செவ்வாய், 28 அக்டோபர், 2014

8 பேர் Swiss கறுப்புபணப்பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

 வெளிநாட்டு வங்கிகளில், பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ சுரங்க நிறுவனம், அதன் இயக்குநர்கள் ராதா சதீஷ் டிம்ப்லோ, சேத்தன் எஸ் டிம்ப்லோ, ரோகன் எஸ் டிம்ப்லோ, அண்ணா சி டிம்ப்லோ, மல்லிகா ஆர் டிம்ப்லோ ஆகிய 8 பேர் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
அதில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான "டாபர் இந்தியா'வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வெளிநாட்டு வங்கிகளில், பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ சுரங்க நிறுவனம், அதன் இயக்குநர்கள் ராதா சதீஷ் டிம்ப்லோ, சேத்தன் எஸ் டிம்ப்லோ, ரோகன் எஸ் டிம்ப்லோ, அண்ணா சி டிம்ப்லோ, மல்லிகா ஆர் டிம்ப்லோ ஆகிய 8 பேர் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்களில், பர்மனின் பெயர், பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது. மற்ற 7 பேர் விவரம், பிற வெளிநாடுகளின் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டது.
இதேபோல், வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் மற்ற அனைவரது பெயர்களையும் வெளியிடுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.
எனினும், வெளிநாட்டு வங்கிகளில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் அனைவரது கணக்குகளையும் சட்டவிரோதமானவையாகக் கருத முடியாது. ஏனெனில், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் கிடைக்கும்வரை பிற விவரங்களை அரசால் வெளியிட முடியாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில், நாட்டு மக்களுக்கு ரகசியத்தைக் காக்கும் அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆகையால், அந்த உரிமையை அரசால் நிராகரிக்க முடியாது. மேலும், அரசமைப்பு சட்டத்தின் 32(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுகிறவரை, வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட மற்ற பெயர் விவரங்களை அரசால் வெளியிட முடியாது.
முந்தைய உத்தரவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்:
கருப்புப் பணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முதலீடு செய்த அனைவரது பெயர்களையும், அவை கருப்புப் பணம் இல்லாத பட்சத்திலும் வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அந்தப் பெயர்களை வெளியிட்டால், அதுதொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்வதில் பிரச்னை ஏற்படும்.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்பட அரசு தன்னிடம் இருக்கும் விவரங்களை வெளியிடாமல் வைத்திருப்பதில், எந்த உள்நோக்கமும் கிடையாது. பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு வசதியாகத்தான், முந்தைய உத்தரவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அரசு கோருகிறது.
பல்வேறு ஒப்பந்தங்கள் அடிப்படையில் அந்த விவரங்களை இந்தியா பெற்றுள்ளது. சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள் முடிந்த பிறகு, அதில் வரி ஏய்ப்பு செய்தோரின் விவரங்களை அரசு வெளியிடும் என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டாபர் மறுப்பு: இதனிடையே, பிரதீப் பர்மன் வெளிநாட்டு வங்கியில், கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லை என்று டாபர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிரதீப் பர்மன், வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தபோதுதான் அந்தக் கணக்கு தொடங்கப்பட்டது. அனைத்துச் சட்டங்களுக்கும் உள்பட்டே நாங்கள் செயல்படுகிறோம். நாங்களே முன்வந்து கணக்கு தொடர்பான தகவலை அளித்தோம். மேலும், சட்டப்படி வருமான வரி உள்பட அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லை-லோடியா: இதேபோல், சுவிட்சர்லாந்து வங்கியில் தனக்கு கணக்கு கிடையாது என்று பங்கஜ் சிமன்லால் லோடியா மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வருமான வரித் துறையிடம் இந்தத் தகவலை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம்' என்றார்.
ராதா டிம்ப்லோ கூறுகையில், "மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை முதலில் நான் படித்துப் பார்க்க வேண்டும்; அதன்பிறகுதான் கருத்துத் தெரிவிக்க முடியும்' என்றார்.
பின்னணி: மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, லீச்டென்ஸ்டெய்ன் நாட்டின் எல்.எஸ்.டி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த 18 பேரின் பெயர்ப் பட்டியலை தாக்கல் செய்தது. அதில், அம்ரூவோனா தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் மனோஜ் துபேலியா, அம்ப்ரீஷ் துபேலியா, பவ்யா மனோஜ் துபேலியா, மனோஜ் துபேலியா, ரூபால் துபேலியா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் சிலரது பெயர் விவரங்களை சீலிட்ட உறையில் ரகசியமாகத் தாக்கல் செய்தது. எனினும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரமில்லை என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மத்தியில் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக