ஞாயிறு, 2 நவம்பர், 2014

தர்மபுரியில் 30 கொத்தடிமைகள் மீட்பு ! மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள்

தர்மபுரியில் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 30 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.  தர்மபுரி மாவட்டம் கலெக்டர் பங்களா அருகே உள்ள தோக்கம்பட்டியில் குமாரசாமி (60) என்பவர் ரம்யா டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முட்டைகள் வைக்க பயன்படுத்தப்படும் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு 60 பேர் வரை வேலை செய்கின்றனர். இந்நிலையில், அங்கு தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் நாராயணனுக்கு தகவல் கிடைத்தது. 


இதன்பேரில் நேற்று, அந்த நிறுவனத்தில் வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் தாசில்தார் பாரதி மற்றும் அதியமான்கோட்டை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பணியாற்றிய 12 பெண்கள் உட்பட 30 பேரை மீட்டு, தர்மபுரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் கூறியதாவது: தோக்கம்பட்டியில் முட்டை அட்டை தயாரிக்கும் குமாரசாமி என்பவரது நிறுவனத்தில் சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 30 பேர், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களை அழைத்து வரும் ஏஜென்டிடம் இவர்களது சம்பளத்தை வழங்கியதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சம்பள பணம், இங்கு பணியாற்றும் நபர்களின் வீடுகளுக்கோ, இவர்களிடமோ போய் சேரவில்லை. இதையடுத்து அனை வரும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களது முகவரி, அடையாளம் குறித்து விசாரணை நடத்தி, அனைவருக்கும் கொத்தடிமை விடுவிப்பு சான்று வழங்கப்படும். இதன்பின்னர் இவர்களை மாவட்ட நிர்வாகம் மூலம், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் -/tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக