வியாழன், 23 அக்டோபர், 2014

நிலவில் மனிதன் நடந்ததைவிட பெரிய மருத்துவ சாதனை

நிலவில் மனிதன் நடந்ததைவிட பெரிய மருத்துவ சாதனை
நிலவில் மனிதன் நடந்ததைவிட பெரிய மருத்துவ சாதனை2010 ஆம் ஆண்டு நாற்பது வயதான டெரிக் பிடிகா என்பவர் மீது மோசமான கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவரது முதுகுத்தண்டுவடத்தில் குறிபிட்ட ஒரு இடத்தில் இருந்த தண்டுவட நரம்புகள் பெருமளவு அறுந்துபோயின. அதன் விளைவாக அவரது உடலின் நெஞ்சுப்பகுதிக்கு கீழே செயலற்றுப்போனது
அவரது அறுந்துபோன முதுகுத்தண்டுவட நரம்புகளை மீண்டும் உருவாக்குவதற்கு போலந்தில் இருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்களும் லண்டனில் இருக்கும் விஞ்ஞானிகளும் சேர்ந்து புதிய சிகிச்சை முறையை உருவாக்கினார்கள்.>நாசியின்செல்கள் மனிதனை நடக்கவும் வைத்திருக்கின்றன
மனிதர்களின் நாசித்துவாரத்தின் இருபுறத்திலும் ஓஇசிஎஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ஒருவித பிரத்யேக செல்களை உற்பத்தி செய்யும் நுகர்வுச் செல்குருத்துத் தொகுதிகள் இருக்கும். இந்த குறிபிட்ட ஒஇசிஎஸ் செல்கள் தான் மனிதர்களின் வாசனை அறியும் செயலுக்கு காரணமானவை. இந்த குறிப்பிட்ட ஒஇசிஎஸ் செல்கள் நாசித்துவாரப்பாதையை அமைக்கும் செல்களாக நாசித்துவாரமெங்கும் பாசிபோல படிந்திருக்கும்.
நாசித்துவாரத்தில் இருக்கும் நுண்ணிய நரம்பு நார்களை நாள்தோறும் புதுப்பிக்கும் வேலையை இந்த ஓஇசிஎஸ் செல்கள் தான் செய்கின்றன. எனவே இந்த நுகர்வுச்செல் குருத்துத் தொகுதிகள் தொடர்ந்து நரம்புச்செல்களை உற்பத்தி செய்யும் தன்மையை இயற்கையிலேயே கொண்டிருக்கின்றன.
இந்த சிகிச்சையின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தின் இரு பக்கங்களிலும் இருக்கும் இரண்டு நுகர்ச்வுச்செல் குருத்துத் தொகுதிகளில் ஒன்றை மருத்துவர்கள் வெட்டி எடுத்து, அதைக்கொண்டு செயற்கை முறையில் சோதனைச்சாலையில் வைத்து ஒஇசிஎஸ் செல்களை மருத்துவ விஞ்ஞானிகள் வளர்த்தனர்.
இரண்டு வாரங்கள் கழித்து, இப்படி சோதனைச்சாவடியில் வைத்து வளர்த்த ஒஇசிஎஸ் செல்களை நுண்ணிய ஊசிமூலம் பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடப்பகுதிக்குள் மருத்துவர்கள் செலுத்தினார்கள். முதுகுத்தண்டுவடத்தில் காயம்பட்ட இடத்திற்கு கீழேயும் மேலேயும் இப்படி ஊசி மூலம் ஓஇசிஎஸ் செல்கள் செலுத்தப்பட்டன. சுமார் நூறு முறை மிக நுண்ணிய ஊசிகள் மூலம் இந்த செல்கள் அங்கே பதியப்பட்டன.
இதன் அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவரின் கணுக்காலில் இருந்து நான்கு தொகுதி நரம்புத்திசுக்கள் எடுக்கப்பட்டு அவை முதுகுத்தண்டுவடத்தின் நரம்புத்தொகுதி அறுபட்டஇடத்தில் பதியப்பட்டது.
பதியம் முறையில் புதுப்பிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடம்
இதன் விளைவாக முதுகுத்தண்டுவடத்தின் அறுபட்டிருந்த நரம்புத்தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உருவானதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அவர்களின் பார்வையில், சோதனைச்சாலையில் வளர்த்து முதுகுத்தண்டுவடத்தில் பதியப்பட்ட ஒஇசிஎஸ் செல்களும் கணுக்காலில் இருந்து எடுக்கப்பட்ட நரம்புத்தொகுதியும் இணைந்து செயற்பட்டதன் விளைவாக, கத்திக்குத்தில் அறுபட்டிருந்த முதுகுத்தண்டுவட நரம்பு மண்டலம் மீண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு மூளையிலிருந்து அனுப்பப்படும் உத்தரவுகள் முதுகுத்தண்டு வடம் முழுமைக்கும் சென்று, பாதிக்கப்பட்டவரின் உடலின் எல்லா பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படச் செய்திருக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.
தற்போது டெரிக் பிடிகாவால் கைத்தடி உதவியுடன் நடக்க முடிகிறது. தான் மீண்டும் நடக்க முடிந்திருக்கும் செயல் தனக்கு ஒரு மறுபிறவி எடுத்ததைப்போன்ற அனுபவம் என்கிறார் அவர்.
அவருக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவ நிபுணர் குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜியாப் ரெய்ஸ்மென் இந்த ஆய்வின் முடிவு தமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்கிறார். பாதிக்கப்பட்டவரால் மீண்டும் நடக்க முடிந்திருப்பது தன் பார்வையில் நிலவில் மனிதன் முதன்முதலில் காலடி தடம் பதித்ததைவிட சிறப்பான செயல் என்று கூறும் பேராசிரியர் ஜியாப், இது ஒரு மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தார்.
இந்த வெற்றி அளித்திருக்கும் உற்சாகத்தில் இதன் அடுத்தகட்டமாக ட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மேலும் பத்துபேருக்கு இதே மாதிரியான சிகிச்சையை அளிக்க துவங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் பலாபலன்கள், அவர்களுக்கு மட்டுமல்ல, உலக அளவில் முதுகுத்தண்டுவட பாதிப்பால் செயலிழிக்க நேரும் லட்சக்கணக்கானவர்களுக்கும் புதிய வாழ்க்கையை ஏற்படுத்தும் என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக