திங்கள், 13 அக்டோபர், 2014

ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு மாற்றப்படுவார் ?

ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு மாற்றப்படுவாரா? என்பதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பதில் அளித்துள்ளார்.
சிறப்பு பேட்டி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் சிறைக்கு சென்று நேற்றுடன் 16 நாட்கள் ஆகின்றன. சிறையில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் வைத்து நேற்று “தினத்தந்தி’’ நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நலம் விசாரிக்கிறேன் ஜெயலலிதா கடந்த 27–ந் தேதி சிறைக்கு வந்த நாளில் இருந்து இதுவரை அவர் ஒருவரை கூட சந்தித்து பேசவில்லை. நான் அவரை அவ்வப்போது சந்தித்து அவரது உடல் நலம் குறித்தும், அவருக்கு ஏதாவது வசதிகள் வேண்டுமா? குறைகள் இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்து வருகிறேன்.
ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளன. அவை கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அவர் அமைதியாக உள்ளார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் உள்ளனர். சிறையில் பொதுவாக எந்த ஒரு அறையிலும் தனியாக ஒரு கைதியை நாங்கள் அடைப்பது இல்லை.
அனைத்து அறைகளிலுமே 3, 4 கைதிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். அதேபோல் தான் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோர் உள்ளனர். இது அவருக்காகவே செய்யப்பட்ட வசதி கிடையாது. சிறையில் அவரை பார்த்து பேசும்போது “எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. நான் நலமாக உள்ளேன்’’ என்று ஜெயலலிதா கூறுகிறார். சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டும் ஒரு சில பார்வையாளர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து... கடந்த 7–ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. தொலைக்காட்சிகளில் முதலில் ஜாமீன் கிடைத்துவிட்டதாக செய்தி வெளியானது. அந்த நேரத்தில் ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என்று செய்தி வெளியானபோது அவர் மவுனமாகவே இருந்தார். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்பட்ட பிறகு கர்நாடக சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஜெயலலிதா இதுவரை தன்னை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க முடியும். இதற்கு கோர்ட்டு அனுமதி தேவை இல்லை. ஒரு கைதியை ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.
கோரிக்கை வைப்பது இல்லை ஆனால் ஜெயலலிதாவை கேட்காமல் இதில் முடிவு எடுக்க முடியாது. அவரை தமிழ்நாடு சிறைக்கு இடமாற்றம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். அவர் தன்னை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தால் அதை நாங்கள் அரசுக்கு அனுப்பி வைப்போம். அவற்றின் மீது மாநில அரசு முடிவு எடுக்கும். சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வந்த பிறகு ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் இந்த பிரச்சினை எழாது.
‘சிறை விதிப்படி என்ன வசதிகள் கொடுக்க முடியுமோ அதை மட்டும் கொடுத்தால் போதும். எனக்கு சொகுசு வசதிகள் எதுவும் வேண்டாம்’ என்று ஜெயலலிதா கூறுகிறார். இது வேண்டும், அது வேண்டும் என்று எந்த கோரிக்கையையும் அவர் முன்வைப்பது இல்லை. மருத்துவர்கள் அறிவுரைப்படி அவருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க விதிமுறையில் இடம் உள்ளது. ஆனால் ஜெயலலிதா வெளியில் இருந்து வரும் உணவுகளை எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெயலலிதா ஒரு பெரிய மக்கள் தலைவர் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் அவரை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம். அவர் இங்கு இருப்பதை நாங்கள் சுமையாக கருதவில்லை. அவர் எங்களுக்கு எந்த விதத்திலும் தொல்லை கொடுப்பது இல்லை.
பயப்பட வேண்டாம் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். சிறையில் ஜெயலலிதா உடல் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை பற்றி யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஜெயலலிதாவை கவனிப்பதற்கு ஒரு பெண் அதிகாரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனால் மைசூர் சிறையில் இருந்த பெண் சிறை அதிகாரி திவ்யஸ்ரீயை இங்கே அழைத்து வந்தோம். அவர் ஜெயலலிதாவை கவனித்துக் கொள்கிறார். அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்.
இவ்வாறு ஜெயசிம்மா கூறினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக