சனி, 18 அக்டோபர், 2014

அமெரிக்காவிலிருந்து கோழிக்கால் இறக்குமதியை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அமெரிக்காவிலிருந்து கோழிக்கால்கள் உள்ளிட்ட கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பளித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் பறவைக்காய்ச்சல் நோய் பரவுவதுடன், கோழிக்கறி வணிகமும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கோழி இறைச்சி உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதைப் போலவே பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்புவதிலும் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிக் கால்களால் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அத்தகைய இறக்குமதிக்கு தடை விதித்து 2007 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஆணையிட்டது. அதை எதிர்த்து உலக வர்த்தக நிறுவனத்தின் தீர்ப்பாயத்தில் அமெரிக்கா தொடர்ந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக அமெரிக்க கோழி இறைச்சிக்கு தடை விதித்து இந்தியா பிறப்பித்த ஆணை பன்னாட்டு வணிக விதிகளுக்கு ஏற்றதாக இல்லை என்று உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஒரு நாடு அதன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும் என்றால் அது விதியின் குற்றமே தவிர, சம்பந்தப்பட்ட நாட்டின் குற்றமல்ல. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெருமளவில் கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக இந்தியாவிலிருந்து கோழிக்கறியை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. அதன்பின் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சா மாம்பழத்தில் பூச்சிகள் இருப்பதாகக் கூறி அதன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட உலக வர்த்தக அமைப்பு, இந்தியா விதித்த தடையை மட்டும் நீக்குகிறது என்றால் அதன் செயல்பாடுகள் பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளன என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்.
அமெரிக்காவுக்கு சாதகமான இந்த தீர்ப்பு இந்தியாவில் மருத்துவ அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு முழுக்கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதில்லை. மாறாக அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் கோழியின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு, தேவையில்லை என்று குப்பையில் வீசப்படும் கோழியின் கால் பகுதிகள் தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், அது அமெரிக்க கோழி இறைச்சிக் கழிவுகளை குவித்து வைக்கும் குப்பைத் தொட்டியாக இந்தியாவை மாற்றிவிடும்.
அதுமட்டுமின்றி, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கோழிக்கால்கள் அமெரிக்காவில் தீண்டத்தகாதவை என்பதால், அவற்றுக்கு அங்கு பெரிய அளவில் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. இதனால் அவை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது இந்தியாவில் உள்நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் கோழிக்கறி விற்பனையை கடுமையாக பாதிக்கும். இந்தியாவின் ரூ.50,000 கோடி மதிப்புள்ள கோழி இறைச்சி விற்பனை சந்தையில் 40 விழுக்காட்டை அமெரிக்க கோழிக்கால்கள் கைப்பற்றிக் கொள்ளும் என்பதால் இந்திய கோழி வளர்ப்பாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும்.
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, அனைத்து மாவட்ட கிராமப் பகுதிகளிலும் கோழி வளர்ப்பு குடிசைத் தொழிலாக மாறி விட்ட நிலையில், அமெரிக்க கோழிக்கறியின் வருகை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து விடும். அமெரிக்காவிலிருந்து முழுக்கோழி இறக்குமதி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் போட்டியை சமாளிக்க இந்திய கோழி வளர்ப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், கழிவுகளை இறக்குமதி செய்து அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்வதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் இந்தியா நோயாளிகளின் நாடாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; அதன்மூலம் இந்திய கோழி வளர்ப்பாளர்களை காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக