வெள்ளி, 24 அக்டோபர், 2014

swiss வங்கி கணக்கு விபரங்களை வெளியிட மத்திய அரசு முடிவு !

புதுடில்லி:வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராகி வருகிறது.
அதனால், முக்கிய அரசியல்வாதிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.'வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது. நம்முடன் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது.
காங்., விமர்சனம்:இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், 'பதவியேற்ற, 100 நாட்களில், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள, கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என, ஜம்பமாகப் பேசிய பா.ஜ., கட்சியினர், பல்டி அடித்து விட்டனர்' என, விமர்சித்தனர்.

காங்கிரசின் கண்டனத்திற்குப் பதில் அளித்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால், காங்கிரஸ் தலைவர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்' என்றார்.உடன், 'கறுப்பு பண விவகாரத்தில், எங்களை மிரட்டுவது போல், அருண் ஜெட்லி பேசுவது சரியல்ல. கறுப்பு பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிடுவதால், எங்களுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை' என, காங்கிரஸ் தெரிவித்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், சட்டவிரோதமாக கணக்கு வைத்துள்ள நபர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சகம் துவக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள தனிநபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
அனேகமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அளித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள, 15 முதல், 20 நபர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம்.முன்னாள் மத்திய அமைச்சர், மற்றொரு, 'மாஜி' அமைச்சரின் மகன், முன்னணி வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ள முன்னாள் எம்.பி., மற்றும் பிரபலமான அரசியல் குடும்பத்தின் வாரிசு உட்பட, சிலரின் பெயர்கள், மத்திய அரசு முதல்கட்டமாக வெளியிட உள்ள பட்டியலில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பண விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், கறுப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயர் இடம் பெற்று உள்ளதா என, கேள்வி எழுப்பப்பட்டது.புன்னகையே பதில்அதற்கு அவர், 'இதை நான் உறுதி செய்யவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன். புன்னகையே என் பதில். அதே நேரத்தில், என் அரசியல் எதிரிகள் யாராவது, அந்தப் பட்டியலில் இடம் பெற்றால், அதை நான் மகிழ்ச்சியாக அறிவிப்பேன்' என்றார்.
சுவிட்சர்லாந்து அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி, அந்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை, பகிரங்கமாக வெளியிட முடியாது. அவர்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னரே, அந்தப் பட்டியலை நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
எனவே, கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள வர்கள் குறித்த விவரங்கள் நீதிமன்றம் மூலம் வெளியாகும். அதனால், கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளவர்களுக்கு எதிராக, வருமான வரித்துறை மூலமாக, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.மேலும், இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில், அமைச்சராக இருந்த ஒருவர், சுவிஸ் வங்கியில் இருந்த தன் கணக்கை, நீண்ட நாட்களுக்கு முன், முடித்துள்ளார்.
பின், ஐக்கிய அரபு எமிரேடு நாட்டு வங்கியில் கணக்கு துவக்கி, அதில், பணத்தை டிபாசிட் செய்திருப்பது குறித்த, விசாரணைக்கு ஆஜராகும்படி, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.அதேநேரத்தில், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை, மத்திய அரசிடம் அளித்தன. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களிடம் இருந்து, வரி மற்றும் அபராதமாக, 200 கோடி ரூபாயை, மத்திய அரசு வசூலித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக