புதன், 19 நவம்பர், 2014

இளங்கோவன்:சத்துணவு முட்டை பேரத்தில் 3,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது!

சென்னை: ''சத்துணவிற்காக, முட்டையை அதிக விலை கொடுத்து வாங்குவதால், சிலருக்கு கமிஷன் கிடைக்கிறது. இதனால், பல கோடி ரூபாய், அரசுப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்ளையடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக அரசு நிர்வாகத்தை, கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து உள்ளார், தமிழக காங்., தலைவர் இளங்கோவன்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் நேற்று அளித்த பேட்டி: காவிரியில் கர்நாடக அரசு, அணைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போரட்டத்திற்கு, தமிழக காங்கிரசும் முழு ஆதரவு அளிக்கிறது. காங்கிரசை விட்டு பிரிந்து சென்றவர்கள், வன்முறைகளில் ஈடுபடுவது சரியல்ல.
வாசனுக்கு, வன்முறை மீது நம்பிக்கை கிடையாது; அப்படியிருக்கும்போது, காஞ்சிபுரம் மாவட்ட காங்., முன்னாள் தலைவர், சக்கரபாணி ரெட்டியாரின் காரை, கட்சியில் இருந்து வெளியே சென்ற வாசன் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளனர். இதுபோன்ற சம்பவம், இனி நடைபெறாமல், வாசன் பார்த்து கொள்ள வேண்டும். வன்முறை மீண்டும் தொடர்ந்தால், வன்முறையால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில், 3,000 கோடி ரூபாய், பருப்பு கொள்முதலில், தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு, டன் பருப்பை, 43 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறது; ஆனால், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறது. இந்த முறைகேடுக்கு, உரிய அதிகாரிகள் அல்லது அதிகாரிக்கு மேலே, அமைச்சர் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் மீது உடனடியாக, முதல்வர் பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவமனையில், உரிய சிகிச்சை அளிக்காமல், 11 குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு டாக்டர்கள், நர்சுகள் காரணமா என்பதை, அரசு கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுக்காக மாதந்தோறும், 12 கோடி முட்டைகளை, தமிழக அரசு வாங்குகிறது. ஒரு முட்டை, 3.40 பைசாவுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால், 5 ரூபாய்க்கு வாங்குவதால், அரசுக்கு, 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி விலை அதிகமாக வைத்து, யார் கமிஷன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர் என்பதை ஆராய்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக