ஞாயிறு, 9 நவம்பர், 2014

பூலன்தேவி ! மறக்கமுடியாத பெண்ணுரிமை வாதி! ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கை நட்சத்திரம்!


புதுடில்லி : , பூலான் தேவி கொலை வழக்கில், ஷெர் சிங் ராணா, குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளான். அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மற்ற 10 பேர், விடுதலை செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், பிரபல கொள்ளைக்காரியாக இருந்தவர் பூலான் தேவி. பின், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, அரசியல்வாதியாக மாறி, தேர்தலில் போட்டியிட்டு, லோக்சபா எம்.பி.,யானார். கடந்த, 2001 ஜூலை, 25ல், இவர், டில்லியில், லோக்சபா நடவடிக்கைகளில் பங்கேற்று விட்டு, மதிய உணவுக்காக, வீடு திரும்பியபோது, முகமூடி அணிந்த, மூன்று மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை டில்லி போலீசார் விசாரித்த போது, 1981ல், உ.பி.,யில், பீமாய் என்ற இடத்தில், தாகூர் இனத்தைச் சேர்ந்த ஏராளமான நபர்களை, பூலான் தேவி கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும், விசாரணையில் தெரிய வந்தது.

கொலை தொடர்பாக, ஷெர் சிங் ராணா என்பவன் உட்பட, 12 பேர் மீது, குற்றம் சுமத்தப்பட்டது. இவர்களில், பிரதீப் சிங் என்பவன், 2013ல், டில்லி திகார் சிறையில் இறந்து விட்டதால், மற்ற, 11 பேர் மீதான வழக்கு விசாரணை மட்டுமே நடந்தது. இந்த வழக்கில், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர், நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், ஷெர் சிங் ராணா மட்டும், குற்றவாளி என அறிவித்த நீதிபதி, மற்ற, 10 பேரையும் விடுதலை செய்தார். போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ராணாவுக்கான தண்டனை, வரும், 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்றத்தில் இருந்த ராணா, ''என்னை மட்டும் ஏன் குற்றவாளி என, அறிவித்தீர்கள்? மற்றவர்களும் குற்றவாளிகளே,'' என்றான். உடன் நீதிபதி, ''நான் தீர்ப்பு வழங்கி விட்டேன். இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நீ அப்பீல் செய்யலாம்,'' என்றார்.

13 வருடங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட பூலான் தேவி கொலை வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், பேமாய் கிராமத்தில் 21 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக பூலான்தேவியின் மீதான கொலை வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை.
இவ்வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வரும் 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள பேமாய் கிராமத்தில் 1981-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மிகப்பெரிய படுகொலை சம்பவம் நடந்தது; 21 பேர் கொல்லப்பட்டனர். இதில், 17 பேர் உயர்சமூகமாகக் கருதப்படும் தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பூலான் தேவி மற்றும் அவரது சகாக்கள் மீது இக்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தன் 10சகாக்களுடன் பூலான்தேவி சரணடைந்தார். ஆனால், அவர் உயிரோடு இருக்கும்வரை ஒருமுறை கூட இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இது குறித்து தாக்கூர் சமூகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் விஜய்நாரயண் சிங் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பூலான்தேவி சரணடைந்த போது விதித்த நிபந்தனைகளில் பேமாய் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்று. இதனை உத்தரப்பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் முலாயம் சிங் ஏற்று, பூலான் தேவி மீதான அவ்வழக்கை வாபஸ் பெற்றார். இதை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்றேன்.
இந்த வழக்கில் ஆஜராகலாம் என பூலான் தேவி கருதிய போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மீதம் உள்ள குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டணை பெற்றுத் தருவேன்.
இந்த வழக்கில் பூலானுடன் சேர்த்து மொத்தம் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில், மான்சிங் யாதவ் உட்பட இன்னும் தலைமறைவாக உள்ள மூன்று பேர் மீது ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைதாகி சிறையில் இருந்த மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டது. ஒருவருக்கு ஜாமீன் பணம் கட்ட யாரும் இல்லாததால் அவர் இன்னும் சிறையில் இருக்கிறார்.
‘தலைமறைவு குற்றவாளிகளில் முக்கியமானவர் மான்சிங் யாதவ். பூலானில் கொள்ளைக்கார கும்பலில் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர், தனது சரணுக்கு பின் இப்பகுதி யின் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒரு வரானார். முலாயம் சிங்கின் ஆதரவு காரணமாக அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்.
பழிசுமத்த முயற்சி
பேமாய்கிராமத்தில் பூலான் தேவி நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 17 தாக்கூர் குடும்பத்தினருக்கும், குற்றவாளி யாக தண்டிக்கப்பட்டிருக்கும் ஷேர்சிங் ராணாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. பூலான் தேவி, சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அரசியல் தான் காரணம்.
இவரை கொன்ற ராணா, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு சமாஜ்வாதி கட்சியின் லோகியா பிரிவின் தலைவராக இருந்தார். ராணா, எங்கள் சமூகத்தவர் அல்ல. அவர் மலையை சேர்ந்த தாக்கூர் (பஹாடி தாக்கூர்) என விஜய் நாராயண் கூறினார்.
பேமாய் வழக்கில் சேர்க்கப்பட்ட 33 சாட்சிகளில் எட்டாவது சாட்சி யிடம் வரும் 16-ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது. சாட்சிகளில் 13 பேர் இறந்து விட்டனர்.tamil.hindu,com

குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி 11 ஆண்டுகள் சிறைவாசம் கண்டு, பிறகு அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினராகி சாதனை புரிந்த பூலான்தேவியின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு திரைப்படத்தின் மூலக்கதைக்கு சற்றும் குறையாத திகிலும், திருப்பங்களும் நிறைந்திருந்தன.

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்...

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் பள்ளத்தாக்கு பகுதி வழிப்பறி மற்றும் கொள்ளையர்களின் கூடாரமாக விளங்கியது. பலரது தலைமையில் வெவ்வேறு கொள்ளை கோஷ்டிகள் இயங்கி வந்தன.

இவற்றில் சில கொள்ளைக் கும்பல்கள் பெண்களை தலைவியாக கொண்டு செயல்பட்டன. இதுபோன்று சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அதிபயங்கர கொள்ளைக்காரியாக விளங்கியவள்தான், பூலான்தேவி.

பிறவியிலேயே பூலான்தேவி கொள்ளைக்காரி அல்ல. கொள்ளைக்காரியாக ஆக்கப்பட்டாள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்த பூலான்தேவி, மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தார்கள். 4 சகோதரிகள். ஒரு தம்பி உண்டு.

பால்ய விவாகம் (சிறு வயதில் திருமணம்) என்பது அங்கு சர்வசாதாரணமான விஷயம். வயதுக்கு வரும் முன்பே (அதாவது 11 வயதில்) பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.

திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள்.

முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான்.

ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள். அவளுடைய பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை.

கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் போலீஸ் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம் - நீதியை பாதுகாக்க வேண்டிய போலீசார் அங்கும் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர்.

இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள். பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டு உருண்டோடியது. திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.
அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதற்கிடையில்,கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இதன் பிறகே, பூலான்தேவி முழு அளவில் கொள்ளைக்காரியாக மாறினாள். விக்ரம் மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள்.

ஆனாலும், அவளுடைய ஆத்திரம் தணியவில்லை. இந்த நிலையில் 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள்.

தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி. விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள்.

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள்.

குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை-கால்களை இழந்தார்கள். இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982-ல் தனது பதவியைபதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார்படுத்தப்பட்டு காடுகளில் புகுந்து பூலான்தேவியை தேடியும், அவள் சிக்கவில்லை.

பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது.

ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் மீண்டும் உ.பி.க்குள் திரும்பி, 1982-ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.

பூலான்தேவி மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன.

வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி, குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே. ஆனால் அவளது தோற்றம் கம்பீரமாக இருந்து வந்திருக்கிறது. குதிரை மீது ஏறி அவள் வலம் வந்தால் அந்த சுற்று வட்டாரமே நடுங்கும். கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துவார்கள்.

காக்கி நிற உடையில் நெற்றியை சுற்றி சிவப்பு நிற ரிப்பனை கட்டியிருப்பது அவளுடைய தனி முத்திரையாகும். எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டா (குண்டுகள்) "பெல்ட்" உடம்பை சுற்றி காட்சி தரும்.

பல கொலை- கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12- ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜுன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.

11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றது.

மத்திய பிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பரோலில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 18-2-1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.


11 ஆண்டு கால சிறை வாசத்துக்குப்பின் "சுதந்திர பறவை"யாக வெளியே வந்த பூலான்தேவியை பார்த்ததும் கோர்ட்டுக்கு வெளியே திரண்டு இருந்த நூற்றுக்கணக்கானோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிலர் அவளை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
வழக்கமாக கொள்ளைக்காரிகள் அணியும் உடைகளுக்கு மாறாக, சேலை அணிந்து புதிய தோற்றத்துடன் காணப்பட்ட பூலான்தேவி, கூட்டத்தினரை நோக்கி திரும்பி, விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக உரத்த குரலில் கூறினாள்.

பூலான்தேவி சரண் அடைந்தபோது, 8 ஆண்டுகளில் விடுதலை செய்து விடுவதாக அரசு உறுதி அளித்து இருந்தது. ஆனால், 3 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டு, 11 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டாள். அப்போது அவளுகக்கு வயது 37.

தனக்கு மன்னிப்பு வழங்கிய சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த பூலான் தேவி, 1999ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மிர்சாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனாள்.

"எம்.பி"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44-ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம்.

2001-ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. எனவே, பூலான்தேவி டெல்லியில் தங்கி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வந்தாள்.

25-7-2001 அன்று பாராளுமன்ற கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1-30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினாள்.

அவளுடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார். வீட்டின் முன் கார் நின்றதும் பூலான்தேவி கீழே இறங்க, `கேட்'டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முன்னால் சென்றார்.

அப்போது, திடீரென்று முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி திருப்பி சுட்டார்.

ஆனால், அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது. டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

துப்பாக்கியால் தொடங்கிய பூலான்தேவியின் வாழ்க்கை, துப்பாக்கியிலேயே முடிவுற்றது.

’பாண்டிட் குயின்’ என்ற பெயரில் அவளது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்தது.
அந்தப் படம் பெரும் சர்ச்சையை கிளப்பினாலும், பூலான்தேவியைப் பற்றிய ஓரளவு விபரங்கள் வெளி உலகுக்கு தெரியவந்தது.  tamilworldpost.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக