திங்கள், 13 அக்டோபர், 2014

அதிமுக-வை தடை செய் – சென்னையில் பிரச்சாரம் ! அதிமுக ஒரு அரசியல் கட்சியே அல்ல ! ஒருவகை மாபியா ?

    விருத்தாச்சலம் சுவரொட்டி
  • கொள்ளைக்காரி ஜெயாவை பிணையில் விடாதே!
  • கொள்ளைக்கூட்டக் கிரிமினல் கட்சியான அதிமுகவை தடைசெய்!
  • ஜெ-சசி ஆகிய கிரிமினல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
இப்படி எல்லாம் பொது இடத்தில் பேசினால் என்ன ஆகும்? சிவகங்கை காளையார் கோயிலையே எரிச்சவங்க, எத வேணுமினாலும் செய்வாங்க, மக்கள் பயப்படுவார்கள் என்று பலர் நினைக்கலாம். நாங்கள் கூட சுவரொட்டிகளை ஒட்டும் போதும் பிரச்சாரத்துக்கு செல்லும் போது ஏதாவது பிரச்சினை வரலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் நிலைமையோ வேறொன்றாக இருக்கிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் சார்பில் திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.
அதிமுகவில் இலக்கிய அணி என்று ஒன்றுஇருக்கும், அவர்களிடம் இலக்கியம் என்றால் என்ன ? என்று கேட்டால் அதில் ‘இல’ இருக்குல்ல என்பார்கள். அந்த அளவுக்கு
திருச்சி போஸ்டர்ஞானம் படைத்தக் கட்சி அதிமுக. ஆனால் ஜெயாவை கைது செய்த பின்னர் பாருங்கள் எதுகை மோனை இல்லாத போஸ்டர் எது? இலக்கியம் இல்லாத போஸ்டர் எது? என்ற அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கரு நாகம் செய்த சதி, கரு நாடகத்தில் அரங்கேற்றம் எனத்தொடங்கி அம்மாவை விடு காவிரியை வைச்சுக்கோ என்பது போன்ற வாசகங்களைப் பார்க்கும் போது அழுவதா?சிரிப்பதா?இல்லை செருப்பை கழட்டி அடிப்பதா?என்று ஒரு கணம் புரியாமல் எவரும் நிற்க வேண்டும்.
கடந்த 27-ம் தேதியன்று தமிழ்நாடே அம்மாவுக்கு ஆதரவாக பற்றி எரிந்ததாக ஊடகங்கள் சித்தரித்தன. உண்மையில் நடந்தது என்ன? மக்கள் யாரும் ஜெயாவுக்கு ஆதரவாகப் பொங்கவில்லை, மாறாக ஓ.ப முதல் அனைத்து அல்லக்கைகளும் கண்ணீர் விட்டன.
ஒரு போராட்டத்திற்கு அனுமதி என்று கேட்டால் காக்கை கூட வராத இடத்தினை ஒதுக்கும் போலீசு அதிமுகவினர் நினைத்த இடத்தில் எல்லாம் போராட்டம் செய்யத் தடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் 5 பேர்களுக்கு மேல் சென்றால் கைது செய்யமுடியும் என நீதிவிளக்குப் பிடிக்கும் போலீசு, அதிமுகவினர் தாங்கள் விருப்பப்பட்ட இடத்தில் எல்லாம் பேரணி, ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல வணிகர்களை மிரட்டி கடையை அடைத்தும் பேருந்துகளை உடைத்தும் தீவைத்து எரித்த போது கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்தது. ஒரு கொள்ளைக்காரிக்கு ஆதரவாக அரசின் துணையுடன் ஒரு கிரிமினல் கும்பல் தமிழத்தையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றது.
போலீசை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் விருத்தாச்சலத்தில் ஒட்டிய சுவரொட்டி
மாபெரும் எதிர்க்கட்சி என்று பீற்றிக்கொள்ளும் எந்தக் கட்சிக்காரனும் ஜெயாவை அதிமுகவை எதிர்கொள்ளத் துப்பில்லை. பத்து நாட்கள் கழித்து ராமதாசும், விசயகாந்தும், கருணாநிதியும் பாதுகாப்பான அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஓட்டுப் பொறுக்கிகள் அப்படித்தான் இருப்பார்கள். மக்கள் எப்படித்தான் இருக்கிறார்கள்? ஜெவின் அயோக்கியத்தனத்தை சகித்துக்கொண்டார்களா?இல்லை ஊடகங்கள் கூறுவது போல மக்களும் ஜெயாவுக்கு மாரடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? அவர்களை சந்திக்கப் புறப்பட்டோம்.
ஜெயாவின் பேய் பீதியை ஆங்காங்கு கிளப்பிக்கொண்டு இருந்த வேளையில், மூன்று நாட்கள் சுவரொட்டிகளை ஒட்டினோம், மாநகரம் முழுக்க. கூடவே அம்மாவின் தொண்டர்கள் யாராவது பிரச்சினை செய்தால் பூசை செய்வதற்கு தயாராகவே. அம்மாவுக்காக தனது எல்லா வாய்களிலும் அழுகின்ற ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் வந்து கேள்வி கேட்கவில்லை. அம்மாவின் மீது மக்கள் பாசம் கொண்டு போராடுவதாக பொம்மை முதல்வர் கூறினாரே, அப்படி எந்த மக்களும் அம்மாவை எதிர்த்து ஏன் போஸ்டர் ஒட்டுற என்று கேள்வி கேட்கவில்லை. அவர்கள் கேட்ட முதல் கேள்வி, “ஏப்பா ரெண்டு நாள் கழிச்சு ஒட்டுறீங்க அன்னைக்கே ஒட்டியிருக்கலாம் இல்ல” என்று தான்.
ஆவடியில் அம்மாவுக்காக தொடர்ந்து அம்மாவின்முரட்டு பக்தர்கள் போராடி வருவதாக செய்திகள் கூறின. ஆனால் அங்கு சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த நமது தோழர்களிடம் ஒரு பெண் கூறினார், “தினமும் வந்து கடையை மூடச்சொல்றாங்க்கப்பா, திருட்டுப்பசங்க, வியாபாரமே இல்லை.”
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் என்று ஒட்டப்பட்டு இருந்த ஜெயாவின் சுவரொட்டிக்கு அருகில் நமது சுவரொட்டிகளை ஒட்டினோம். கோயம்பேட்டில் பேருந்துகளில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த போது ஒரு பூ விற்கும் அம்மா சொன்னார் “நல்லா ஒட்டுப்பா, எவளோ கொள்ளையடிக்குறா, அது சரின்னு போராட்டம் பண்ணுறாங்க”.
எவளோ கொள்ளையடிக்குறா, அது சரின்னு போராட்டம் பண்ணுறாங்க
கொள்ளைக்காரி ஜெயாஆஜானுபாகுவான இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதையே அருகில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்தனர். சரி பிரச்சினை என்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று தோழர்களும் இருக்க, “என் பஸ்ஸூல போஸ்டர் ஒட்டாதே”, என்று கத்திக்கொண்டு வந்தார் ஒரு ஜெ ஆதரவு நடத்துனர்.
தோழர்களின் அருகில் இருந்த அவர்களோ “யோவ் போய்யா, போய் வண்டியை எடு, வண்டி டிராபிக் ஆகப் போகுது, இங்க வந்து என்ன பேசுற” என்று அவருக்கு பதில் கொடுத்துவிட்டு “நீங்க ஒட்டுங்கப்பா” என்றனர்.
இன்னொரு உழைக்கின்ற தாயோ நம்மிடம் “தம்பி எவன் எவனோ பொறுக்கிப்பசங்க எல்லாம் போஸ்டர் ஒட்டுறானுங்க, நீ போய் அதே பஸ்ஸில ஒட்டு” என்றார்.
இப்படி நாங்கள் கவனித்தது சிலர்தான். சரியான விசயத்துக்காக தோழர்கள் நிற்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாம் உதவ வேண்டும் என்று பல உழைக்கும் மக்கள் இருந்தார்கள்.
எத்தனையோ பேர் சுவரொட்டிகளைப் படித்துவிட்டு வாழ்த்தியும் கைகொடுத்துவிட்டும் சென்றார்கள். இன்னும் சிலரோ “நீங்கள் இன்னும் போஸ்டர் போடலையேன்னு பார்த்தேன், நீங்க பயப்பட மாட்டீங்க இல்ல” என்றார்கள்.
என்.எஸ்.கே நகரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை கும்பல் கும்பலாக மக்கள் படித்து விட்டும் “நீங்களும் பயந்துடுவீங்கன்னு நினைச்சேன்” என்று கூறினார்கள்.
3பல்லாவரத்தில் அம்பேத்கர் சிலைக்கு அருகில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் உண்ணாவிரதம் என்ற பெயரில் இருந்தனர். அதற்கு அருகிலேயே தோழர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். உண்ணாவிரதத்திற்கு பிரேக் விட்டுவிட்டு ஜெயா படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்திருந்த அதிமுகவினர் ஜூஸ் குடித்தபடியே சுவரொட்டிகளை வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தனர். நமது தோழர்கள் சென்றபின்னர் போலீசு புடை சூழ சுவரொட்டிகளைக் கிழித்து தங்க்கள் வீரத்தை மெய்ப்பித்துக்கொண்டனர்.
மொத்தமாக சென்ற இடமெல்லாம் அம்மாவுக்கு ஆதரவாக எந்த சூடு சொரணையுள்ளவர்களும் வரவில்லை. தமிழகத்தில் எப்படி மோடிக்கு அலை என்பது இல்லையோ அதுபோல லேடிக்கும் அலையும் இல்லை; ஒரு வெங்காயமும்இல்லை.
இப்படி மக்கள் கொள்ளைக்காரி ஜெவுக்கு ஆதரவாக இல்லை. ஓடி ஒளிய வேண்டிய அதிமுக கொள்ளைக்கும்பல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு திரிகின்றது, அம்மாவை விடு என்கிறது, தினமும் சாலை மறியல், பேருந்துகளை உடைக்கின்றது. இந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராக மக்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்களிடமே சென்று அந்த அதிமுக அயோக்கியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அதற்காக போராட வாருங்கள் என்றும் அழைக்க இன்று காலை ரயிலில் செல்லக்கூடிய மக்களை சந்தித்தோம் பிரச்சாரத்தின் வாயிலாக…
வழக்கம் போல அதிகாலை நேரம், சிலர் தூங்க முயன்று கொண்டிருக்க, சிலர் பேசவும் பேச முயன்று கொண்டிருக்க , வழக்கம் போல மாணவர்கள் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறார்கள் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கவனிக்க சிலர் இருக்க நாம் வழக்கம் போல் அமைப்பை அறிமுகப்படுத்தினோம். இது வழக்கம் தானே, என்று வழக்கம் போல தலையைக் குனிந்து கொள்ள சிலர் முயன்ற போது, வழக்கத்திற்கு மாறான ஒன்றை- அவர்கள் இது வரை கேட்டிராத ஒன்றை, இருந்தாலும் அவர்கள் மனதில் இருந்த ஒன்றை – பேசினோம்.
  • கொள்ளைக்காரி ஜெயாவுக்கு பிணை வழங்கக்கூடாது
  • பயங்கரவாத அதிமுக கும்பலை தடை செய்ய வேண்டும்
  • ஜெ-சசி கிரிமினல்கும்பல்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்!
என்று பேச ஆரம்பித்தவுடன் பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். காவிரியை வச்சுக்கோ அம்மாவை விடு, தர்மத்தாயை விடுதலை செய் ஆகிய சுலோகங்களையே கேட்டுப் சலித்துப்போனமக்கள் இதோ இந்த புதிய முழக்கத்தைக் கேட்டவுடன் நாளிதழ்களையும் புத்தகங்களையும் மூடிவைத்தார்கள். கல்லூரி பள்ளி மாணவர்களோ பேசிக்கொண்டு இருந்த தங்களது நண்பர்களை அமைதியாக இருக்கச்சொன்னார்கள்.
“ஊரை அடிச்சு உலையில போட்டா பெயில் கிடைக்குமா ஜெயில் கிடைக்குமா, உங்க மனசில ஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி, அவருக்கு பெயில் கிடைக்கக்கூடாதுன்னுதானே இருக்கு அதைத்தானே நாங்க சொல்லுறோம்.” என்ற போது மக்களிடம் ஒரு மலர்ச்சி முகத்தில் ஏற்பட்டது. “ரயிலில் வெள்ளரிக்காய் விற்கிற ஒரு அக்கா மேல கேஸ் போடுறான் போலீசு, சமோசா விக்குற அண்ணன் மேல பொய் கேஸ் போடுறான் போலீசு, பணம் கட்டலைன்னா ஜெயிலுன்னு சொல்லுறான், அப்படீன்னா ஜெயாவுக்கு ஒரு சட்டம், இந்த அண்ணனுக்கு ஒரு சட்டமா” என்றோம்.
சமோசா விற்கின்ற ஒருவர் “தோழரே, அந்த நோட்டீசு ஒண்ணு கொடுங்க” படிக்க ஆரம்பித்தார்.
“நல்லா யோசிச்சுப்பாருங்க, ஜெயில் – லலிதா சொல்றாங்க, எனக்கு 66 வயசாயிடுச்சுன்னு, அதிமுக கட்சிக்காரன் சொல்லுறான் , அம்மாவை – தாயை விடுதலை செய்ன்னு, ஜெயலலிதா தாயா இல்லை, தாய் என்கிய பெயருக்கே அவமானம், ஆம் கோயம்பேட்டில் 70 வயசில கிழிஞ்சு போன புடவையைக் கட்டிக்கிட்டு, செருப்பில்லாமல் வேகாத வெயிலில் குப்பையில் விழுகின்ற காயை எடுத்துக்கிட்டு போய்வித்து மானத்தோடு வாழறாங்களே அவங்களும் கோடிகோடியாய் சொத்து சேர்த்து, ஆயிரக்கணக்கான தங்கப்புடவை, தங்க நகைகள், தங்கத்துல செருப்பு, ஒட்டியாணம்னு எடுத்தா அதுல பல வகைன்னு நம்ம வரிப்பணத்தை சுரண்டி எடுத்த ஜெயா தாயா இல்லைங்க, பேய்…………….”
கவனித்துக்கொண்டு இருந்த ஒரு வயதான உழைக்கின்ற தாயின் முகத்தின் உதட்டில் புன்னகை அரும்பியது.
ரயிலில் பிரச்சாரம்
ரயிலில் பிரச்சாரம்
“எங்க அம்மா மாட்டிக்கிட்டாளே, நான் எப்படி மக்கள் முகத்திலே முழிப்பேன்னு தலையை குனிஞ்சுகிட்டு போக வேண்டியவனுங்க, கடையை மூடச்சொல்லுறானுங்க, மிரட்டுறானுங்க, பேருந்துகளை உடைக்குறாங்க, பயணிகளை அடிச்சு துரத்திவிட்டு, பேருந்துகளுக்கு தீவைக்குறானுங்க, வேடிக்கை பாக்குது போலீசு, நாம பயந்து சாகணுமா? இதென்ன அநியாயமா இருக்கு? மொள்ளமாறிப்பசங்க எல்லாம் திமிரா திரிவானுங்க, உழைக்கின்றமக்கள் நாம் ஏன் ஓடி ஒளிய வேண்டும்………..?”
“தம்பி, எனக்கு நோட்டீஸ் கொடுப்பா!” என்று மக்கள் பிரசுரங்களை வாங்கினார்கள்.
“வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா என்ன செய்யுறோம்? கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும் ”
“தம்பி நான் இறங்க வேண்டிய ஸ்டேசன் வந்துடுச்சு” என்று ஒருவர் நிதியளித்து விட்டுப்போனார்.
“நாம் எதுக்கு பயப்படணும்? தினமும் உழைத்து வாழ்க்கையை போராட்டமாக நடத்தும் நாம் ஏன் பயப்படணும்? பயப்படக் கூடாது. நாங்க தொடர்ச்சியா இந்த முழக்கங்களை முன்வச்சு போராடிட்டு வருகிறோம். ஜெயாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யணும்னு போராடிய எங்க தோழர்களை சிவகங்கையிலும் கோவையிலும் கைது செய்திருக்காங்க, எங்க இருக்கு ஜனநாயகம்? அம்மாவுக்கு அழு இல்லை அழவைப்பேன்னு மிரட்டுறானே, பார்ப்பானுக்கு ஒரு நீதி உழைக்குற மக்களுக்கு ஒரு நீதியா………………….?”
அதற்குள் ஒரு வழக்கறிஞர் ” பொது இடத்துல டிஸ்டர்ப் பண்ணுறே, இது அரசியல் மேடை இல்லை, உன் இஷ்டத்துக்கு பேசாதே” என்று இழுக்க, ரயில்வேயில் குப்பை அள்ளும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருவர் “தோழரே பிரசுரம் கொடுங்க” என்று அந்த வக்கீலை முறைக்க, தலையை கீழே குனிந்த வழக்கறிஞர் அவர் மனதில் இருக்கும் அம்மா பாசத்தை பேசமுடியாத ஒரு நிலையை நினைத்து வேதனை அடைந்து கொண்டு இருந்தார்.
“இந்த அயோக்கியத்தனத்துக்கு முடிவுகட்ட எந்த ஓட்டுக்கட்சிக் காரனுங்களும் வர மாட்டாங்க, புழுத்து நாறிப் போய் கிடக்கும் இந்த அரசு அமைப்பை நொறுக்க வேணும்னா, உழைக்கின்ற மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்கணும். ஆயிரக்கணக்கான மக்கள் வீதியிலே இறங்கி அதிமுக ரவுடிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும், ஜெ, சசியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேணும், எங்களோடு இணைந்து போராட முன்வர வேண்டும். இதோ இந்த பிரசுரத்தை லட்சக்கணக்கில் போட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், அப்போதுதான் அப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டுவர முடியும். அதுக்காக உங்களால முடிஞ்ச நிதியை கொடுங்க உங்க தன்மான உணர்வில் இருந்து…………. ”
உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்த அந்த வழக்கறிஞர் புகார் கொடுத்து இருப்பார் போல, ஒரு காவலர் “பொது இடத்தில் அரசியல் பேசாதீர்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார், அதிமுகவினர் பேருந்துகளை உடைத்துக் கொண்டு இருந்த போது என்ன செய்தீர்கள் என்று நாம் கேள்வி கேட்பதற்குள்.
எத்தனையோ பேர் விரும்பி வந்து பிரசுரத்தை வாங்குவதும் தங்களுக்குள் விவாதிப்பதுமாக இருந்தனர். பிரச்சாரத்தை கேட்ட ஒருவர் “உங்க அமைப்பிலே இணைய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும்” என்றார். பலர் கை கொடுப்பதும் வாழ்த்துவதுமாக இருந்தனர். பெட்டியைவிட்டு இறங்கும் போது ஒருவர் “தலைவா, சூப்பர் தலைவா” என்றார்.
உழைக்கின்ற மக்கள்யாரும் கொள்ளைக்காரி ஜெயாவுக்கு ஆதரவாகப் பேசக் கூட இல்லை. ஜெயா ஒரு கொள்ளைக்காரிதான்; கொள்ளைக்கூடாரமான அதிமுகவை தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் துளி கூட மாற்றுக்கருத்துஇல்லை. ஆனால் வெளிப்படையாக பேசுவதற்கும் நடைமுறைக்கு வருவதற்கும் அச்சம் மட்டும்தான் தடையாக இருக்கிறது.
ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது? என்பதுதான் முன்னே உள்ள பிரச்சினை. நாம் முன்னே சென்று நடைமுறைக்கான நம்பிக்கையை விதைக்கும் போது மாற்று அதிகாரத்திற்கான கருத்துக்களை மக்கள் நடைமுறைப்படுத்துவார்கள். அப்போது அதிமுக ரவுடிகள்மட்டுமல்ல, ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் ஓலமிட்டுக்கொண்டு ஓடுவார்கள்.
ரயில் பிரச்சாரம் வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக