ஞாயிறு, 19 அக்டோபர், 2014

நேரடி மானிய திட்டம் ! காங்கிரசின் திட்டத்தை பாஜக பின்பற்ற முடிவு !

முந்தைய மத்திய அரசு அறிமுகப்படுத்திய, நேரடி மானிய திட்டத்தை, நவம்பர், 10ம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே, சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தை, மீண்டும் திறமையான வகையில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியமானது, நவம்பர், 10ம் தேதி முதல், பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.டில்லியில் உள்ள அரசு பங்களாக்கள் எதுவும், இனி, தலைவர்களின் நினைவகங்களாக மாற்றப்படாது.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், முதல்கட்டமாக, 35.9 கி.மீ., துாரத்திற்கு, 10 ஆயிரத்து, 773 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனத்திற்கு, ஒரே கட்டமாக நிதி உதவி அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், உரத்தொழிற்சாலைகளுக்கு, 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மானியம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, நவம்பர், 1ம் தேதி முதல், புதிய விலை நடைமுறை அமலுக்கு வரும். அதன்பின், ஏப்ரல், 1ம் தேதி மற்றும் அக்டோபர், 1ம் தேதி என்ற ரீதியில், ஆண்டுக்கு இரண்டு முறை, எரிவாயு விலை மாற்றி அமைக்கப்படும்.எரிவாயுவுக்கான புதிய விலையானது, யூனிட் ஒன்றுக்கு, 5.61 டாலராக (340 ரூபாய்) இருக்கும். இந்த புதிய விலை அறிவிப்பு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, தற்போதைக்கு பொருந்தாது.

ஒடிசாவில், 133 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த, 1,477 கோடி ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இவ்வாறு, அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

நடந்தது என்ன?



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, நேரடி மானியத் திட்டம், 18 மாநிலங்களில் உள்ள, 289 மாவட்டங்களில், அமல்படுத்தப்பட்டிருந்தது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில், காஸ் சிலிண்டருக்கான மானியத் தொகை, நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஆதார் அட்டை பெறாதவர்களும், வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்து, சமையல் எரிவாயு ஏஜன்சிகளில் கொடுக்காதவர்களும், மானியத் தொகை பெற முடியவில்லை. இதையடுத்து, ஐ.மு., கூட்டணி அரசு நேரடி மானிய திட்டத்தை, ஜனவரி, 30ம் தேதி நிறுத்திவைத்தது. 'அரசின் மானிய உதவி பெறுவோர், ஆதார் அட்டையை பெற வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது' என, ஆதார் அட்டை தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும், நேரடி மானிய திட்டத்தை, மத்திய அரசு நிறுத்தி வைக்க ஒரு காரணம்.ஆனால், அந்த நேரடி மானிய திட்டத்தை ஆய்வு செய்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அதை மீண்டும் முழுவீச்சில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

- நமது நிருபர் குழு -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக