திங்கள், 13 அக்டோபர், 2014

மீடியாக்கள் அதிகம் கண்டு கொள்ளாத சமுக அவலம் ! ஒரு கைலாஷ் சத்தியார்த்தி போதாது ?

அன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை  பாகிஸ்தானின் 17 வயது  மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் இணைந்து பெற்றுள்ளார். இவரைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால் 30 வருடங்களாக இவரின் தீவிர முயற்சியால் இதுவரை 83,000 குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.



மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு எலக்ட்ரிகல் இன்ஜினியர். அவர் வாழ்ந்த இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் என்பது சர்வ சாதாரணமான நிகழ்வு. இன்று நியுயார்க் , மிலன் போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் புதிய ஆடைகள் , பேஷன் பொருட்களில் இருந்து நம் ஊர்ப்பெரியவரின் விளைநிலங்கள்  வரை குழந்தை தொழிலாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள். கூலி குறைவு ; எதிர்க்க மாட்டார்கள் ; நினைத்த வேலையை அதட்டி வாங்கலாம் போன்ற காரணங்களால் முதலாளிகளும் அவர்களையே வேலைக்கு வைக்க விரும்புகிறார்கள்.

படிக்க வேண்டிய வயதில் தொழிலாளி ஆகும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காது. காலையில் இருந்து நள்ளிரவு வரை கொத்தடிமைகளாக நடத்தப்படும் இவர்கள் பின்பு முதலாளிகளுக்கு கை கால் பிடித்து விடுவது போன்ற கொடுமைகளையும் அனுபவிக்கின்றனர். இதில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் சிறுமிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம். வறுமையின் காரணமாக புரோக்கர்கள் தரும் பணத்திற்கு மயங்கி குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் ; அதன் பின் நடக்கும் அவலங்களை அறியமுடியாது. திரும்ப குழந்தையை மீட்கவும் முடியாது.


இதை வேரோடு அறுத்து எறிய தனது 26 ஆம் வயதில் "பச்பன் பசாவோ அந்தலன்" (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்போராடத்தை தொடங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தால் ; புகார் செய்தவரை பின்னர் முதலாளிகளின்  ஆட்கள்  பிரித்து எடுத்து விடுவார்கள் என்பதால் ; இந்த அமைப்பின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.

இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக  கண்காணிப்பார்கள். புகார் உறுதி செய்யப்பட்டதும் ; அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர் அதே சத்யார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட முக்தி ஆசிரமத்தில்  அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படும் வரை அங்கு தங்கவைக்கப்படுவார்கள்.இதுபோல் மீட்கப்படும் குழந்தைகளுக்கு அரசு "குழந்தை தொழிலாளர் தடுப்பு" சட்டத்தின் கீழ் இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

1985ஆம் ஆண்டு இவர் நடத்திய  பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் மலைவாழ் பெண்கள் மற்றும் சிறுமிகள்  பற்றிய விழிப்புணர்வு போராடத்தில் ; கடுமையாக தாக்கப்பட்டார். இவருடைய அமைப்பில் இருந்த ஆதர்ஷ் கிஷோர் என்பவர் அப்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் அடித்தே கொல்லப்பட்டார்.

சாதனைத்துளிகள் :

* இவரது தீவிர போராடத்தின் விளைவு 2006 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் தடைச்சட்டம் இயற்றப்பட்டது

* இவரது ரக்மார்க் அமைப்பின் தரச்சான்றிதழ் பெரும் பொருட்கள் அனைத்தும் குழந்தைத்தொழிலாளர்கள் இன்றி உற்பத்திசெய்யப்பட்டவை


* சாக்ஸ் (SAACS) என்றும் அமைப்பின் தலைவரான இவர் தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களுக்கு செக் வைக்கப்படுகிறது.

* முன்னரே பலமுறை அமைதிக்கான நோபல் பரிசுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பல வருடங்களுக்கு முன்னரே முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இவரின் சாதனைகளை பாராட்டி விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

* இவரது அமைப்புக்கு சமிபத்தில் பொறுப்பேற்ற  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு நரேந்தர சிங் தோமர் அவர்கள் தனது முதல் மாத சம்பளத்தை வழங்கி தனது ஆதரவைத்தெரிவித்துள்ளார்.

* 1901 ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசை பெரும் எட்டாவது இந்தியர் ஆகிறார். கடைசியாக நம் நாட்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஈ.கோ.சஞ்ஜீத்
(மாணவ பத்திரிகையாளர்) vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக