சனி, 25 அக்டோபர், 2014

பிரமஸ்ரீ கிரிமினல்கள் :தண்டனையில் இருந்து தப்பிய ஜெயேந்திரர்,தப்ப துடிக்கும் ஜெயா தண்டனையே பெறாத சுசாமி ?

brahma-sree-criminalsனது குற்றங்களை அம்பலப்படுத்திய மற்றொரு பார்ப்பனனைக் கோரமாகப் படுகொலை செய்துவிட்டு எந்தத் தண்டனையுமில்லாமல் விடுவிக்கப்பட்டு, தனது பஞ்சமாபாதகங்களைத் தொடரும் காஞ்சி சங்கராச்சாரி, தன்னை ஒரு “லோக குரு” என்று சொல்லிக் கொண்டு நாடு முழுவதும் சுற்றித்திரிகிறார்.
நாடறிந்த அரசியல் தரகனாகவும், அரசியல் விபச்சாரியாகவும், அந்நிய நாடுகளின் உளவாளி – கைக்கூலியாகவும் ஊழியம் செய்து பிழைக்கும் பார்ப்பன அரசியல் சதிகாரன் சுப்பிரமணிய சுவாமி, “நான் ஒரு பார்ப்பனன்; யாரிடம் வேண்டுமானாலும் உஞ்ச விருத்தி கேட்டு, யாசகம் பெற்று எப்படியும் ஜீவிப்பேன்” என்று நரித்தனமாகப் பேசுகிறார்.
“ஆம், நான் ஒரு பாப்பாத்திதான். என்னை யாரும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என்று சட்டப்பேரவையில் பகிரங்கமாகவே அறிவித்தார், ஜெயலலிதா. இதே திமிர்த்தனத்தோடு பல்வேறு கிரிமினல் குற்றங்கள் செய்துவிட்டு, கையுங்களவுமாகப் பிடிபட்ட பின்னரும், 18 ஆண்டுகள் ஜாரினியாகவும் ரஸ்புதீனுமாகவும் அரசபோகத்தில் மூழ்கித் திழைத்தார்கள், ஜெயலலிதாவும் சசிகலாவும். கடைசியில் அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டார், ஜெயா-சசி கும்பலின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நடுவர் ஜான் மைக்கேல் குன்ஹா. “நீதித்துறையில் ஒரு மாவீரன்” என்று நேர்மையான சட்ட நிபுணர்கள் போற்றும் வகையில், பார்ப்பன அதிகாரப் பரிவாரங்களின் குறுக்கீடுகள், நிர்பந்தங்களையும் மீறி, ஜெயா – சசி கும்பலின் மிக மோசமான சீண்டல்கள், குரூரமான ஆத்திரமூட்டல்களைச் சகித்துக்கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் கடுமையாக உழைத்து, குற்றவாளிகள் தப்பிவிடமுடியாதவாறு சட்டநுட்பங்களை ஆய்ந்து, இதுவரையிலான எல்லா சட்ட-நீதிகளிலும் விதிவிலக்கான ஒரு தீர்ப்பை, ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கி இருக்கிறார்.
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆட்சியும் மாநிலத்தில் பொறுக்கி-கழிசடை அரசியல் மூலமாக ஜெயா-சசி கும்பலின் ஏகபோக ஆதிக்கமும் நிலைநாட்டப்பட்டு, இனித் தம்மை யாரும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என்று பார்ப்பன – பாசிச சக்திகள் ஆணவமாகப் பேசியும் எழுதியும் வந்தார்கள். அந்த நிலையில் ஜெயா-சசி கும்பலை அரசியல் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது, நடுவர் ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு. அந்த பார்ப்பன – பாசிச சக்திகள் என்ன சொல்லிக்கொண்டார்கள்? “பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது.” இப்படிப் பீற்றிக்கொள்ளும் பார்ப்பன சமூகம் தனது பிரதிநிதிகளாக சுப்பிரமணிய சுவாமி, காஞ்சி சங்கராச்சாரி ஜெயலலிதா போன்றவர்களைத்தான் முன்நிறுத்தியிருக்கிறது. இவர்களுக்கு மாறாக ‘திறமையும் தகுதியும் இல்லாத’ சமூகமாக, பார்ப்பனியத்தால் தள்ளிவைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜான் மைக்கேல் குன்ஹா, சகாயம், உமாசங்கர் போன்றவர்கள்தாம் திறமையும் தகுதியும் மட்டுமல்ல, நேர்மையும் உறுதியும் வாய்ந்தவர்கள்.
ஜெயா-சசி கும்பலுக்குத் தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டதோடு நின்றுவிட முடியாது. அக்கும்பல் 1996 வரையில் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிக்காகத்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறது. 1996- க்குப்பிறகு அது யோக்கியமானதாக மாறிவிட்டதா? அப்போதும் அதன் பிறகும் அடித்த கொள்ளையையும் செய்த கிரிமினல் குற்றங்களையும் கணக்கில் கொண்டுவந்து தண்டிக்க வேண்டியதில்லையா? இந்தத் தீர்ப்பை ஏற்று ஜெயா-சசி கும்பல் திருந்திவிட்டதா? இன்னும் தன்னை நிரபராதி என்று சொல்லிக்கொள்ளும் அக்கும்பல், தான் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்-கருப்புப்பணத்தைக் கொண்டு இந்தத் தண்டனையிலிருந்தும் விடுபடவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தானே எத்தனிக்கும்? எனவே, ஜெயா-சசி கும்பல் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்-கருப்புப் பணத்தையும் முழுவதுமாகப் பறிமுதல் செய்யவேண்டும். அப்போதுதான் அதன் கிரிமினல் குற்றங்கள் தொடர்வது தடுக்கப்படும். அதற்காகத் தமிழ் மக்கள் போராடவேண்டும். தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள் மீது அநீதியிழைக்கப்பட்ட நிரபராதியைப் போன்ற அனுதாபம் தோற்றுவிக்கப்படுவதையும் முறியடிக்கவேண்டும்.
அரசுப் பேருந்து எரிப்பு
காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க காலிகளால் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து
ஜெயா-சசி கும்பலின் முகத்தில் அறைந்தாற்போன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பார்ப்பனப் பரிவாரங்களும், ஜெயா-சசி கும்பல் வீசியெறிந்த எலும்புத் துண்டுகளைக் கவ்விக்கொண்டுள்ள எடுபிடிகளும் விசுவாசிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே, ஜெயா-சசி கும்பல் தன் மீதான வேறு பல கிரிமினல் குற்றவழக்குகளில் இருந்து ஏதேதோ தில்லுமுல்லுகள் செய்து, விடுதலையாகி வந்து, மீண்டும் முதலமைச்சரானதைப்போல நடந்துவிடும் என்று தமிழக மக்களை நம்பவைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இதுவொன்றும் ஜெயா-சசி கும்பலும் அதன் பார்ப்பன பாசிசப் பங்காளிகளும் சாதிக்கவே முடியாத நம்பிக்கையல்ல என்பதுதான் உண்மை.
இந்த உண்மையை, ஜெயா-சசி கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைப் பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்து, தண்டனையில் இருந்து தப்பித்துக்கொண்டு வந்தது, அதற்காக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்களையும் விலைக்கு வாங்கியது உட்பட அக்கும்பலின் சட்டத்துக்குப் புறம்பான எல்லாக் கிரிமினல் தனங்களையும் நினைவில் வைத்துள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.
ஜெயா-சசி கும்பல் அ.இ.அ.தி.மு.க.வுக்குள் புகுந்து அதன் தலைமையையும் ஆட்சியையும் கைப்பற்றியதில் இருந்து, கடந்த மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் தனது சகபாடிகளான பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகளுக்கும் “அல்வா” கொடுத்தது வரை 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசியலில் மோசடிகள், பச்சைப் புளுகு – பித்தலாட்டங்கள் பலவும் செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை, பகற்கொள்ளை புரிந்துள்ளது. இவற்றோடு கட்சியின் அடிமட்ட எடுபிடிகள் முதற்கொண்டு உயர்ந்த மட்டத்திலுள்ள ஜெயா-சசி கும்பல் வரை இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளையும், (கறி-சாராய விருந்து, கள்ளவோட்டு-போலி அடையாள அட்டை, பணப்பட்டுவாடாவில் நிபுணத்துவம் என்று) கைதேர்ந்த தேர்தல் தில்லுமுல்லுகளையும் செய்து நாட்டிலேயே ஒரு பெரும் கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் குற்றக் கும்பலாகவே அ.இ.அ.தி.மு.க. உள்ளது.
அதோடு முக்கியமாக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லா தேசிய, பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், நிழல் மனிதர்கள், கருப்புப்பண-கள்ளச்சந்தை முதலைகள், கிரானைட் பி.ஆர்.பி., மணற்கொள்ளை வைகுண்டராஜன், சாராய முதலாளிகள் கர்நாடக மல்லையா மற்றும் ஆந்திர சுப்பாரெட்டி, ஏகபோக கரும்பு ஆலை அதிபர் சரத்பவார், உச்ச நீதிமன்ற நீதியரசர்களாகவும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளாகவும் உள்ள டெல்லி பார்ப்பனப் புள்ளிகள் ஆகியவர்களோடு “தனிப்பட்ட நட்பு” வைத்துக்கொண்டு சட்டத்துக்குப் புறம்பான அதிகாரமையமாக ஜெயா-சசி கும்பல் இவ்வளவு காலமும் தலைவிரித்தாடுகிறது.
இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளுக்காக இவ்வளவு காலத்துக்குப் பிறகாவது சட்டப்படி தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவை எதிர்த்தரப்பின் சூழ்ச்சி காரணமாக, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட பொய் வழக்குதானென்றும் கோயபல்சுத் தனமாகப் புளுகுப் பிரச்சாரம் செய்வதும், அவர் விடுதலையாகி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்று மக்களிடையே நம்பிக்கையூட்டுவதும் அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்களை “பிளாக் மெயில்” செய்யும் வகையில் ஒரு குற்றக்கும்பல் அராஜகமான “போராட்டங்கள்” நடத்துவதும் நாட்டில் பரவிவரும் கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் கலாச்சாரத்தை மேலும் வலுவாக்குவதுதான். கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரமுகர்கள் எல்லோருமே “தனக்கு எதிரான சூழ்ச்சி-சதி” என்று சொல்லித்தான் தப்பித்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.
நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னரே அறிவித்து “பந்த்-கடையடைப்புகள்,” வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதை எதிர்த்து ஆத்திரமடையும் நீதியரசர்களும் அரசு நிர்வாகமும் “பயங்கரவாதம், துப்பாக்கிக் கலாச்சாரம்” என்றெல்லாம் பீதிகிளப்பும் பார்ப்பனிய நியாயவான்களும், அறிவுஜீவிகளும், ஊடகங்களும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஜெயா-சசி கும்பலின் தலைமையிலான கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் படைக்கு உடந்தையான செயலாகவே உள்ளது.
இவற்றைத் தனித்துப் பார்க்கக்கூடாது. இப்போது நாட்டின் அனைத்து சமூக,பொருளாதார, அரசுக் கட்டுமானங்களும் ஒட்டுமொத்தக் கட்டமைப்புமே கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் தேர்தல் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தேர்தல் அரசியல் கட்டுமானங்களும் சீரழிந்து போயுள்ளதையும் காணவேண்டும். ஏற்கெனவே உள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் ஆளமுடியாமல் போனதையும், ஆளும் நியாயவுரிமையை இழந்துவிட்டதையும், ஆளத்தகுதியிழந்து போயுள்ளதையும் வலியுறுத்த வேண்டும்.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக