செவ்வாய், 11 நவம்பர், 2014

ராஜேந்திர சோழனுக்கு விழாவா? பெண்களை தாசிகளாககியவன்,கிராமங்களை பார்பனர்களுக்கு தாரைவார்தத்தவன் .......

ராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அறிவித்ததற்கும் மத்திய பி.ஜே.பி அரசு விழா கொண்டாடத் துடிப்பதற்கும் காரணம் அவன் ஆரிய அடிமையாக இருந்து அவர்களுக்கு சேவகம் செய்ததால்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
ராஜேந்திரசோழனுக்கு ஆயிரமாவது விழா எடுக்கப்போவதாக முதலில் அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். (ஆட்சிக்காலம் கி.பி.1012- 1044), இதற்குக் காரணம் தமிழ்ப் பண்பாட்டின் மீதோ, தமிழர்களான - ஆண்ட அரசர்கள் மீதோ கவலை, பற்று என்பதால் அல்ல. இது ஒருவகை புது மயக்க பிஸ்கட்டு. தமிழர்களுக்கு - தமிழர்களை  ஏமாற்று வதற்கு. ஆரியக் கலாச்சாரமான வைதீக வேதக்கலாச்சாரத் தினையும், அந்த வடமொழி ஆதிக்கம் பரவவும், அவனது ஆட்சியில் சமஸ்கிருதமயக் கல்வியையே பரப்பிய பச்சைப் பார்ப்பன அடிமை இராஜேந்திரசோழன்;
இவன் இதே பணியைச்  செய்து, தஞ்சையில் 300 பெண்களை தாசி களாக்கி- தேவதாசி முறையைப் பாதுகாத்து, பார்ப்பனர்கள் - வேதமோதிய வேதியர்கள் உண்டு கொழுக்க பார்ப்பனருக்கு அக்காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை (நான்கு வேதம் படித்தவருக்கு இனாம் நிலம்) - நிலத்தில் இறங்கி உழுவது பாவம் என்ற மனு தர்மத்தை, அன்று முதல் இன்று வரை கடைப்பிடிக்கும் வேதியர்களுக்கு நிலங் களை- கிராமங்களை தானமாகக் கொடுத்து, பிறகு அவர்கள் வரிகூடச் செலுத்த வேண்டியதில்லை எனும் சாசனம் செய்து கொடுத்து பெரியகோவிலைக்கட்டி, அதனைப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து, வெளியே பரிதாபமாக   நிற்கும் காவல்காரனான  இராஜராஜனுடன் போட்டியிட்டு,  கங்கை கொண்ட சோழபுரத்தில் போட்டிக் கோயில் கட்டி, பார்ப்பனப் பாரம்பரியம் கொழுக்கச் செய்தான் என்பதைத் தவிர  ராஜேந்திரசோழன் பரப்பியது திருக்குறளையோ, முற்பகுதி சங்ககால இலக்கியத்தையோ அல்ல.
வர்ணாசிரமக் காவலனுக்கு விழாவா?
எனவேதான் இந்த வர்ணாசிரமத்தின் காவலனுக்கு ஆயிரமாவது ஆண்டு என்று கொண்டாடுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களும் அதன் ஆணைக்கேற்ப மத்தியில் நடைபெறும் பிரதமர் மோடியின் ஆட்சியும் இராஜேந்திரசோழன் மீது திடீர்க் காதல் கொண்டு ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட முனைந்துள்ளது.
இது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையாகும்!
அப்பாவித் தமிழர்களும், தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற பேராசையுடன் சினிமா நடிகர்களையெல்லாம் தேடி, ஓடி, நாடிச்செல்லும் அந்த காவிக்கட்சியின் தலைமை, இத்தகைய புதிய தூண்டிலைத் தூக்கிக் கொண்டு கிளம்பியுள்ளது!
தமிழ்நாட்டின் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதப்படிப்புக்கான பல்கலைக்கழகத்தை அமைத்த பெருமை ராஜேந்திரனைச் சாரும் என்று ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவகா சுரேஷ் பையாஜி ஜோஷி  என்ற பார்ப்பனர் கூற்று நமது மேற்காட்டிய கருத்துக்கு ஆதாரமாகும்!
தந்தை பெரியாரின் பார்வை
தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே - சீரிய சிந்தனையின் சிகரம் என்பதால், இந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் எல்லாம் செய்த சாதனை பார்ப்பான் காலைக்கழுவிக் கதி மோட்சம் பெற்றால், மீண்டும் அடுத்த ஜென்மத்திலும் ராஜாவாகவே பிறந்து ஆளலாம் என்ற சுயநலப்பேராசை காரணமாகத்தானே தவிர நமது மக்களுக்கு, கல்விக்கோ, மானமீட்புக்கோ இந்த ராஜாக்கள் செய்தது ஒன்றுமில்லையே என்று தொலைநோக்கோடு கூறியது எவ்வளவு மறுக்க முடியாத உண்மை என்பது இப்போது விளங்குகிறது அல்லவா?
சோழர்களில் இவன் செய்த மிகப் பெரிய சாதனை - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். இவனது ஆயிரமாவது ஆண்டு கொண் டாடுமானால், இமயத்தில் கொடி பொறித்த இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், 2000 ஆண்டு களுக்கு முன்பே மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் கல்லணை எழுப்பிய கரிகாலன் ஆகியோரை அல்லவா போற்றி விழா எடுத்திருக்க வேண்டும்? அதைச் செய்யாமல் இதை செய்வது ஏன்?
மயக்கமுறாது, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்த நோக்கத்தைப் புரிந்து, இந்த ஆரியக் கண்ணிவெடி யை அகற்றி, திராவிட இனத்திற்குச் சரியான பார்வையை ஏற்படுத்திட  வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் பார்ப்பனர்களுக்கு வேதபாடசாலைகள்
இந்த இராஜேந்திரசோழன், சதுர்வேதி மங்கலங்களை தன் தாயார் பேரில் கொடுத்தது மாத்திரமா? ஆரியப் பார்ப்பன கலாச்சார ஊற்றுக் கண்ணான சமஸ்கிருதம் என்ற வடமொழிக் கல்வியையே தமிழ்நாட்டில் புகுத்தி, நம்மின மக்களை அடிமையாய், ஆமையாய், ஊமையாய் ஆக்கிடுவதில் வெற்றி கண்டான்.
நாகப்பட்டிணத்தில் கி.பி.1058 இல் சமஸ்கிருதக்கடிகை ஒன்று இருந்தது. இதில் 200 பிராமண மாணவர்கள் வேதம் படித்தனர். 50 பிராமண மாணவர்கள் சாத்திரம் படித்தனர் வேதங்களைக் கற்பிக்கத் தனியே மூன்று ஆசிரியர்கள், பட்ட மீமாம்சை, பிரபாகர மீமாம்சை ஆகிய சாஸ்திரங் களைக் கற்பிக்க தனியே மூன்று ஆசிரியர்கள், நூலகர் ஒருவர் ஆக 257 பேருக்கும் இலவசமாகத் தங்கவும், உண் ணவும், நல்லவசதி அரசர்களால் செய்து தரப்பட்டிருந்தன.
தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரத்தில் முதல் இராஜேந்திரசோழன் காலத்தில் ஒரு சமஸ்கிருதக் கடிகை இருந்தது. சோழ மன்னன் அனைத்து மானியங்களையும் வழங்கினான். அதில் 270 பிராமண மாணவர்கள் கற்று வந்தனர். அவர்களுள் 40 பேர் ரூபாவதாரம் எனும் நூலைப் பின்பற்றிக் கற்பிக்கப் பெற்ற அடிப்படை இலக்கணத் தையும், போதாயனர் இயற்றிய சாத்திரங்களையும் கற்றனர்.
ஏனையோர் நான்கு வேதங்களையும் மனப்பாடம் செய்தனர். அவர்களுள் மூத்த மாணவர் 70 பேர், 10 பேர் வேதாந்தமும் 25 பேர் வியாகரணமும் ஏனையோர் பிரபாகர மீமாம்சையும் கற்றுத் தேர்ந்தனர். 14 ஆசிரியர் பணியாற்றினர்.
எண்ணாயிரத்திற்குப் பக்கத்தில் திருபுவனை (புதுவையிலுள்ளது) என்னும் இடத்தில் சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அதில் 260 பிராமண மாணவர்களும், 12 ஆசிரியர்களும் இருந்தனர். செங்கற்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் வீர இராஜேந்திரசோழர் காலத்தில் (1067) சமஸ்கிருதக் கடிகை ஒன்று இயங்கியது. அங்கு ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து உறையவும், உண்ணவும் அனைத்து ஏற்பாடுகளும் அரசரால் செய்யப்பட்டிருந்தன.
திருவாவடுதுறையில் ஒரு மருத்துவப் பள்ளி இயங்கியது. சமஸ்கிருத நூல்களான அஷ்டாங்க கிருதயமும், சாரக சம்ஹிதயும் அங்கே கற்பிக்கப்பட்டன. திருவொற்றியூரில் இருந்த கடிகையில் பாணினி இலக்கணம் கற்பிக்கப்பட்டது. சேரநாட்டில் நம்பூதிரிப் பிராமணர்கள் கல்வி கற்கப் பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நம்பூதிரி மரபுப்படி ஆண்மக்களில் மூத்தவர் மட்டுமே நம்பூதிரி பிராமணக் குடும்பத்திற்குள்ளே திருமணம் செய்து கொள்ளுவார். ஏனைய தம்பிமார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை.
மாறாக நாயர் முதலான ஏனைய குலப்பெண்களோடு உறவு வைத்துக் கொள்வார்கள். எனவே, அவர்களுக்குக் குடும்பம் பற்றிய கவலை இல்லை; நிறைய நேரம் கிடைத்தது.
அந்த நேரத்தை சமஸ்கிருத வேதம் முதலானவற்றைக் கற்பதில் செலவழித்தனர் (டாக்டர் க.ப.அறவாணன் எழுதிய தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம் என்ற நூலிலிருந்து) - இதுதான் ராஜேந்திரசோழன் செய்த தமிழின விரோத - பார்ப்பன வருணாசிரமக் கல்வி பரப்பிய திருப்பணி. நம்மவர்கள் அடிமைகள் அப்படித்தான் இருந்தனர்.
மேலும் படையெடுப்புக்காக பாராட்டுவது அகண்ட இந்துஸ்தானத் தத்துவத்தை மறைமுகமாக நினைவூட்டுவது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தை உடனடியாக அரசின் கப்பற்படை தமிழ்நாடு - புதுச்சேரி பொறுப்பாளர் கமாண்டர் அமர்.கே.மகாதேவன் கூறியிருக் கிறார்- கொண்டாட்டம் நடத்தப் போவதாக! இந்தக் கொண்டாட்டத்தில் என்.எஸ்.சுதர்ஷினி என்ற கப்பல் பங்கேற்குமாம்!
இப்போது அது உலகைச் சுற்றி வருகிறது; பழங் காலத்திலேயே நமது எல்லைகளைத் தாண்டி கடற்படை நடத்திய ராஜாவுக்கான கொண்டாட்டத்தில் அது பங்கேற் பது பொருத்தமானது - இப்படி கமாண்டர் அமர் மகா தேவன் அவர்கள் கூறுகிறார் (பிசினஸ் லைன் ஏடு 3.11.2014)
இப்போது இது பொருந்தும் என்றால், நமது இராமேஸ்வர, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துப் பொய்வழக்குப் போட்டு தூக்குத் தண்டனை கொடுக்க வைத்து மிரட்டுவது எவ்வகையில் சரியானது என்று உலக நடுநிலையாளர்கள் கேட்க வேண்டாமா? கேட்கமாட்டார்களா?
எச்சரிக்கை! எச்சரிக்கை!
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கேற்ப, ஆர்.எஸ்.எசு-க்கு இராஜேந்திர சோழன் மீது வந்த திடீர் பாசம். பல மாங்காய்களை இந்தக் கல்லைக் கொண்டே அடித்து, காரியம் சாதிக்கக் கனவு காண்கிறது ஆர்.எஸ்.எஸ்.
தமிழர்கள் அவ்வளவு எளிதில் ஏமாற மாட்டார்கள். ஏமாறவும் விடமாட்டோம், எனவே இந்த டிரோஜன் குதிரையை சரியாக அடையாளம் காணத் தமிழர்கள் தக்க விழிப்போடு இருக்க வேண்டும்.
பக்தி முலாம் பூசி, இந்த அபாயம் - பண்பாட்டுப் படையெடுப்பாக வருகிறது.
எச்சரிக்கை! எச்சரிக்கை!

viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக