சனி, 4 அக்டோபர், 2014

ராமதாஸ்: ஜெயலலிதாவின் அமைச்சர்களை போல நீதிமன்றங்களும் சட்டங்களும் அவரின் அடிமைகளல்ல!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவ ித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் வன்முறைகளும், போராட்டங்களும் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன. கட்சித் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க.வினர் அரங்கேற்றும் கேலிக்கூத்துக்கள் நீதித்துறையின் மாண்பை குலைப்பதாக உள்ளன. >ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சொத்துக்கள் உள்ளிட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேதப்படுத்திய அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் சேலம் உள்ளிட்ட நகரங்களில் பேரூந்துகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.ஜெயலலிதா முன் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் எப்படி கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறார்களோ? அதேபோல் சட்டங்களும், நீதிமன்றங்களும் நிற்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கு மாறாக ஊழலை ஒழிக்கும் நோக்குடன் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்ததை அ.தி.மு.க.வின் காரியவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் தமிழகம் முழுவதும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் எப்படியெல்லாம் சொத்துக்களைக் குவித்தார்கள் என்பதை நீதிபதி குன்ஹா தமது தீர்ப்பில் விளக்கியுள்ளார். ‘‘ ஜெயலலிதா ஊழல் மூலம் சேர்த்த பணத்தில் ரூ.14 கோடியை நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கான சந்தா என்ற பெயரில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இந்த பணம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள மற்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அந்த நிறுவனங்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. 

ஆனால், சந்தா சேர்த்ததற்கான ரசீதுகள் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அவையெல்லாம் திருட்டு போய்விட்டது என்று காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்ட மனு கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டதன் மூலம் ஊழலை மறைக்க செய்யப்பட்ட பித்தலாட்டங்களை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தீர்ப்பின் இன்னொரு பகுதியில்,‘‘ சொத்து வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டோரை பங்குதாரர்களாகக் கொண்டு 1991&96 காலத்தில் 18 நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் இவை குறிப்பிடும்படி எந்த வணிகமும் செய்யவில்லை. ஆனால், இவற்றின் பெயரில் தான் பெருமளவில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கின்றன’’ என்று நீதிபதி கூறியிருக்கிறார். இதற்குப் பிறகும் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

ஊழல் வழக்குகளில் முதல்வராக இருந்தவர்களோ அல்லது அரசியல்கட்சித் தலைவர்களோ தண்டனை பெறுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இது முதல் முறையல்ல... கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது 2 ஊழல் வழக்குகளைத் தொடர அம்மாநில மக்கள் நீதிமன்றம் ஆணையிட்டதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டு இப்போது ஜெயலலிதா உள்ள அதே சிறையில், அதே அறையில் 21 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். 

அதேபோல், கர்நாடக அமைச்சராக இருந்த ஜனர்த்தன ரெட்டி 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக ஆந்திர சிறையிலும், கடந்த ஓராண்டாக ஜெயலலிதா இப்போது அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரகாரம் சிறையிலும் விசாரணைக் கைதியாக உள்ளார். கர்நாடக மாநிலத்திலேயே இவர்கள் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த போதிலும், இவர்கள் மீதான குற்றச்சாற்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்ற போதிலும் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து இவர்களின் கட்சியி னர் எந்தவித போராட்டத்தையும் நடத்தி நீதித்துறையை அச்சுறுத்தவில்லை.

அதேபோல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைவர்களும் நீதிமன்றத் தீர்ப்புகளை தலைவணங்கி ஏற்றுக் கொண்டுள்ளனர். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் மாநில முதலமைச்சருமான லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி தீர்ப்பளித்தது. அதன்பின் 75 நாட்கள் சிறையில் இருந்த லாலு கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தான் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக விடுதலை செய்யப்பட்டார்.

 ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் மே 23 ஆம் தேதி வரை 123 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகே பிணை பெற முடிந்தது. அதுவும் 78 வயதான அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இடைக்கால பிணை மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கு முன் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டபோதெல்லாம் அவர்கள் நிவாரணம் வேண்டி மேல் நீதிமன்றங்களுக்குத் தான் சென்றார்களே தவிர பொதுமக்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களைத் திரட்டி போராட்டம் நடத்தவில்லை. சட்டத்தையும், நீதியையும் அவர்கள் மதித்தார்கள்; மிதிக்கவில்லை.

ஜெ யலலிதாவை அப்பழுக்கற்றவர் என்பது போல காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்படுவதும் புதிதல்ல. 1996ஆம் ஆண்டில் ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீது மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா மீது மட்டும் சொத்துக்குவிப்பு வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு, டான்சி வழக்கு, பிளசன்ட் ஸ்டே வழக்கு, வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டி ஊழல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு, ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமான வழக்கு, தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பர வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு, ஸ்பிக் பங்கு வழக்கு, வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற வழக்கு என 12 வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் ஓராண்டும் சிறை தண்டனை பெற்றவர் தான் ஜெயலலிதா. பின்னர் எப்படியோ இவ்வழக்குகளில் மேல்முறையீடு செய்து தப்பி விட்டார். மற்ற வழக்குகளையும் தமது செல்வாக்கால் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார். 

இந்த வழக்குகள் தொடரப்பட்ட போது, வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா 3 வாரங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது போட்டிப்போட்டுக்கொண்டு போராட்டம் நடத்துபவர்கள் அப்போது அடங்கிக் கிடந்தனர். பல வழக்குகளில் ஜெயலலிதா எப்படியோ விடுதலை ஆன போது அந்த தீர்ப்புகள் நியாயமானவையா? என அ.தி.மு.க.வினரும், அவர்களின் ஆதரவாளர்களும் கருத்துக் கூறவில்லை.

ஆனால், இப்போது ஜெயலலிதாவுக்கு தண்டிக்கப்பட்டதை எதிர்த்து விசாரணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவில் தொடங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவர் மீதும் அ.தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. ஒரு தீர்ப்பில் உடன்பாடு இல்லையென்றால் அதற்கு எதிராக முறையிட வேண்டிய இடம் மேல்நீதிமன்றம் தான். ஆனால், சட்டத்தை இயற்றுவதற்கும், அரசியல் சட்டத்தை திருத்துவதற்கும் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள அ.தி.மு.க.வினரே நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். 

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தாங்கள் அழைத்தால் ஓடிவரும் பணியாளர்கள் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா மீதான வழக்கை இந்த நேரத்தில் விசாரிக்க வேண்டும்; இப்படித் தான் விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றத்திற்கே அ.தி.மு.க.வினர் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர்களின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்து, ‘‘நீதிமன்றத்தை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள்’’ கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இன்னொருபுறம் தேவையே இல்லாமல் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அ.தி.மு.க. நாளிதழில் என்னையும், கலைஞர், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதப்படுகின்றன. கலைஞரின் வீட்டுக்கு அருகில் அ.தி.மு.க.வினர் வன்முறை செய்த நிலையில், அதற்காக கலைஞர் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. நேற்று கூட நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் வைகோவின் வீட்டுக்கு அருகில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வன்முறை செய்துள்ளனர்.

 இதற்கு காவல்துறை அதிகாரிகள் துணை போனதுடன் பாதுகாப்பும் அளித்துள்ளனர். கடைசியில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அ.தி.மு.க.வினரை அடித்து விரட்டியிருக்கிறார்கள். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று காலை முதல் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான வகையில் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர்.

‘‘நீதிமன்றங்களும், சட்டங்களும் எங்களுக்கு கட்டுப்பட்டவை. நாங்கள் சொல்வதை அவை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கேட்கவைப்போம்’’ என்பதைப் போலத்தான் அ.தி.மு.க.வினரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க.வினரின் இந்த அத்துமீறல்களையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பொம்மை அரசு வேடிக்கை பார்க்கலாம். ஆனால், மத்திய அரசும், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. 

எத்தனையோ அத்துமீறல்களை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்து தானாக வழக்குத் தொடர்ந்து நீதி வழங்கிய நீதிமன்றங்கள், தமிழகத்தில் அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாங்களாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும்; சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் தொடர்பான அதி.மு.க.வினரின் நினைப்பு தவறு என்பதை அவர்களுக்கும், அவர்களின் தலைமைக்கும் புரிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’ nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக