செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் சசிகலாவைப் பார்த்து ஜெயா முறைத்துள்ளார்.

ஜூவியில் இதழ் ஆசிரியர் ப.திருமாவேலன்  (19/10/14) எழுதியுள்ள சதிவலை எனும் கட்டுரையில் பல விடயங்களை பூடகமாக தெரிவிக்கிறார்.   இவா ஜெயாவுக்கு அடித்தாலும் நோகாமல் மயிலிறகால் அடிக்கும் பாரம்பரியம் கொண்டவர்கள்தான் , ஆனாலும் ஏதோ காரணத்தால் சற்று காரமான உண்மைகளை கூறியிள்ளார் . அவர் சொன்ன வார்த்தைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அர்த்தம் பொதிந்த, சொல்லாமல் சொன்ன சொற்கள் பச்சை எழுத்துக்களில் உள்ளன
1996 செப்டம்பரில் சசிகலாவை கட்சியை விட்டு விலக்கிய ஜெயா பத்தே மாதங்களில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். 2011 டிசம்பரில் சசியை கட்சியைவிட்டு நீக்கினார், நான்கே மாதங்களில் மீண்டும் கட்சியில் சேர்த்தார் – ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக இருக்கத்தெரியாதவர் ஜெயா.
இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவருக்கு அப்படி ஒரு சூழ்நிலையும் ஏற்படலாம் என்பதை அவரது வக்கீல் டீம் சொல்லவில்லை ஜெயாவுக்கு அவரது வழக்கின் தன்மையைக்கூட அவரது வக்கீல்களே சொல்லியாகவேண்டும். அப்படியானால் அவ்வழக்கு பற்றிய ஊடகங்களின் தகவல்களைக்கூட அவர் படிப்பதில்லை. ஆகவே அவர் செய்திகளையே படிக்காதவர். அதற்காக அடுத்தவர்களையே சார்ந்திருப்பவர்.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் சசிகலாவைப் பார்த்து ஜெயா முறைத்துள்ளார். எல்லா வக்கீல்களும் உங்கள் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டவர்கள்தானே என்று ஜெயலலிதா சொன்னதாகவும் தகவல் போயஸ் கார்டனின் முடிவுகள் யாவும் சசியின் ஆலோசனைப்படியே நடக்கின்றன. ஆக கடந்த 24 வருடங்களாகவே ஜெயா சுயமாக முடிவெடுப்பதில்லை. சசிகலா எனும் அதிகார மையத்தால் அவர் எத்தனை முறை பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து பாடம் கற்பதுமில்லை.  

இப்போது ராம் ஜெத்மாலானியையும், ஹரீஷ் சால்வேயையும் கொண்டுவருபவர்கள் அப்போதே ஏன் பெரிய வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?தனக்காக வாதாடும் வக்கீலைக்கூட தெரிவு செய்யும் திறனற்றவர் ஜெயலலிதா.
தேவையில்லாமல் 24க்கும் மேற்பட்ட மனுக்களை  தாக்கல் செய்து ஜாமீன் மனுவை சிக்கல் ஆக்கினார்கள். நீதிபதி குன்ஹாவை விமர்சித்து ஒர் மனுவை தாக்கல் செய்தார்கள். இத்தகைய அபத்தங்கள் ஜெயாவின் ஜாமீன் மனுவுக்கு சிக்கல்மேல் சிக்கலை உருவாக்கிவிட்டது இந்தியாவுக்கே வழிகாட்ட வல்லவர் என புகழப்படும் ஜெயா தன் வக்கீல்களைக்கூட வழிநடத்தத் தெரியாதவர். எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் அதனால் உருவாகும் எதிர்மறை விளைவுகளை கணிக்கத்தெரியாதவர். ஆகவே அவர் சமயோசிதமாக செயல்படத் தெரியாதவர், சுருக்கமாக சொல்வதானால் நிர்வாகத்திறனற்றவர்.
மேலோட்டமாக பார்க்கையில் சசிகலா குடும்பம் ஜெயாவை சிக்க வைக்க முயன்றதாக தோற்றமளிக்கும் இக்கட்டுரை ஜெயா மீதான தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது!!!! மோடி, அமித்ஷா போன்ற வானரப்படை தளபதிகளே ஜெயாவை விமர்சிக்க பயந்து பம்முகையில் அவர்களுக்கு சேவை செய்த அணிலுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இத்தனை உள்ளர்த்தங்களோடு எழுத்தப்பட்ட வீரம் செறிந்த கட்டுரை திருமா அவர்களுடையதாகத்தான் இருக்கும். ஆகவே பாஜகவினர் அடக்கிவாசிப்பதைப் பார்த்து அவர்களை கோழை என்றோ அல்லது பாஜக ஆதரவு அறிவுஜீவிகளின் ஊழல் எதிர்ப்பு பல்டியைப் பார்த்து அவர்களை பச்சோந்தி என்றோ கருதி காவி ஆதரவாளர்கள் கவலைப்படவேண்டாம். இருக்கிற இடத்தில் இருந்தபடியே எதிர்கட்சியை விமர்சிக்கும் ஆட்களும் பாஜக கூடாரத்தில் உண்டு.
வழித்தேங்காயை பிள்ளையாருக்கு உடைக்கலாமா? கூடாது என்றால் நேர்த்திக் கடனுக்கு வழியில்லை. உடைத்தால் பக்தி சந்தேகத்திற்குரியது. இதெல்லாம் தெருவோர பைரவர்களுக்கு கவலையில்லை. தேரில் உலாவரும் தேறிய வைரவர்களுக்குத்தான் பிரச்சினை! ஜெயா மீதான தண்டனையும் கூட ஆளும் வர்க்க அணிவரிசையில் இப்படி பல்வேறு தத்துவஞான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் அம்மா இந்த தண்டனை மூலமாக நவரசங்களையும் கொண்ட மாபெரும் வேடிக்கையை மலிவான மற்றும் மகத்தான அடிமைகள் மூலம் நிகழ்த்தச் செய்திருக்கிறார். கண்ணிருப்போர் ரசிக்கலாம், சிவக்கலாம்!
-    வில்லவன் வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக