் கொண்டு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவனது சிவில் வாழ்க்கையில் தலையிட்டு அதிகாரம் செய்யும் உரிமையை இந்தச் சட்டப் பிரிவுகள்தான் மதத்திற்கு அளிக்கின்றன.
இந்திய உச்சநீதி மன்றம்
நீதிமன்றமே புரோகிதனாக
அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறுகிறது; 15-வது பிரிவோ மதம், இனம், பால் வேறுபாடுகளுக்காக குடிமக்கள் யாரிடமும் அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கூறுகிறது.
குடிமகன் என்ற முறையில் ஒரு தனிநபரின் சமத்துவ உரிமையும், அந்தத் தனிநபரின் மேல் ஆதிக்கம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உள்ள சுதந்திரமும் மோதிக் கொள்ளும் போது – அதாவது ஷாபானுவின் மீது ஷரியத் ஆதிக்கம் செய்யும் போது, இந்துப் பெண்ணுக்குச் சொத்துரிமை மறுக்கப்படும் போது, சட்டப்பிரிவு 24-ற்கும் 14-ற்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது, அதாவது சுதந்திரமும், சமத்துவமும் மோதிக்கொள்ளும் போது நீதிமன்றம் என்ன செய்யும்?
நீதிமன்றமே புரோகிதனாக
இந்த இடத்தில்தான் ‘ மதம் ‘ என்பதற்கு உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
“மதத்தை கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம்” அளிக்கும் சட்டப்பிரிவு 25- ல் கண்டுள்ள மதம் என்ற சொல்லின் பொருளை விளக்கிய உச்சநீதி மன்றம், “வெறும் நம்பிக்கை மட்டும்தான் மதம் என்று கூறிவிட முடியாதெ”ன்றும் ஒரு மதத்தின் உயிராதாரமான விசயம் எது என்பதை “அந்தக் குறிப்பிட்ட மதத்தின் கோட்பாடுகளைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும்” என்றும் கூறியது.
“எந்த ஒரு பிரிவினரும் தங்களது மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையை” வழங்குகின்ற சட்டப்பிரிவு 26(பி) –ல் கண்டுள்ள “மதம் சம்பந்தப்பட்ட விவகாரம்” என்ற சொற்கோர்வையை உச்சநீதி மன்றம் கீழ்க்கண்டவாறு வியாக்கியானம் செய்தது.
“அதேபோல கோயிலில் யார் யார் நுழைந்து வழிபாடு நடத்தலாம், அவர்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதும் மத சம்பந்தப்பட்ட விவகாரம் தான்.”
அனைத்து அதிகாரமும் மத குருமாருக்கே
குறிப்பிட்ட மதத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இந்தியக் குடிமகன், மேற்படி விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்தால் அவனை ” மதத்தின் அடிப்படையில் சமூகப் புறக்கணிப்பு செய்யும் உரிமையும் மதகுருமார்களுக்கு உண்டெ”ன்றும் அது ‘தனது சிவில் உரிமையைப் பாதிப்பதாக‘ ஒரு குடிமகன் முறையிட முடியாதென்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறாக, மதம் என்பதற்கு உச்சநீதி மன்றம் கூறியுள்ள விளக்கங்கள் அனைத்துமே ஒரு குடிமகனின் சமூக வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்திற்கு சட்ட அங்கீகாரம் தருபவை; மதத்தைத் தனிநபரின் நம்பிக்கை என வரையறுக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிரானவை. எனவே குடிமகனின் சமத்துவ உரிமைக்கும் மதத்தின் சுதந்திரத்திற்குமான மோதலில் உச்சநீதி மன்றம் மதத்தைத்தான் ஆதரித்து வருகிறது.
மதத்தின் ஒழுக்கமும் அரசின் ஒழுக்கமும்
சங்கராச்சாரி, சத்யமூர்த்தி
தேவதாசி முறை, உடன்கட்டையேறுதல் (சதி), பலதார மணம் ஆகிய கொள்கைகளனைத்தும் இந்து மதத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடுகளாக இருந்தவைதான். என்பதை சங்கராச்சாரி முதல் சத்தியமூர்த்தி வரை பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இருப்பினும், பொது ஒழுங்கு, நலவாழ்வு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றின் அடிப்படையில் மதச் சுதந்திரத்தை முறைப்படுத்தும் உரிமை அரசுக்கு இருப்பதாக சட்டப்பிரிவு -25(1) கூறுகிறது.
நல்லொழுக்கத்தின் மொத்தக் குத்தகைதாரரான மதத்திடமிருந்து ஒழுக்கத்தை நிலைநாட்டும் உரிமையை அரசு கைப்பற்றிக் கொள்ளும் இந்தச் சட்டப்பிரிவு மேற்கத்திய ஜனநாயக, மற்றும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் ஒரு முக்கியமான அம்சமாகும்.
இந்துக் கோயில்களின் கருவறையில் பார்ப்பனரல்லாதார் நுழைவதற்கு நிலவும் தடை, கிறித்தவப் பெண்கள் மண விலக்குப் பெறுவதில் உள்ள ஆகப் பிற்போக்கான தடைகள், இசுலாமிய ஆண்களின் நான்கு தார மண உரிமை போன்ற ஒழுக்ககேடான மத சம்பிரதாயங்களை, அரசு தன்னுடைய கையில் வைத்திருக்கும் ஒழுக்க நெறியை நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழித்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை? ஏனென்றால், ‘சர்வ தர்ம சம பாவ‘ என்ற மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் ஒளியில்தான் ஒழுக்க நெறி குறித்த தனது வரையறைகளை அரசு ஏற்படுத்திக் கொள்கிறது. அதாவது மதத்தின் ஒழுக்க நெறியே அரசின் ஒழுக்க நெறி!
இமாலயப் பொய்
தேவதாசி முறை, உடன்கட்டையேறுதல் (சதி), பலதார மணம் ஆகிய கொள்கைகளனைத்தும் இந்து மதத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடுகளாக இருந்தவைதான். இதை சங்கராச்சாரி முதல் சத்தியமூர்த்தி வரை பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும், மேற்கூறிய மதச் சம்பிரதாயங்களைத் தடை செய்ய வேண்டிய சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே சட்டப்பிரிவு 25(1) தனக்களித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்து மதத்தின் ‘தீய ஒழுக்கங்களை’ அரசு ஒழிக்கவில்லை. மாறாக ” இந்தப் பழக்கங்கள் இந்து மதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் அல்ல” என்று ஒரு இமாலயப் பொய்யைச் சொல்லி அதனடிப்படையில் தடை செய்தது.
இவ்வாறு புளுகியதன் நோக்கம் இந்து மதத்தின் கவுரவத்திற்குக் களங்கம் வந்துவிடக்கூடாதே என்ற அச்சம் மட்டுமல்ல; மதத்திற்கு ஒழுக்க நெறியைக் கற்பிக்கும் பணியைச் செய்வதன் மூலம், மதச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு ‘தவறான’ முன் மாதிரியை உருவாக்கி இந்திய மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படையைத் தகர்க்க அரசு (அதாவது நீதிமன்றம் உள்ளிட்ட அரசு ) விரும்பவில்லை என்பதுதான்.
பார்ப்பனச் சூது!
பாஜக
மதவிவகாரங்களில் அரசுத் தலையீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா கும்பல், அரசின் இந்த அதிகாரத்தையும் பறிக்க வேண்டுமென ஏன் கோரவில்லை என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.
வேறொரு கோணத்திலிருந்து இதைப் பரிசீலிப்போம். இந்துக் கோயில்களின் உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி இல்லை என்ற விதியும், பார்ப்பனரல்லாதார் கருவறைக்குள் நுழைய முடியாது என்ற விதியும் ஆகமவிதிகளில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவை ஏற்க நினைத்த சனாதனிகள் (அரசு) முதலில் சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் குருமார்களிடம் இதற்கு ஒப்புதல் பெற்றுக் கொண்டனர். இது மதவாதிகளுடனான சமூக ரீதியான சமரசம்.
அடுத்து, சட்டரீதியாக இதை அமல்படுத்தும் போது தேவதாசி ஒழிப்புக்குக் கூறியதைப் போல “ஆகம விதிகள் என்பவை இந்து மதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் அல்ல” என்று வியாக்கியானம் செய்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யப் போனால் கோயில்களின் மீதான அதிகாரத்தையே பார்ப்பனர்கள் இழக்க நேரும்.
எனவேதான் மதச் சுதந்திரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 25- இல் உட்பிரிவு (2) சேர்க்கப்பட்டது. ” தாழ்த்தப்பட்டோரைக் கோயிலுக்குள் அனுமதிப்பது மதச்சுதந்திரத்தைப் பாதிப்பதாகாது” என உட்பிரிவு கூறுகிறது. மேல் பார்வைக்குத் தாழ்த்தப் பட்டோரின் உரிமையைப் பாதுகாப்பதற்கான சரத்து போலத்தோற்றமளிக்கும் இந்த உட்பிரிவின் உண்மையான நோக்கம் ஆகம விதிகளைப் பாதுகாப்பதுதான்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக 1970 இல் தி.மு.க அரசு இயற்றிய சட்டம், மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும், “ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை” என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.
இந்து மதச் சம்பிரதாயங்களில் அரசு  தலையீடு செய்து பல விசயங்களைத் திருத்தியமைத்துள்ளதென்றும், பிறர் (முசுலீம்கள்) தான் இதை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் பாரதீய ஜனதா முதல் நீதிபதி குல்தீப் சிங் வரை பலரும் பிரச்சாரம் செய்கின்றனரே, அந்த ‘அரசுத் தலையீட்டின்‘ சட்ட ரீதியான லட்சணம் இதுதான்.
மதம் மற்றும் மத உரிமை குறித்து இதுவரை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளின் சாரம் வருமாறு.
“மதம் மற்றும் மத உரிமை பற்றி எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்த ஒரு வரையறையும் அரசு ஏற்படுத்தவே முடியாது. எனவே எல்லா மதத்தினரின் உரிமைகளும் சம்மானதோ,ஒரு சீரானதோ அல்ல. (அதாவது கத்தி வைத்துக் கொள்ளும் சீக்கியனின் மத உரிமை தனக்கும் வேண்டுமென ஒரு முசுலீம் கோர முடியாது )”
“ஒரு குடிமகனின் மதச்சார்பற்ற உரிமையைக் காட்டிலும் மதத்தின் உரிமையே மேலானது.”
பாரதீய ஜனதாவின் பொருள் பொதிந்த மவுனம்
ஆயினும், “பொது ஒழுங்கு, நல வாழ்வு, ஒழுக்கநெறி” ஆகியவற்றின பெயரால் மதச் சுதந்திரத்தில் தலையிட்டுக் கட்டுப் படுத்துவதற்கு அரசிற்கும் நீதிமன்றத்திற்கும் சட்டப்பிரிவு 25,26 –ல் உரிமை இருக்கத்தான் செய்கிறது.
மதவிவகாரங்களில் அரசுத் தலையீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா கும்பல், அரசின் இந்த அதிகாரத்தையும் பறிக்க வேண்டுமென ஏன் கோரவில்லை என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.
இவ்வாறு செய்வது இசுலாமிய, கிறித்தவ மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்பை அரசிடமிருந்து பறித்து விடும் என்பது ஒரு காரணம். மேலும்,அரசின் செல்வாக்கிலிருந்து மதத்தை விடுவிப்பதல்ல அக்கட்சியின் நோக்கம்; மதத்தின் சித்தாந்தச் செல்வாக்கின் கீழ் அரசைக் கொண்டு வர முயலும் ஒரு பாசிசக் கட்சியே அது. எனவே அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்தச் சட்டப்பிரிவுகள் தனக்குத் தடையாக இல்லாத வரையில் இவற்றை எதிர்க்க வேண்டிய அவசியம் பாரதீய ஜனதாவிற்கு இல்லை.
செங்கல் ஊர்வலம் நடத்துவதற்கும், ரதயாத்திரை நடத்துவதற்கும், கடப்பாறையுடன் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் நடத்துவதற்கும், மகாஆரத்தி என்ற பெயரில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டுவதற்கும், பாரதீய ஜனதா இந்து முன்னணிக் கும்பலுக்கு மதச்சுதந்திரத்தை அளிப்பவை சட்டப்பிரிவு 25-ம், 26-ம் தான்.
‘பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நலவாழ்வு’ ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை அரசோ, நீதி மன்றமோ தடுத்ததில்லை எனும்போது அரசின் இந்த ‘காகித அதிகாரம்’ குறித்த பாரதீய ஜனதா கவலை கொள்ள அவசியமில்லை.
அரசு அவ்வாறு தலையிட முயன்ற சந்தர்ப்பங்களில், எடுத்துக் காட்டாக, ‘பாபர் மசூதியா – இராம ஜன்ம பூமியா’ என்ற கேள்வியை உச்சநீதி மன்றத்தின் முடிவுக்கு ராவ் அரசு அனுப்பிய போது “மத நம்பிக்கை குறித்த விசயங்களில் எந்த நீதிமன்றமும் தீர்ப்பு வழங்க இயலாது” என்று அறிவித்ததன் மூலம் சட்டப்பிரிவு 25,26 –இன்படி உச்சநீதி மன்றத்திற்குரிய அதிகார வரம்பை பாரதீய ஜனதா நினைவுபடுத்தியது.
இறுதியாக கடந்த ஜுலை மாதம் வெளியான உச்சநீதி மன்றத் தீர்ப்பொன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
நீதிமன்றத்தின் ஒப்புதல் வாக்குமூலம்
“முசுலீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க எனக்கு வாக்களியுங்கள்” என்ற சுவரொட்டி வெளியிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றதால், “தாஸ் ராவ் தேஷ்முக் என்ற சிவசேனா எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது” என்ற பம்பாய் உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார் தேஷ்முக். மதத்தின் பேரால் ஓட்டுக் கேட்டதற்காக அல்ல, முசுலீம் எதிர்ப்பைத் தூண்டியதற்காக தேஷ்முக்கின் தேர்தல் செல்லாது என உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. நீதிபதிகள் ஜி.என்.ரே, பைசானுதீன் ஆகியோர் கீழ்க்கண்ட கருத்துக்களையும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
“இத்தகைய கட்சிகள் தேர்தலிலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்பதை சட்டம் அங்கீகரிக்கின்ற வரையில் இந்தச் சூழ்நிலையை (அதாவது மதத்துவேசம் தூண்டப்படுவதை) தவிர்க்க இயலாது.”
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பாரதீய ஜனதாவின் மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை உறுதி செய்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதி மன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் நமது அரசியல் சட்டத்தின்படி, ” மதமும் அரசியலும் கலக்கக் கூடாது” என்று குறிப்பிட்டனர்.
தற்போதைய தீர்ப்போ, அரசியல் நோக்கத்திற்கு மதத்தைப் பயன்படுத்துவதை நிலவுகின்ற அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
மதத்தை அரசியல் நடவடிக்கையாகவும், அரசியலை மதச் சடங்காகவும் ஒரே நேரத்தில் நடத்திவதற்கு வாய்ப்பளிக்கும் இந்த ‘மதச்சார்பற்ற’ அரசியல் சட்டத்தை பாரதீய ஜனதா ஏன் எதிர்க்கப்போகிறது?
அனைத்து மதங்களுக்கும் சம உரிமை தருவதாக ஏட்டளவில் கூறுகின்ற இம்மதச்சார்பின்மை, பார்ப்பன –இந்து ஆதிக்கத்தைத்தான் தனது நடைமுறையாகவும் கொண்டுள்ளது. இந்தப் போலி மதச்சார்பின்மையின் கீழ், சிவில் சட்டத்தை மட்டும் உண்மையிலேயே மதச்சார்பற்ற சட்டமாக மாற்ற வேண்டும் என்கிறது பாரதீய ஜனதா.
ஆனால் நிலவுகின்ற மதச்சார்பின்மை சட்டரீதியிலேயே போலியானது என்று எந்தக் கட்சி கூறுகிறது? காங்கிரசு, வலது-இடது கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் முசுலீம் லீக் வரை அனைத்துக் கட்சிகளுமே இந்த மதச்சார்பின்மையைப் போற்றிக் கொண்டாடுகின்றன.
இந்த மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ வேண்டுமென்று பாரதீய ஜனதா கோருவதை மட்டும் எப்படி எதிர்க்க முடியும்? அல்லது தங்களது எதிர்ப்பை அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அவர்கள் எங்ஙனம் நியாயப்படுத்த இயலும்?
அதனால்தான் தடுமாறுகிறார்கள். மழுப்புகிறார்கள். ‘அஞ்சாதீர்கள்’ என்று முசுலீம் பழமைவாதிகளுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். மொத்ததில் தங்களது நடவடிக்கைகள் மூலம் ‘இந்த நாட்டில் முழு நிறைவான மதச்சார்பின்மையை அமல்படுத்தத் தடையாயிருப்பவர்கள் முசுலீம்கள்தான்’ என்ற தவறான கருத்தை மறைமுகமாகத் தோற்றுவித்து வருகிறார்கள். இத்தகைய கருத்து பெரும்பான்மையின் மத்தியில் உருவாக்கப்படுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகிறார்கள்.
பாரதீய ஜனதாவின் அதே தந்திரம்! எதிர்க்கட்சிகளின் அதே தடுமாற்றம்!
போலி மதச்சார்பின்மை கட்சிகள்
காங்கிரசு, வலது-இடது கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் முசுலீம் லீக் வரை அனைத்துக் கட்சிகளுமே இந்த மதச்சார்பின்மையைப் போற்றிக் கொண்டாடுகின்றன.
இதற்கிடையில் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பொதுசிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. ” ஒரு சீரான உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர அரசு முயல வேண்டும் ” என்ற “அரசியல் சட்டத்தின் 44-வது பிரிவின் வாசகத்தில் உள்ள அரசு என்ற சொல்லுக்கு ‘மாநில அரசு’ என்ற பொருள் கூறுவதன் மூலம் இதைச் செய்ய முடியும்” என்று கூறுகிறார் சட்டவல்லுனர் ராஜீவ் தவான்.
அதற்குப்பின் கவர்னர் அதில் கையெழுத்திட மறுக்கலாம். ஜனாதிபதி ஒப்புதல் தராமல் நிறுத்தலாம் அல்லது உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கலாம். ஆனால் எதைச் செய்தாலும் அது இடைக்கால ஏற்பாடாக மட்டுமே இருக்கும்.
அரசியல் சட்டம் தனக்களித்த உரிமையைப் பயன்படுத்தித்தான் இந்து மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படும் வரை ‘அது மசூதிதான் – கோயிலல்ல’ என்று பேசிவந்த எதிர்க்கட்சிகள் இப்போது மசூதியா –கோயிலா? என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்வதற்காகக் காத்திருக்கிறார்கள். கரசேவைக்கெதிரான மக்கள் திரள் நடவடிக்கையில் ஈடுபட எந்தக் கட்சிக்கும் துணிவு இல்லை. பாபர் மசூதி விவகாரத்தில் எப்படிக் காய்களை நகர்த்தியதோ அதே முறையைத்தான் இந்த விசயத்திலும் பாரதீய ஜனதா பின்பற்றுகிறது.
பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தித்தான் அதற்குக் குழி தோண்டினான் இட்லர். இந்த ‘ஜனநாயகத்தையும்’ ‘மதச்சார்பின்மையையும்’ பயன்படுத்தித்தான் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு பாரதீய ஜனதாவும் முயற்சிக்கிறது . ஒரே சட்டத்தின் மூலம் ஒரே நாட்டையும் மக்களையும் செதுக்கி உருவாக்க நினைக்கிறது.
இந்தப் போலி ஜனநாயகம் பாசிசமாக உருமாறுவதும், போலி மதச்சார்பின்மை இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்வதும் ஒன்றும் அதிசயமல்ல; போலி மதச்சார்பின்மைக்குப் பல் முளைத்திருக்கிறது – அதுதான் இந்து ராஷ்டிரம். அதன் குழந்தைப் பருவத்தை எண்ணி ஏங்குவது கையறுநிலை; அதை மீண்டும் கொண்டு வரமுடியுமென நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம்.
அரசியல், கல்வி மற்றும் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் மனிதனின் மீது ஆதிக்கம் செய்வதற்கு மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகாரத்தையும் உரிமையையும் ரத்து செய்ய வேண்டும். தனிநபரின் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே மதச் சுதந்திரம் அங்கீகரிக்கப்படவேண்டும். இத்தகைய உண்மையான மதச்சார்பின்மைக் கொள்கையை நிலைநாட்டவும், அதன் பிரிக்கவொண்ணாத அங்கமான ‘மதச்சார்பற்ற உரிமையியல் சட்டத்தை’ நிறைவேற்றச் செய்யவும் வேண்டும். புரட்சியாளர்களும், ஜனநாயகவாதிகளும், முற்போக்காளர்களும் முன்வைத்துப் போராட வேண்டிய கோரிக்கை இதுதான்.
ஆனால் முசுலீம் பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள், திராவிட இயக்கங்கள், புதிய இடது சாரி ‘அறிஞர்கள்’ போன்ற பலரும் இதை ஏற்பதில்லை.
(தொடரும்)
முந்தைய பகுதிகள் vinavu.com
  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக