செவ்வாய், 7 அக்டோபர், 2014

மங்கள்யான்' வெற்றியை 'இழிவுபடுத்தும்' கார்ட்டூன்: மன்னிப்புக் கோரியது 'தி நியூயார்க் டைம்ஸ்'

இந்தியாவின் 'மங்கள்யான்' வெற்றியை இனவாத அடிப்படையில் இழிவுபடுத்தி கருத்துச் சித்திரம் (கார்ட்டூன்) வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், தமது கருத்துச் சித்திரம், வாசகர்கள் மனத்தை காயப்படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான 'தி நியூயார்க் டைம்ஸ்'சில் செப்டம்பர் 28-ஆம் தேதி, இந்தியாவின் 'மங்கள்யான்' விண்கலம் சாதனையைக் குறிக்கும் விதமாக கருத்துச் சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், எலைட் ஸ்பேஸ் கிளப் அறைக்குள் செல்வதற்காக, இந்தியராக வருணிக்கப்பட்ட ஒருவர் தனது கையில் மாடு ஒன்றுடன் கதவைத் தட்டுவது போல் கருத்துச் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது .
இந்தக் கருத்துச் சித்திரம் இந்தியர்கள் மட்டுமின்றி, ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இனவாதத்துடன் நாடுகளைப் பிளவுப்படுத்தும் விதமான கருத்துச் சித்திரம் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் கருத்துச் சித்திரத்துக்கு எதிராக 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு கருத்துகள் குவிந்தன.
குறிப்பாக, அந்தப் பத்திரிகையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒவ்வொரு செய்திப் பகிர்வுக்கும் கீழே, இந்திய இணையவாசிகள் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தவண்ணம் இருந்தனர். அதில், மலையாள மொழியில் அதிக கருத்துகள் பதியப்பட்டிருந்தன.
கடும் எதிர்ப்புக் கிளம்பியதன் எதிரொலியாக, அந்த சர்ச்சைக்குரிய கருத்துச் சித்திரம் குறித்து 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தியாவின் விண்வெளி பயணம் குறித்து நாங்கள் வெளியிட்ட கருத்துச் சித்திரத்துக்கு வாசகர்களிடமிருந்து பெரிய அளவில் புகார்கள் வந்து குவிந்துள்ளன. இந்தியாவை குறைத்து மதிப்பிடும் வகையில் அந்தக் கருத்துச் சித்திரம் இருப்பதாக வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், எங்களது கார்ட்டூனிஸ்ட் ஹெம் கிம், அந்த நோக்கத்தோடு அதனை வரையவில்லை. விண்வெளி பயண சாதனையில் இனி வளர்ந்த நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே இடம் என்ற நிலை இல்லை என்பதையே அந்தக் கருத்துச் சித்திரம் விளக்குகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஹெம் கிம், சர்வதேச விவகாரங்களை மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வழங்கும் ஆற்றல் உடையவர். இருப்பினும் அவரது கருத்துச் சித்திரத்தால் வாசகர்கள் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். வாசகர்களில் ஆதரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி செலுத்துகிறோம்" என்று 'தி நியூயார்க் டைம்ஸ்' விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரகமாக கடந்த மாதம் நிலைநிறுத்தப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த சாதனையை படைத்துள்ளன. இந்தியா இந்த பெருமையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
மங்கள்யானை செவ்வாயை நோக்கிச் செலுத்துவதற்கான வேகத்தைப் பெறுவதற்கு பூமியின் ஈர்ப்புவிசையையே பயன்படுத்திக்கொள்ள அசிஸ்ட் (Gravity Assist) என்ற உத்தி பயன்படுத்துப்பட்டு, மிக குறைந்த செலவில் இந்த சாதனையை இந்தியா நிகழ்த்தியது. குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியை பிற நாடுகள் பின்பற்ற வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக