புதன், 12 நவம்பர், 2014

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் : காவிரியில் தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கூடாது!

 காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க முடியும் என அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) எழுதிய கடிதத்தில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு தடுப்பணைகளை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆய்வு நடத்த, சர்வதேச அளவிலான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் மேகதாதுவில் கூடுதல் நீரை சேகரிக்கவும், சுமார் 2,500 ஏக்கர் வனப் பகுதியை இணைக்கவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு மீறும் செயலாகும்.
மேகதாது அணை மற்றும் மின் திட்டம் குறித்து கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீங்கள் (பிரதமர்) இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, உரிய அறிவுரைகளை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும். காவிரியில் நீர் மின் திட்டம் கொண்டு வருதல், அணை கட்டுதல், நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துதல், குடிநீர் வினியோகம் போன்ற அனைத்து வகையான திட்டங்களுக்கும் தமிழக அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது என்று அந்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக, தற்போது மேகதாதுவில் தடுப்பணைகள் கட்டுவதற்கான தொழில்நுட்ப ஆய்வு முயற்சிகளையும் உடனடியாகத் தடுக்க வேண்டும்.
இதேபோல், மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து, கர்நாடகா அரசுக்கு காவிரியில் புதிய திட்டங்களுக்கான எந்த வித அனுமதியும், தமிழக ஒப்புதலின்றி வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை, மத்திய அரசால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக