வியாழன், 13 நவம்பர், 2014

இன்சூரன்ஸ் மசோதா: வெளிநாட்டு முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த...

பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இன்சூரன்ஸ் மசோதாவை, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதில், எதிர்பாராத முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதனால், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுவதில், காலதாமதம் ஆகுமோ என்ற சந்தேகம் எழுந்தள்ளது.கடும் முயற்சி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், கடும் முயற்சி செய்தது. அப்போதும் வழக்கம்போல எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ராஜ்யசபாவின் தேர்வுக்குழுவுக்கு, இந்த மசோதா, அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு முதலில் முட்டுக் கட்டை போட்டது அன்று எதிர்க்கட்சியாக இருந்த பா ஜ க தான். இன்று, அன்று எதிர்த்த அதே மசோதாவை நிறைவேற்ற முடியாது தவிக்கின்றது. மக்களுக்கு விரோதமான இந்த மசோதா நிறைவேறா விட்டால் ,ஒன்றும் கெட்டுவிடாது.
தேர்வுக்குழுவுக்கு தலைவராக, பா.ஜ.,வைச் சேர்ந்த சந்தன்மித்ரா நியமிக்கப்பட்டார். இந்த குழு பலமுறைக்கூடி, இன்சூரன்ஸ் மசோதா குறித்து, ஆலோசனை நடத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) ஆலோசனை கூட்டத்திற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், திடீரென அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

'கடந்த வாரம் நடந்த, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இக்குழுவின் உறுப்பினர்கள் முக்தர் அப்பாஸ் நக்வியும், நட்டாவும் அமைச்சர்களாக ஆனார்கள். அவர்களுடைய இடங் களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதும், தேர்வுக்குழு கூடி, ஆலோசனைகளை மேற்கொள்ளும்' என, சந்தன் மித்ரா அலுவலகம் தெரிவித்தது.ஆனால், 'தேர்வுக்குழுவில் பா.ஜ.,வின் பலம், மூன்றிலிருந்து ஒன்றாகிவிட்டது; தவிர, இன்சூரன்ஸ் மசோதாவை, தீவிரமாக எதிர்க்கும் உறுப்பினர்களே, அதிகம்; இதனால் போதிய ஆதரவு கிடைக்காது, என்பதாலேயே, கூட்டத்தை பா.ஜ., ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. குளிர்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட், வரும் 24ம் தேதி கூடுகிறது. இதில் புதிய தேர்வுக்குழுவை, தீர்மானமாக கொண்டுவந்து, ராஜ்யசபாவில் நிறைவேற்ற வேண்டும்.


இறுதி வரைவு மசோதா:

அதன்பின், தேர்வுக்குழு மீண்டும் முறையாக கூடி, இறுதி வரைவு மசோதா தயாரிக்கப்பட வேண்டும். பின் இது இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அதற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இத்தனை நடைமுறைகளும், விரைந்து நடப்பதற்குள், குளிர்கால கூட்டத்தொடர் முடிந்து விடக்கூடும்.பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை, விரைந்து மேற்கொள்ளும் தீவிரத்தில் இருக்கும் மத்திய அரசு, குளிர்கால கூட்டத்தொடரிலேயே, முக்கியமான, இந்த இன்சூரன்ஸ் மசோதாவை நிறைவேற்றி முடித்தால் தான், அடுத்ததாக, மத்திய பொது பட்ஜெட்டில், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது, குறிப்பிடத்தக்கது.

49 சதவீதமாக உயர்த்த எதிர்ப்பு:

இன்சூரன்ஸ் துறையில், வெளிநாட்டு முதலீடுகளின் உச்சவரம்பு, தற்போது 26 சதவீதம் மட்டுமே இருந்து வருகிறது. இதை, 49 சதவீதமாக உயர்த்துவதில், மத்திய அரசு, தீவிரம் காட்டி வருகிறது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக கருதப்படும் இந்த முயற்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே, எடுக்கப்பட்டது. ஆனாலும், இந்த நடவடிக்கைக்கு, தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது இடதுசாரி உட்பட முக்கிய அரசியல் கட்சிகளும், கடும் எதிர்ப்பை தெரிவித்தன. போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்தது.

- நமது டில்லி நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக