வெள்ளி, 10 அக்டோபர், 2014

அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கும் கைலாஷ் சத்தியார்த்திக்கும் கிடைக்கிறது !

ஆஸ்லோ: அமைதிக்கான நடப்பாண்டின் நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நோபல் கமிட்டியின் தலைவர் தோர்ப்ஜோயெர்ன் இன்று அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மொத்தம் 278 பேர் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்டது. இறுதியாக இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கைலாஷ் சத்யார்த்தி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது பச்பான் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் சுமார் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு முதல் பல்வேறு மனித உரிமை விருதுகளைப் பெற்றுள்ள சத்யார்த்திக்கு நடப்பாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சிறுமி மலாலா இதேபோல் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி மலாலா. அப்பகுதியில் பெண்கள் கல்வி கற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்திருந்தனர். தலிபான்கள் ஒடுக்குமுறை குறித்து பிபிசியின் உருது மொழி இணையதளம் ஊடக பரப்புரை மேற்கொண்டு வந்தார். பின்னர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் மலாலா. இதனால் தலிபான் தீவிரவாதிகள் 2012ஆம் ஆண்டு மலாலாவை கொல்ல முயன்றனர். தலிபான்களில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார் மலாலா. அதன் பின்னர் தொடர்ந்தும் பெண்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மலாலாவின் பிறந்த நாளை ஐ.நா. "மலாலா தினம்" என்று கடைபிடிக்க கேட்டுக் கொண்டது. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது அமைதி, உலக அமைதி அறக்கட்டளையின் "தைரியத்துக்கான விருது" ஆகியவற்றை பெற்ற சிறுமி மலாலாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை மலாலாவுக்கு கிடைத்துள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக