செவ்வாய், 14 அக்டோபர், 2014

மவுலிவாக்கம் கட்டிடவிபத்து ,அவசர அவசரமாக குற்றபத்திரிகை தாக்கல் செய்தது ஏன் ? உயர்நீதிமன்றம் கேள்வி !

மெளலிவாக்கம் கட்டட விபத்தில் அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது ஏன் என்று, தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், கட்டடங்களுக்கு பொதுவான அடித்தளம் அமைக்க சிறப்பு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி சென்னை மெளலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் சடலமாகவும், 27 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டனர். சட்ட விரோதமாக திட்ட விதிகள் தளர்த்தப்பட்டதால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீக்கிரமா ஊத்தி மூடிடுவாய்ங்க ? இந்த மாதிரி சம்பவங்களுக்கு எல்லாம் பெங்களூரு மைக்கல் குன்ஹாவை கூப்பிட முடியுமா என்ன ? அட சகாயத்தாலேயே முடியல்ல ? ட்ராபிக் ராமசாமியை கூப்பிட்டு பாருங்க ? ?

கட்டடம் கட்டப்பட்ட பகுதி போரூர் ஏரியிலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ளது. 6 மாடிக் கட்டடம் கட்டுவதற்கு மட்டுமே அங்கு திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில், 6 மாடி கட்டுவதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டதா அல்லது 11 மாடிக்கு அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி நகர்ப்புறம், ஊரக மேம்பாட்டுத் துறையின் செயலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார்.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, அரசுத் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.
இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
கட்டட விபத்து தொடர்பாக தனி நபர் குழு அறிக்கையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா, இல்லையா என்பது தெரியாமலேயே, விசாரணை முழுமையாக முடிவு பெறாத நிலையில், அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எங்களை வருத்தம் கொள்ள வைக்கிறது.
கட்டடத்தின் அடித்தளம் கட்டுமான நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் கட்டட வடிவமைப்பாளர் குற்றவாளியாகியுள்ளார் என நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டடத்தை தாங்குவதற்கான தூண்களும் சம்பந்தப்பட்ட கட்டட வடிவமைப்பாளர்தான் வடிவமைத்ததாகவும், அடித்தளத்தில் கார் நிறுத்துவதற்கு அதிக இட வசதி ஏற்படுத்துவதற்காக பல தூண்களைக் கட்டுமானம் செய்தோர் நீக்கியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டட வடிவமைப்பில் குறைபாடு இருந்திருந்தால், அதற்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகளையும் குற்றப்பத்திரிகையில் ஏன் சேர்த்திருக்கக் கூடாது?  மேலும், இரண்டு அடுக்கு மாடி கட்டடத்துக்கும் ஒரே அடித்தளம் அமைப்பதற்கு சென்னைப் பெருநகர விதிகளில் தளர்வு செய்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எந்தச் சூழ்நிலையில் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது என்பதை அறிவதற்கு அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் மனுவை அரசு தலைமை வழக்குரைஞர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக ஓர் அர்த்தமுள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் அறிக்கை குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இதற்கு அரசுத் தரப்பினர் ஆறு வாரம் அவகாசம் கோரியுள்ளனர். எனவே, கால அவகாசம் அளித்து டிசம்பர் 4-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக