வாத்ராவுக்கும், டி.எல்.எப்., நிறுவனத்திற்கும் இடையே நடந்த இந்த நில பேரத்தை, அப்போது, பதிவுத் துறையில், இயக்குனர் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கெம்கா ரத்து செய்தார். ஆனாலும், கடந்த, 15ம் தேதி, அரியானாவில், சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன், வாத்ரா - டி.எல்.எப்., இடையேயான நில பேரம், சட்டப்படி செல்லத்தக்கது என, அறிவிக்கப்பட்டது.இந்த மாதத்தில், அரியானாவில், தேர்தல் பிரசாரம் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் குறித்து பெரிய அளவில் பேசினார்.
இந்நிலையில், அரியானாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்த அரசில், இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் இருவர், 'ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்' என, அறிவித்துள்ளனர்.அதனால், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதிலிருந்து, அவர் தப்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், வாத்ராவுடன் நில பேரத்தில் ஈடுபட்ட, பிரபல கட்டுமான நிறுவனமான, டி.எல்.எப்.,பும் சிக்கலில் மாட்டி உள்ளது.இந்த நில பேரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் போது, பல முக்கியமான விஷயங்கள் அம்பலமாகலாம், அதனால், காங்கிரஸ் கட்சிக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகலாம் என, சொல்லப்படுகிறது. பங்குவிலை சரிவு:
இதற்கிடையில், மும்பையில், பங்குச் சந்தையில், நேற்று டி.எல்.எப்., நிறுவனத்தின் பங்குகள் விலை, 8 சதவீதம் சரிந்தன.இந்த மாதத்தின் முற்பகுதியில், டி.எல்.எப்., நிறுவனமும், வேறு ஆறு நிறுவனங்களும், அதன் நிர்வாகிகளும், மூலதன சந்தையில் நிதி திரட்ட, மூன்று ஆண்டுகளுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' தடை விதித்தது. அப்போது, ஒரே நாளில், 28 சதவீத அளவுக்கு, டி.எல்.எப்., நிறுவன பங்குகளின் விலை சரிந்தன. அதன் தொடர்ச்சியாக, நேற்று, 8 சதவீதம் சரிந்துள்ளது. நேற்று ஒரு பங்கின் விலை, 109.80 ரூபாயாக இருந்தது.அதேநேரத்தில், செபி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த, பங்குகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில், டி.எல்.எப்., நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவானது, வரும், 30ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ., வெளியிட்ட வீடியோ
*அரியானாவில் ராபர்ட் வாத்ரா மேற்கொண்ட நில பேரங்களில், சில மாற்றங்களை செய்ய, அப்போதைய ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா மறுத்தார். பின், பதவியைத் துறந்த அவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
*டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, 65 கோடி ரூபாயை, வட்டி இல்லா கடனாக, ராபர்ட் வாத்ரா வாங்கியதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
*ராபர்ட் வாத்ராவின் நில பேரங்கள் தொடர்பாக, 'தாமாத் ஸ்ரீ' (மருமகன்) என்ற தலைப்பில், வீடியோ ஒன்றையும், சில பக்கங்கள் கொண்ட பிரசுரத்தையும், ஏப்ரல் மாதத்தில், பா.ஜ., கட்சி வெளியிட்டது.
*அந்த வீடியோவில், அரியானா மற்றும் ராஜஸ்தானில், ராபர்ட் வாத்ரா ஏராளமான நில பேரங்களில் ஈடுபட்டதாகவும், அதற்கு அம்மாநில முதல்வர்களாக இருந்த, பூபிந்தர் சிங் ஹூடாவும், அசோக் கெலாட்டும் உதவி செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
*டில்லியை தலையிடமாகக் கொண்டு செயல்படுகிறது, டி.எல்.எப்., கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஒரு அங்கமான டி.எல்.எப்., ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட், 15 மாநிலங்களில் உள்ள, 24 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம் இது.
*'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், ராபர்ட் வாத்ரா, 'ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி' உட்பட, 12
நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பங்கு வெளியீட்டின் போது, பல முக்கியமான தகவல்களை, முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதால், டி.எல்.எப்., நிறுவனமும், அதன் மூத்த நிர்வாகிகளும், பங்குச் சந்தையை அணுகக் கூடாது என, 'செபி' தடை விதித்தது.
பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் - கட்டார்
''அரியானாவில் நடந்த நில மோசடி விவகாரத்தில், எந்த விதமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம். அதே நேரத்தில், இந்த மோசடியில் சட்டம் தன் கடமையைச் செய்யும்,'' என, அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:நில பேரங்கள் தொடர்பாக, முந்தைய அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அமலாக்கத்தில் உள்ள திட்டங்கள் எல்லாம், மறுபரிசீலனை செய்யப்படும். அதற்காக, முந்தைய அரசின் அனைத்து அறிவிப்புகளும், ரத்து செய்யப்படும் என, அர்த்தம் அல்ல. நில மோசடி விவகாரத்தில், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது எடுக்கப்படும்.இவ்வாறு, கட்டார் கூறினார்.
அரியானா பா.ஜ., அரசில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள, அனில் விஜ் கூறியதாவது: அரியானாவில், நில விவகாரத்தில், மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், விவசாயிகளிடம் இருந்து, முந்தைய மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், பெரிய அளவிலான லாபம் பார்க்கப்பட்ட பின், பொதுமக்களுக்கு, வீட்டு மனைகளாக வழங்கப்பட்டுள்ளன.இந்த நில மோசடியின் ஒவ்வொரு அங்குலம் குறித்தும் விசாரிக்கப்படும். எந்த ஒரு அதிகாரியோ, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவோ, சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவோ என, யார் குற்றம் புரிந்திருந்தாலும், அவர்களை விட்டு விட மாட்டோம்.இவ்வாறு, அனில் விஜ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக