சனி, 22 நவம்பர், 2014

இசையமைப்பாளர்களில் ஒரு நிறைகுடம் திரை இசை திலகம் கே.வி.மகாதேவன்!

இசைக் கலைஞர்கள் ஓய்வு பெறுவதில்லை.  அவர்களுக்குள் இசையே இல்லாத நிலை தோன்றும் போது அவர்கள் நிறுத்திவிடுகிறார்கள்.  - லூயி ஆர்ம்ஸ்ட்ராங்.
நினைப்பது நடந்துவிட்டால் அது அதிர்ஷ்டம்.
ஆனால் நினைத்ததற்கும் மேலே கிடைத்துவிட்டால்... அதைத்தான் பேரதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களோ?
கே.வி. மகாதேவன் விஷயத்திலும் அதுதான் நடந்தது.
கந்தன் கருணை படப் பாடல்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படும் என்று எதிர்பார்த்தார்.
அது நடக்கவும் செய்தது.
ஆனால் அதற்கு ஒரு படி மேலாக 1967-ஆம் ஆண்டுக்கான "சிறந்த இசையமைப்பாளருக்கான" தேசிய விருதும் அவருக்கு கந்தன் கருணை படத்துக்கு அமைத்த இசைக்காகக் கிடைத்தது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அதுவரை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதுகளில் சிறந்த இசைக்கான விருது வழங்கப்படவே இல்லை. முதல் முதலாக 1967-ஆம் வருடம் தான் இசைக்கான தேசிய விருது அறிமுகப்படுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து முதல்முதலாக சிறந்த இசைக்கான தேசியவிருது பெற்ற இசையமைப்பாளர் என்ற கௌரவம் கே.வி.மகாதேவனுக்குத்தான் கிடைத்தது.அதுவும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இசையமைத்தற்காக. "இது நான் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்" என்று தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார் கே.வி.மகாதேவன்.


தனக்குக் கிடைத்த பெருமைகளையும் பட்டங்களையும் விருதுகளையும் கொஞ்சம் கூட தலைக்கு ஏற்றிக் கொள்ளாத மனிதர் அவர்.

தேசிய விருது என்று மட்டும் அல்ல.  அவருக்கு ரசிகர்களால் வழங்கப்பட்ட "திரை இசைத் திலகம்" என்ற மிகப்பெரிய பட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது "என்னுடைய சிறு தொண்டிற்கு மக்கள் அளித்த மிகப் பெரிய பரிசு இது" - என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார் அவர்.
தொடர்ந்து கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்களின் வரிசையில் ஜெமினிகணேசனின் நூறாவது படமான "சீதா" இணைந்தது.  ஏ.பி.நாகராஜன் கதை வசனம் எழுதி இயக்கி இருந்த இந்த சமூகப் படத்தில் நட்சத்திர ஜோடியான ஜெமினி கணேசன் - சாவித்திரி இணைந்து நடித்திருந்தனர்.  இரண்டாவது கதாநாயகன் நாயகியாக முத்துராமன் - கே.ஆர்.விஜயா நகைச்சுவைக்கு நாகேஷ்-மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவனின் இசை தரமானதாக அமைந்தது.

பாடல்களில் "காவியத்தின் தலைவன் ராமனடி" என்ற பி. சுசீலாவின் கண்ணதாசன் பாடல் இனிமையும் மென்மையும் மேலோங்கிய பாடல்.  பாடலுக்கான இசையும் இணைப்பிசையும் சிறப்பாக அமைந்து பாடலை ஒரு வெற்றிப்பாடலாக்கியது.

"நாடி துடிக்குது துடிக்குது"- நாடி என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு கவியரசு கண்ணதாசன் விளையாடி இருக்கும் பாடல். இனிமையான இசையால் பாடலை இன்று வரை நிலைத்திருக்க வைத்துவிட்டார் கே.வி.மகாதேவன்.  பாடலைப் பாடியவர்கள் பி.சுசீலா  - சீர்காழி கோவிந்தராஜன்.

***
தனது அருண் பிரசாத் மூவீஸ் பானரில் இயக்குனர் பி. மாதவன் சொந்தமாக இயக்கி தயாரித்த படம் "முகூர்த்த நாள்".  படம் அப்படி ஒன்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற "மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்" என்ற பி. சுசீலாவின் பாடல் கே.வி.மகாதேவனின் இசையில் இன்னொரு வெற்றிப்பாடல்.  இன்று வரை மங்காமல் காற்றலைகளில் மின்னிக்கொண்டிருக்கிறது.

***
கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கதை வசனம் இயக்கத்தில் வெளிவந்த படம் "கண்கண்ட தெய்வம்".  கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த இந்தப் படத்தில் எஸ்.வி.ரங்காராவ் - எஸ்.வி. சுப்பையா அண்ணன் - தம்பியாக வந்து நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.  சுப்பையாவுக்கு ஜோடியாக பத்மினி.

'ஆண்டவனே சாமியோ நீ கொடுத்த பூமி"  - உடுமலை நாராயண கவிராயரின் இந்தப் பாடல் எளிமையான சந்தங்களோடு அழகாக மனத்தைக் கவரும் பாடல்.  பாடலுக்கு மகாதேவன் அமைத்த இசை கிராமியப் பாடல்களில் அவருக்குத் தனி இடத்தைத் தரத் தவறாத பாடல்.  டி.எம்.எஸ்.  -  பி. சுசீலா இணைவில் ஒரு அருமையான பாடல்.

 கந்தன்  கருணைக்கு பிறகு வெளிவந்த நடிகர் சிவகுமாரின் படம்.  அவருக்கு இதில் கூடுதல் ப்ரொமோஷன்!  முதல் முதலாக ஒரு டூயட் பாடலுக்கு வாயசைத்து ஆடிப்பாடி அவர் நடித்த படம் இது.

கணுக்கால் வரை மடித்துவிடப்பட்ட பான்ட் - டி-ஷர்ட்-  காஸ்ட்யூமில் அவர் பாடி நடித்த பாடல் காட்சி இடம் பெற்ற படம்.  அந்த வகையில் சிவகுமாரின் முதல் பாடல் காட்சிக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன்.

"தென்ன மரத்துலே குடியிருக்குற சின்னப் பாப்பா"  -    டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடல் கேட்பவரைத் தாளமிடவைக்கும் கிராமிய மணம் வீசும் பாடல்.

*********************

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "அரச கட்டளை".

எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி - ஜெயலலிதா ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம்.

இந்தப் படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ஹிட் பாடல்களாயின.

பொதுவாக கவிஞர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்தை பாடல்களாக வடிப்பதுண்டு.  ஆனால் கவிஞர் வாலி அவர்கள் இந்த விதிக்கு விலக்கு.

"நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை.  ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்." என்று அவர் பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் பாடல்தான் "என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்" என்ற பாடல். பி.சுசீலா பாடும் இந்தப் பாடல் கே.வி.மகாதேவனின் இசையில் இன்றளவும் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் ஒரு பாடலாக அமைந்து விட்டிருக்கிறது.

"புத்தம் புதிய புத்தகமே"  அருமையான டூயட் பாடல்.  டி.எம்.எஸ்.  - பி.சுசீலா.

இதே படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள் "ஆண்டவன் கட்டளைக்கு முன் அரசகட்டளை நிற்குமா" என்று எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர். அந்த பல்லவியை ஒதுக்கி விட்டு கவிஞர் முத்துக்கூத்தனை அந்தக் காட்சிக்கான பாடலை எழுத வைத்தார்.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"  - என்று தொகையறாவாகத் தொடங்கி "ஆடிவா ஆடிவா ஆடிவா" என்று பாடலாக விரியும் பாடல்தான் அது.  டி.எம்.சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அவ்வப்போது ஒரு சிறு பிசிறு எட்டிப்பார்க்கும்.  இந்தப் பாடலில் அந்தப் பிசிறே தெரியாதவண்ணம் அருமையாக மெட்டமைத்து சிறப்பாக இணைப்பிசை கொடுத்து ஒரு மகத்தான வெற்றிப்பாடலாக்கி விட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"வேட்டையாடு விளையாடு"  - என்ற ஆலங்குடி சோமுவின் பாடல் மட்டும் என்ன? சளைத்ததா?
பாடலின் கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காதுகளில் விழுவதொடு மட்டும் அல்லாமல் மனத்திலும் நிலைக்கும் வண்ணம் அருமையாக மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வண்ணம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  பாடியவர்கள் டி.எம்.எஸ் - பி.சுசீலா.

"பண்பாடும் பறவையே என்ன தூக்கம்.-உன்
பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்"  -  பழம் பெருமைப் பேசி அலையும் மனிதரை பல்லவியிலேயே சாடுகிறார் வாலி. இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. பி.சுசீலாவின் குரலில் உரிமைக்கு கிளர்ந்தெழ வைக்கும் பாடல் இது.

"ஆண்டாண்டு காலமாய் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் சொந்த நாடு - என்ற வரிகளில் பி.சுசீலாவின் குரலில் பெருமிதத்தை வெளிப்படுத்தியவர் சரணத்தின் கடைசி வரியில் "தூங்கித் தூங்கிச் சோர்ந்துவிட்டதிந்த நாடு." என்ற வரிகளில் வெளிப்படுத்தும் பாவம் ஒரு பாடலைப் பாடகியை எப்படி பாடவைக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம்.  பாடலின் அர்த்த பாவம் குறையாமல் இசையமைப்பதில் கே.வி. மகாதேவனுக்கு இருக்கும் அசாத்திய திறமைக்கு ஒரு சான்று இந்தப் பாடல்.

படத்தின் உச்ச கட்ட காட்சியில் இடம் பெரும் "எத்தனை காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னைக் காண்பதற்கு" - பாடல் காட்சிக்கேற்ற விறுவிறுப்பை ஏற்படுத்தும் பாடல். பாடியவர் இசையரசி பி.சுசீலா.

அரச கட்டளை படப்பாடல்கள் கே.வி.மகாதேவனின் புகழுக்கு மேலும் பெருமை கூட்டத் தவறவில்லை.

இதே போல நடிகர் திலகத்துடன் அவர் இணைந்த "பேசும் தெய்வம்" படமும் மனதில் நிலைக்கும் பாடல்களைக் கொண்ட பாடல்.

வாலியின் கற்பனையில் விரிந்த பாடல்களில்  டி.எம்.எஸ். பாடும் "நான் அனுப்புவது கடிதம் அல்ல" - பாடல் இன்றைய ஹைடெக் உலகத்துக்கு சற்றும் பொருந்தாது. என்றாலும் கடிதங்கள் மூலம் காதல் வளர்த்த அன்றைய காதலர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பாடல்.

"அழகு தெய்வம் மெல்ல மெல்ல" -  டி.எம்.எஸ். - பி.சுசீலாவின் இணைவில் அற்புதமான பாடல்.
கானடா ராகத்தின் இனிமை நயம் நம்மை பரவசப் படுத்தும் வண்ணம் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"நூறாண்டு காலம் வாழ்க"  -  சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சரளா, எஸ். ஜானகி ஆகியோரின் குரல் இணைவில் ஒரு அருமையான வாழ்த்துப் பாடல்.

பிள்ளைச் செல்வமே பேசும் தெய்வமே" - எஸ்.ஜானகியின் குரலில் ஒரு இனிமை கொஞ்சும் பாடல்.

பாடல்களும் வெற்றி.  படமும் வெற்றி.

*************
மீதும் தேவர் பிலிம்ஸ் கே.வி.மகாதேவனின் இசையோடு தனது அடுத்த படத்தை வெளியிட்டது.

1967- ஜனவரி மாதம் - 13ஆம் தேதி - பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று வெளியான படம் "தாய்க்குத் தலைமகன்".

எம்.ஜி.ஆரை வைத்து தேவர் தயாரித்த பன்னிரெண்டாவது படம்.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா வெற்றி ஜோடியோடு அசோகன், SOWKAR ஜானகி, ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி. ரங்கராவ், நாகேஷ் - மனோரமா ஆகியோரும் நடித்திருந்தனர்.

மகாதேவனின் இசையில் பாடல்கள் வழக்கமான எம்.ஜி.ஆர். படப் பாடல்களிலேயே சுமார் ரகத்தில் தான் அமைந்து விட்டிருந்தன.

என்றாலும் "பார்த்துக்கொண்டது கண்ணுக்கு கண்ணு" என்ற டி.எம்.எஸ். - பி.சுசீலாவின் டூயட் பாடலும், "அன்னை என்று ஆகுமுன்பே ஆராரோ பாடவந்தேன்" என்ற பி. சுசீலாவின் இனிய மெலோடியும் ஹிட் பாடல்களாயின.

"தாய்க்குத் தலைமகன்" படம் வெளியாவதற்கு முதல் நாள் - அதாவது ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவம் படவுலகை மட்டுமல்ல ஒட்டுமொத்த  தமிழ் நாட்டையுமே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.  சுடப்பட்டார்."  /andhimazhai.com

(இசைப் பயணம் தொடரும்..)
(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)
- See more at: http://andhimazhai.com/news/view/kvm-31.html#sthash.cQ4O339u.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக