வியாழன், 13 நவம்பர், 2014

வால் நட்சத்திரத்தில் இறங்கிய ஆய்வுக் கலம்; மாபெரும் சாதனை!


அறிவியல்புரம் என்.ராமதுரை :
67P  வால் நட்சத்திரம் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம்
மணிக்கு சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்ற சிறிய வால் நட்சத்திரம் ஒன்றில் மனிதன் அனுப்பிய ஆய்வுக்கலம் வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளது.   வால் நட்சத்திரம் (Comet) ஒன்றில் ஆய்வுக் கலம் மெதுவாகத் தரை இறங்குவது என்பது விண்வெளி வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ( ESA) அனுப்பிய ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் புதன்கிழமை ( நவம்பர் 12 ஆம் தேதி)  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக ரோசட்டா அந்த வால் நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்ற லாரியின் பின் புறத்தில் ஒரு ஹெலிகாப்டரிலிருந்து குதிப்பது மிகக் கடினமானது. ஆளில்லா விண்கலத்திலிருந்து ஒரு சிறிய ஆய்வுக் கலம் ஒன்று வால் நட்சத்திர்த்தில் இறங்குவது அதை விடக் கடினமானது.


பிலே(Philae) என்னும் ஆய்வுக் கலம் அந்த வால் நட்சத்திரத்தில் பல நாட்கள் தங்கி ஆய்வுகளை நடத்தி வால் நட்சத்திரம் பற்றிய பல தகவல்களை அனுப்பும்.

67P சுரியுமோவ் - ஜெராசிமெங்கோ என்னும் பெயர் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நீளம் வெறும் 4 கிலோ மீட்டர். ஆனால் அதன் வயதோ 460 கோடி ஆண்டுகளுக்கும் அதிகம். ஆகவே வால் நட்சத்திரம் பற்றி விரிவாக ஆராய்ந்தால் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி மேலும் அறிந்து கொள்ள இயலும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே தான் வால் நட்சத்திர வேட்டை.

வால் நட்சத்திரங்கள் வானில் நிலையாகத் தெரிபவை அல்ல. எங்கிருந்தோ கிளம்பி சூரியனை நோக்கி வரும். ஒரு ரவுண்டு  அடித்து விட்டு வந்த வழியே திரும்பி விடும்.

அந்த அளவில் 67P வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது பூமி, செவ்வாய் ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளுக்கு இடையே அமைந்தபடி சூரியனை சுற்றி விட்டுத் திரும்பும்.(மேலே படம் காண்க)

நவம்பர் 12 ஆம் தேதி  நிலவரப்படி அந்த வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து சுமார் 44 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் பூமியிலிருந்து சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வருகிற  நாட்களில் அது சூரியனை மேலும் மேலும் நெருங்கும். அப்போது சூரியன் காரணமாக அந்த வால் நட்சத்திரத்திலிருந்து தூசும் வாயுக்களும் வெளிப்பட்டு பின்புறமாகத் தள்ளப்படும். இதுவே வால் நட்சத்திரத்தின் நீண்ட வால் போல அமையும். சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது வால் நட்சத்திரத்துக்கு வால் இராது.

வால் நட்சத்திரம் என்பது பொதுவில் பனிக்கட்டிகள், உறைந்த நிலையிலான வாயுக்கள், கற்கள், பாறைகள், தூசு ஆகியவற்றால் ஆனது. 67P  வால் நட்சத்திரமும் அப்படிப்பட்டதே.
4 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 67P வால் நட்சத்திரம்
இந்த வால் நட்சத்திரத்தில் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது ரோசட்டா விண்கலம் அனுப்பிய படங்களை வைத்து ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. ஓரளவு சம தரையான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருந்தது. வால் நட்சத்திரம் பயங்கர வேகத்தில் செல்ல ரோசட்டா அதை பின் தொடர்ந்து செல்கிறது என்ற பிரச்சினையுடன், வால் நட்சத்திரம் தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆகவே ரோசட்டாவிலிருந்து பிலே ஆய்வுக் கலம் சரியான நேரத்தில் கீழ் நோக்கி இறங்கினால் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் போய் இறங்க முடியும் என்ற பிரச்சினை இருந்தது.

வேறு ஒரு பிரச்சினையும் இருந்தது. ரோசட்டாவிலிருந்து ஆய்வுக்கலம் பிரிந்த போது ரோசட்டாவுக்கும் வால் நட்சத்திரத்துக்கும் இடையில் இருந்த தூரம் சுமார் 22 கிலோ மீட்டர். ஆனால் ஆய்வுக் கலம் வளைந்த பாதையில் தான் கீழ் நோக்கி இறங்க வேண்டியிருந்தது. எனவே என்ன ஆகுமோ என்று விஞ்ஞானிகள் கவலையுடன் இருந்தனர்.

ரோசட்டாவிலிருந்து பிரிந்த ஆய்வுக் கலம் கீழே போய் இறங்குவதற்கு சுமார் ஏழு மணி நேரம் பிடித்தது. இதைத் தொடர்ந்து இந்திய்  நேரப்படி புதன்கிழமை இரவு 9-30 மணிக்கு பிலே வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தில் இறங்கி விட்டதாக ரோசட்டாவிலிருந்து  தகவல் வந்து சேர்ந்தது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் நிபுணர்கள் ஜெர்மனியில்  டார்ம்ஸ்டாட் நகரில் அமைந்த தலைமைக் கேந்திரத்தில் அமர்ந்தபடி ரோசட்டாவை இயக்கி வருகின்றனர். ரோசட்டாவுக்கு சிகனல்கள் வடிவில் ஆணை அனுப்பினால் அவை ரோசட்டாவுக்குப் போய்ச் சேர 28 நிமிஷங்கள் ஆகும். ரோசட்டா அங்கிருந்து சிக்னல்கள் வடிவில் தகவல் அனுப்பினால் பூமிக்கு வந்து சேர அதே நேரம் ஆகும்.

ஆகவே தான் ரோசட்டா என்ன செய்ய வேண்டும், பிலே என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆணைகள் ஏற்கெனவே அனுப்பப்பட்டு ரோசட்டாவின் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

ரோசட்டாவுடன் தொடர்பு கொள்ள ஆஸ்திரேலியாவில் நியூ கார்சியா என்னுமிடத்தில் உள்ள ராட்சத ஆண்டென்னா பயன்படுத்தப்படுகிறது.
ரோசட்டாவுடன் தொடர்பு கொண்டுள்ள ராட்சத ஆண்டென்னா
67 P வால் நட்சத்திரத்தை ஆராய ரோசட்டாவில் 11 கருவிகளும் தரை இறங்கும் பிலே ஆய்வுக் கலத்தில் 10 கருவிகளும் உள்ளன. பிலே ஆய்வுக் கலம் கிட்டத்தட்ட ஒரு பிரிட்ஜ் சைஸ் கொண்டது.அதன் எடை சுமார் 100 கிலோ.

இந்த வால் நட்சத்திரத்தை  நோக்கி ரோசட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டு ஏரியான் ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்டது. அந்த வால் நட்சத்திரத்தை அடைய 10 ஆண்டுகள் ஆவானேன் என்று கேட்கலாம்.

67 P வால் நட்சத்திரத்தை பின்புறமாகத் துரத்திச் சென்று தான் எட்டிப்பிடிக்க முடியும். அதற்கு மிகுந்த வேகம் தேவை. ஏரியான் ராக்கெட்டினால் அந்த வேகத்தில் ரோசட்டாவை செலுத்த இயலாது.  தேவையான  அந்த வேகத்தில் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் உலகில் கிடையாது.

ரோசட்டா சூரியனை ஒரு முறை சுற்றி விட்டு பூமியை நெருங்கி கடந்து சென்றால் பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக ரோசட்டாவின் வேகம் அதிகரிக்கும். இப்படியாக ரோசட்டா சூரியனை நான்கு முறை சுற்றியது. ஒரு தடவை செவ்வாயை (2007) நெருங்கி வேகம் பெற்றது. மூன்று முறை பூமியை நெருங்கிக் கடந்து ( 2005, 2007, 2009 ) மேலும் மேலும் வேகம் பெற்றது.

 பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்டில் ரோசட்டா 67 P  வால் நட்சத்திரத்தை எட்டிப் பிடித்து அதனைச் சுற்றி வர ஆரம்பித்தது. இறுதியில் இப்போது ரோசட்டாவிலிருந்து  பிலே தனியே பிரிந்து அந்த வால் நட்சத்திரத்தில் இறங்கியுள்ளது.

சுரியுமோவ், ஜெராசிமெங்கோ ஆகிய இரு ரஷிய வான் ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தனர். ஆகவே தான் அந்த வால் நட்சத்திரத்துக்கு அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.ariviyal.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக