செவ்வாய், 21 அக்டோபர், 2014

பட்டாசு கொளுத்தி நாட்டை நாசமாக்குவோம் ! பட்டாசின் பின்னணியே மிகக் குரூரமானது ! தேவையா இது ?

சுத்தமான இந்தியா’என்ற பெயரில் நரேந்திர மோடி சீவக்கட்டையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். லாஜிக்கலாக பார்த்தால் அவரை எதிர்ப்பவர்கள்தான் பட்டாசுகளைக் கொளுத்தி இந்த நாட்டை அசுத்தமாக்குவோம் என்று கொடிபிடிக்க வேண்டும். இங்கு அப்படியே எதிர்மறையாக நடக்கிறது. மோடியின் ஆதரவாளர்கள்தான் பட்டாசு வெடித்து நம் இந்துத்துவத்தை நிறுவுவோம் என்கிறார்கள். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூட ‘அமைதியான தீபாவளி’ என்ற கோஷத்தைத்தான் முன்வைக்கிறார். இங்கே இருக்கும் அவரது ஆதரவாளர்கள்தான் காதைப் பிளக்கச் செய்வோம் என்கிறார்கள்.  தீபாவளியன்று நிலமும் காற்று மாசடைவதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.& பட்டாசுத் தொழிலின் பின்னணியே மிகக் குரூரமானது. காலங்காலமாக சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தின் குழந்தைகளை பட்டாசுத் தொழிற்சாலைகளின் முதலாளிகள்தான் நாசமாக்குக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள். அப்படியே பள்ளிக்குச் செல்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் பட்டாசு வேலையைச் செய்கிறார்கள். படிப்பில் கவனம் சிதறுகிறது. பிறகு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். கல்குவாரிகளுக்கும் பட்டாசுத்தொழிற்சாலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அங்கேயாவது கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தினமும் பத்து மணி நேரங்களுக்கு குறைவில்லாமல் நெடியிலேயே கிடக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பட்டாசுத் தொழிற்சாலைகளின் விபத்துகளில் காயமடைபவர்களும், உயிர் இழப்பவர்களும் எத்தனை பேர் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? வெளியில் வரும் எண்ணிக்கையே அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.
வெளியிலேயே வராமல் அமுக்கப்படும் செய்திகள் எவ்வளவு இருக்கும் என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.
விபத்துகளில் சாவது இருக்கட்டும். அந்தத் தொழிலாளர்களின் உடலில் சேரும் மாங்கனீசு மற்றும் குரோமியத்தின் அளவு தமிழகத்தின் பிற எந்தப் பகுதியில் வாழ்பவர்களைவிடவும் அதிகம். நரம்பு சார்ந்த வியாதிகள் மற்றும் மூச்சு சார்ந்த வியாதிகள் என இவர்களுக்கு வரும் வியாதிகளின் பட்டியல் பெரியது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேராவது அனுமதி பெறாத பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். இது போன்ற அனுமதியற்ற இடங்களில் நடக்கும் விபத்துக்கள் வெளியிலேயே கசியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் ஊடகத்தையும் பணத்தால் அடித்து வாயை அடக்குகிறார்கள். முகம் பெயர்ந்தவர்களும், கை கால்களை இழந்தவர்களையும் யாருமே கண்டுகொள்வதில்லை. 
இவ்வளவு நாட்கள் உள்ளூர் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சிய தொழிற்சாலையின் முதலாளிகள் இப்பொழுது சீனப் பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று கதறுகிறார்கள். பற்ற வைக்காமலே வெடிக்கும் என்று பயமூட்டுகிறார்கள். இவ்வளவு காலமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த முதலாளிகள் என்ன செய்திருக்கிறார்கள்? தினமும் இவர்கள் கொடுக்கும் நூறு ரூபாய் கூலிக்கு தங்களின் கல்வியையும் வாழ்க்கையும் ஒரு சேர இழந்த குழந்தைகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இப்பொழுது திடீரென்று சீனா பட்டாசுகளால் உயிருக்கே ஆபத்து என்று பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதைத் தவிர இதில் வேறு எந்த அரசியலும் இல்லை.
என்னவோ அரசியல் இருந்துவிட்டுப் போகட்டும். அதைத் தனியாக பேசலாம்.
பட்டாசு வெடித்துத்தான் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமா என்ன? இந்த பூமியையும் காற்றையும் இதைவிட வேறு எப்படி மாசு அடையச் செய்துவிட முடியும்? தங்களின் ப்ரஸ்டீஜைக் காட்டுவதற்காகவே அதிக சப்தமெழுப்பும் பட்டாசுகளை வாங்கிக் கொளுத்தும் குடும்பங்களைத் தெரியும். தீபாவளிக்கு மறுநாள் காலையில் இந்தியா முழுவதுமாகச் சேரும் காகிதக் குப்பைகள் பல கோடி டன்களைத் தாண்டும். தீபாவளி முழுவதுமாக எழுப்பப்படும் ஓசையின் விளைவாக பறவைகளும் விலங்குகளும் கதறி நடுங்கும். நோயாளிகளும் குழந்தைகளும் மனோவியல் பிரச்சினைகளும் உடையவர்கள் எவ்வளவோ சிக்கல்களை அனுபவிப்பார்கள். இந்தப் புகையைச் சுவாசித்துவிட்டு அடுத்த ஒரு மாதத்திற்கு ஆஸ்துமா வியாதிக்காரர்களும் காசநோய்க்காரர்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று யோசிக்கிறோமா? 
தீபாவளியைக் கொண்டாடுவோம். அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, இனிப்பு உண்டு, புதுத்துணி அணிந்து, முடிந்தால் கோவிலுக்குச் சென்று, சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து, மதியம் நல்ல உணவு உண்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு, மாலையில் குடும்பத்தோடு சிரித்துப் பேசிக் கொண்டாடுவோம். அதுதான் நமக்கும் நல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. ஒரு பக்கம் இந்தியாவைச் சுத்தம் செய்வோம் என்ற பிரச்சாரத்தைச் செய்தபடியே இன்னொரு பக்கம் பட்டாசு கொளுத்துவோம் என்பது நகைமுரண். இதில் மதம் என்கிற பார்வையைத் தவிர்த்துவிடலாம். இது நமது தேசம். நமது இயற்கை. அதை வன்புணர்ந்துதான் நம் மத உணர்வைக் காட்ட வேண்டுமா என்ன? Choice is ours   .nisaptham.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக