சனி, 25 அக்டோபர், 2014

AVM ஸ்ரீவள்ளி முழுக்க முழுக்க பாட்டுக்காகவே 52 வாரங்கள் ஓடியது !

சினிமாவை செழிக்கச் செய்வதற்கு சென்னைக்கு சோழ நாட்டிலிருந்து ‘கலை’ வந்தது! பாண்டிய நாட்டிலிருந்து ‘நாடகம்’ வந்தது! செட்டி நாட்டிலிருந்து செல்வம் வந்தது!
பணத்தைக்கொண்டு ஒரு பொருளை வாங்கி அல்லது உற்பத்தி செய்து அதை அடக்க விலையைவிட அதிக விலைக்கு விற்று லாபம் கண்டு பணம் சம்பாதிப்பது என்பது ஒன்று. பணத்தையே மூலதனமாக வைத்து ‘லேவாதேவி’ என்ற பெயரில் கடன் கொடுத்து வட்டி வாங்கி அதன் மூலம் பொருள் ஈட்டுவது என்பது வேறொன்று.
‘நகரத்தார்’ என்று அழைக்கப்பெறும் செட்டிமார்களால் அக்காலத்தில் சினிமா தொழில் செழித்துத் தழைத்தது என்றால் அது சற்றும் மிகை அல்ல.
அசல் ஒண்ணாம் நம்பர் ‘அக்மார்க்’, ‘ஐ.எஸ்.ஐ’ முத்திரையுடன் கூடிய நகரத்தார் குலத்தைச் சேர்ந்த ஆவிச்சி செட்டியார், செட்டி நாட்டின் கேந்திர ஸ்தானமான காரைக்குடியில் தன் பெயரில் ஒரு ‘ஜெனரல் ஸ்டோர்’ வைத்து வியாபாரம் செய்து வந்தார். அந்த ஸ்டோரில் பெரும்பாலும் பள்ளிச் சிறுவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், சிலேட்டு – பல்பங்கள் முதலியவற்றுடன்கூட பேனாக்களுக்கு ‘இங்க்’ என்னும் மையும் நிரப்பிக்கொடுத்து வந்தார். ‘பெப்பர்மின்ட்’ என்னும் மிட்டாயும் உண்டு.


இந்த ஆவிச்சி செட்டியாருக்கு 28.7.1907–ல் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று ஒரு ஆண் குழந்தை பிறந்து அதற்கு  ‘மெய்யப்பன்’ என்று பெயர் சூட்டினார் பெரிய செட்டியார்.
மெய்யப்பன் 14 வயதில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் வயோதிகத்தின் காரணமாக கடையைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு கடையில் அவரை உட்கார வைத்துவிட்டார் பெரிய செட்டியார்.

‘ஆவிச்சி அண்ட் ஸன்’ என்னும் பெயர் கொண்ட ஜெனரல் ஸ்டோரில் தன் தகப்பனாரின் இருக்கையில் அமர்ந்த மெய்யப்பனுக்கு அந்த வியாபாரத்தில் அவ்வளவு ஈடுபாடு ஏற்படவில்லை. இயற்கையிலேயே அந்த இளம் வயதிலேயே அவருக்கு ‘பைன் ஆர்ட்ஸ்’ என்னும் இசை மற்றும் கலைகளில் நாட்டம் மிகுந்து இருந்தது. இதன் காரணமாக, தன் 25–வது வயதிலேயே 9.9.1932–ல் ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற பேனரில் ‘கிராம் போன் பிளேட்’ என்னும் இசைத்தட்டுகள் தயாரிக்கும் பிரபல ‘கொலம்பியா’ மற்றும் ஓடியன் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இசைத்தட்டுகள் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் நல்ல லாபம் பெற்றார்.


அந்த உந்துதல் உணர்வில், ‘நாம் ஏன் சொந்தமாக சினிமா படம் எடுக்கக்கூடாது?’ என்ற எண்ணம் தோன்றி அதன் விளைவாக முதல் தமிழ் பேசும் படம் ‘காளிதாஸ்’ வந்த மூன்று நான்காவது ஆண்டில் 1934– 1935–ல் ‘சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்’ என்ற பேனரில் ‘அல்லி அர்ஜுனா’ புராணப்படத்தை முதன் முதலாகத் தயாரித்தார். அது தோல்வி கண்டது.

அந்தத் தோல்வியினால் துவண்டு போகாத ஏவி.எம். செட்டியார், அடுத்ததாக 1936–ல் ‘சரஸ்வதி டாக்கீஸ்’ என்னும் பேனரில்  ‘மனோகரா’ நாடகப் புகழ் பெற்ற பம்மல் சம்பந்த முதலியார் கதையும், பாபநாசன் சிவன் பாடலும் எழுதி ‘ரத்னாவளி’ படத்தைத் தயாரித்தார். இதில் பிரபல பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் சகோதரிகள் இருவரும் நடித்தும் படம் படுதோல்வி கண்டது.

இதற்குப்பிறகும் சற்றும் சோர்ந்து போய்விடாத செட்டியார் 1938–ல் தன்னுடன் சில பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு ‘பிரகதி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு புது நிறுவனம் தொடங்கி ‘நந்தகுமார்’ என்னும் புராணப் படத்தைத் தயாரித்தார். இதில் அப்போது சிறுவயதாக இருந்த டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

தொடர்ந்து தோல்விகளையே சந்தித்த செட்டியார் விரக்தியுற்று வெறுத்துப்போகவும் இல்லை, இந்தப் படத்தயாரிப்புத் தொழிலை விட்டு விடுவதாகவும் இல்லை.

அந்த நாளில் சென்னை மயிலாப்பூர் மந்தைவெளிப் பகுதியில் புழக்கம் இல்லாத நிலையிலிருந்த ‘விஜயநகர பேலஸ்’ என்னும் ஆந்திராவைச் சேர்ந்த சிற்றரசர் ஒருவரின் மாளிகையைக் குத்தகைக்கு எடுத்து ‘பிரகதி ஸ்டூடியோ’ என்று பெயரிட்டு, ‘பம்மல்’ சம்பந்த முதலியார் எழுதிய ‘சபாபதி’ மற்றும் ‘என் மனைவி’, ‘திருவள்ளுவர்’ போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

எந்த ஒரு படமும் போதிய அளவிற்கு வெற்றி பெறாமல் மந்த நிலையே அவருடைய வாழ்க்கையில் நீடித்து வந்த சமயத்தில் 1945–ம் வருடம் மதுரையில் தன் துணைவியார் ராஜேசுவரி அம்மையாரின் இல்லத்தில் ஒருநாள் மாலையில் பால்கனியில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தார் செட்டியார். தற்செயலாக கீழே பார்த்தபொழுது ஓர் இளைஞர் வீதியில் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்துக் கைத்தட்டி ‘‘அம்பி’’ என்று கூப்பிட்டார். அந்த இளைஞர் அண்ணாந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் ‘‘ஐயா’’ என்று அழைத்தவாறு உள்ளே வந்து அவர் எதிரில் நின்றார், பணிவாக.

செட்டியார்:– சவுக்கியமா இருக்கியா?

இளைஞர்:– உங்க ஆசீர்வாதத்துல சவுக்கியமா இருக்கேன்.

செட்டியார்:– இப்போ என்ன செஞ்சிக்கிட்டிருக்கே?

இளைஞர்:– ஊர் ஊரா போய் ஸ்பெஷல் நாடகங்கள்ள நடிச்சிக்கிட்டிருக்கேன்.

செட்டியார்:– சரி, உன்னுடைய ஜாதகம் வச்சிருக்கியா?

இளைஞர்:– வீட்டுலே இருக்குய்யா.

செட்டியார்:– அதை எடுத்துக்கிட்டு நாளைக்கு இங்கே வந்து என்னைப்பாரு.

இளைஞர்:– சரிங்கய்யா, அப்படியே செய்றேன் என்று கூறி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.


எதிர்பாராத இந்தத் திடீர்ச் சந்திப்பு அந்த இளைஞருடைய வாழ்க்கையில் மட்டும் அல்ல – ஏவி.எம். செட்டியாரின் எதிர்காலத்திற்கும் ஒரு பெரும் ‘திருப்பு முனை’யாக அமைந்து அவ்விருவரையும் புரட்டிப்போட்டுவிட்டது.

அதிர்ஷ்டம் என்னும் புகழும், பொருளும், மகிழ்ச்சியும் வரும் நற்காலம் எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த வடிவத்தில், எவர் மூலமாக கிடைக்கும் என்பது அவரவருடைய ‘தலைவிதி’ ஒன்றுக்கு மட்டும்தான் தெரியும்.

மறுநாள் அந்த இளைஞர் தன் ஜாதகத்தைக் கொண்டுவந்து செட்டியாரிடம் கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்ட அவர், அதற்கு அடுத்த நாள் வரச்சொல்லி அனுப்பிவிட்டு, அந்த ஜாதகத்தை தன் துணைவியார் மூலமாக ஒரு ஜோதிடரிடம் காட்டி பலன் கேட்டார். அதைப் பார்த்த சோதிடர் சொன்னார்:–

ஜோதிடர்:– ‘‘இது ரொம்ப யோக ஜாதகம்! இந்தப்பையனுடைய வாழ்க்கையின் உச்சக்கட்டக்காலம் இவனை நெருங்கி வந்துவிட்டது. கொஞ்ச நாட்களுக்குள் புகழும் பொருளும் இவனிடம் வந்து குவியப்போகிறது!’’

இதைக்கேட்ட செட்டியார் ஒரு முடிவிற்கு வந்து விட்டார். அடுத்த நாள் தன்னிடம் வந்த அந்த இளைஞரிடம், ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஒரு ‘செட்’ கிராம் போன் ரிக்கார்டு இசைத்தட்டுகளைக் கொடுத்து:–

செட்டியார்:– அம்பி! இதெல்லாம் எஸ்.ஜி.கிட்டப்பா ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் பாடிய ஒரிஜினல் ரிக்கார்டு. இதையெல்லாம் நீ பல தடவைப் போட்டுக்கேட்டு கேட்டு அவர் பாடியிருக்கிறது மாதிரி அப்படியே பாடிப் பழகணும்.

இளைஞர்:– சரிங்கய்யா, அப்படியே செய்றேன்.

செட்டியார்:– எதுக்கு இதைச் சொல்றேன்னா, உனக்கு கிட்டப்பாவோட குரல் அமைஞ்சிருக்குறதுனால, அவருடைய இந்தப்பாட்டுங்களை எல்லாம் ஒன்னைப்பாட வச்சி ‘வள்ளித் திருமணம்’ கதையை ‘ஸ்ரீவள்ளி’ என்கிற பேரில் படமாகத் தயாரிக்கத் திட்டம் போட்டிருக்கிறேன்.

படத்தில் வேலன், வேடன், விருத்தன் ஆகிய மூணு வேஷங்களில் ஹீரோ முருகனா உன்னைத்தான் நடிக்க வைக்கப்                   போறேன். அதுக்கேத்தபடி உன்னை நீ தயார் பண்ணிக்கணும். தெரிஞ்சிதா?

இதைக்கேட்ட மாத்திரத்தில் அந்த இளைஞர் அப்படியே ‘தடால்’ என்று செட்டியாரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கண்ணீர் மல்கி, அவர் கையிலிருந்து செலவிற்கு பணமும் பெற்றுக்கொண்டு ‘சிட்டாக’ப் பறந்துவிட்டார்.

அந்த இளைஞர்தான், பின்நாட்களில் தனது இனிய சாரீர வளத்தைக்கொண்டு பல படங்களில் அற்புதமாகப்பாடி சங்கீத ரசிகர்களை மகிழ்வித்து எம்.கே.தியாகராஜ பாகவதர் சிறைவாசம் செய்து கொண்டிருந்த அந்தக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கிய மதுரை சோழவந்தான் ‘தென்கரை’ ஊரைச் சேர்ந்த டி.ஆர்.மகாலிங்கம்.

மகாலிங்கத்தின் குரல் வளத்தோடுகூட அவரது ஜாதக ரீதியிலான அதிர்ஷ்ட காலத்தையும் நன்கு அறிந்து கொண்ட செட்டியார் – இன்றைய குணச்சித்திர நடிகையான அன்புச் சகோதரி லட்சுமியின் தாயாரும், சிவாஜி நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில்  வ.உ.சி.யின் துணைவியாராகவும், நான் கதை வசனம் எழுதிய எல்.வி.பிரசாத்தின் ‘இதய கமலம்’ படத்தில் ரவிச்சந்திரனின் தாயாகவும் இன்னும் பல படங்களில் நடித்தவருமான ருக்மினியை (அக்காலத்தில் குமாரி ருக்மினி) வள்ளியாக நடிக்க வைத்தார். நாகர்கோவில் கே.வி.மகாதேவனை நாரதராகவும், மற்றும் கலைவாணர் என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம், டி.ஆர்.ராமசந்திரன் முதலியோரும் நடித்தனர். பாபநாசம் சிவனின் சகோதரர் ராஜகோபாலய்யர் (இவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி அம்மையாரின் தந்தை) பாடல்கள் எழுதி, செட்டியாரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம் இசை அமைத்தார். ‘சரஸ்வதி சினிமா பிலிம் லேப்’ பேனரில் மெய்யப்பன் செட்டியாரே டைரக்ட் செய்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவின் பல பாடல்களை டி.ஆர்.மகாலிங்கத்தைப் பாடச்செய்து 13.4.1945 தமிழ்ப்புத்தாண்டு நாளில் தமிழகம் எங்கும் படத்தை வெளியிட்டார்.

படம் வெளியிடுவதற்கு முன்பாக செலவைப் பற்றிக் கவலைப்படாமல் செட்டியார் ஒரு காரியம் செய்தார். படத்தில் கதாநாயகி குமாரி ருக்மினியே தன் சொந்தக் குரலில் பாடி இருந்தார். அவை டி.ஆர்.மகாலிங்கத்தின் எடுப்பான கம்பீரக்   குரலோடு இணைந்து சரியாகப் பொருந்தவில்லை என்று பலரும் குறைபட்டுக் கொண்டனர். இதனால் அன்றைய நாட்களில் பிரபலமாகி இருந்த பி.ஏ.பெரியநாயகியைக் கொண்டு எல்லாப் பாடல்களையும் பாடச் செய்வதற்காக கதாநாயகி ருக்மினியைக் கேட்டு முதலில் அவர் அதற்கு மறுத்து பிறகு உடன்பட்டு, அப்படியானால் தனது 3 படங்களுக்கான ஒப்பந்தத்தில் இரண்டை ரத்து செய்து தன்னை விடுவித்து விடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

செட்டியார் படத்தின் கூடுதல் சிறப்பைக் கருதி அதற்கு ஒப்புக்கொண்டு அதன் பிறகு அனைத்துப்பாடல்களையும் பெரிய நாயகியைப் பாடவைத்து மறுஒலிப்பதிவு செய்து படத்தில் பொருத்தினார்.

செட்டியாரின் இந்தச்செயல், தன் படத்தின் மீதும், மக்களின் ரசனையின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையையும், ஆர்வத்தையும் பிரதிபலித்துக் காட்டியது எனலாம்.

1935–ல் அவர் எடுத்த முதல் படத்திலிருந்து 1945 வரை கடந்த 10 ஆண்டுகளில் அவர் பார்க்காத ஆனால் எதிர்பார்த்த அளவிற்கும் மேலே அவ்வளவு மாபெரும் வெற்றியை ‘ஸ்ரீவள்ளி’ பெற்றுத்தந்து 52 வாரங்கள் – ஒரு வருடம் வரையில் தொடர்ந்து ஓடி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது!

முழுக்க முழுக்க பாட்டுக்காகவே ஒரு படம் ஓடியது என்றால் அது ‘ஸ்ரீவள்ளி’தான்.

டி.ஆர்.மகாலிங்கம் கிட்டப்பாவின் பாடல்களை அற்புதமாகப்பாடி ரசிகர்களை மெய்மறக்கச் செய்தார்.

ஸ்ரீவள்ளியின் மகத்தான வெற்றியைக் கண்டுகளித்த ஏவி.எம். செட்டியார் ஓய்வெடுத்துக்கொள்ளும் பொருட்டு குடும்பத்துடன் முதன் முதலாக காஷ்மீர் சென்றிருந்த சமயம் பார்த்து, பிரகதி ஸ்டூடியோவின் ஏனைய பங்குதாரர்கள் அவருக்குத் தெரியாமல் ஸ்டூடியோவை விற்றுவிட முடிவு செய்து 10 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி 1 லட்சம் ரூபாய் முன் பணம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தப் பத்திரமும் எழுதிக்கொண்டனர்.

ஊரிலிருந்து வந்த செட்டியார் இதனை அறிந்து வருத்தமுற்று, ‘‘ஸ்டூடியோவை நானே வாங்கிக்கொண்டிருப்பேனே – எனக்குத் தெரியாமல் என்னை ஒரு வார்த்தை கேட்காமல் இப்படிச் செய்துவிட்டீர்களே. இனி உங்களுக்கும், எனக்கும் சரிப்பட்டு வராது. நான் விலகிக் கொள்கிறேன்’’ என்று கூறி தனியே வந்து 1945–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14–ந்தேதியன்று மயிலாப்பூர் சாந்தோம் பகுதி தெற்குத் தெரு கதவிலக்கம் 60 கொண்ட ஒரு கட்டிடத்தில் முதன் முதலாகத் தன் பெயர் கொண்ட ‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.

பிற்காலத்தில் இந்த ‘பேனர்’ நிறுவனம் ஆல்போல் தழைத்துச் செழித்து அனைத்திந்தியப் புகழ் பெற்று ஆழ வேர்விட்டு விழுதுகள் விடப்போகின்றது என்பதை அன்றைய நாளில் செட்டியார் அறிந்தார் இல்லை.

‘‘சிறுகக் கட்டி பெருக வாழ்’’ என்னும் மூதுரையை முன்காலத்தில் நமது முன்னோர்கள் பெரிதும் கடைப்பிடித்தனர்.

புதிய ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் பேனரில் முதன் முதலாக செட்டியார், பம்மல் சம்பந்த முதலியாரின் ‘வேதாள உலகம்’ கதையைப் படமாக்கத் தொடங்கி சில ஆயிரம் அடிகள் வளர்ந்த நிலையில், அதன் படப்பிடிப்பு நடைபெற்ற சென்னை கீழ்ப்பாக்கம் பிரபல நியூடோன் ஸ்டூடியோ தனக்குச் சரிப்பட்டு வராததால் நாமே சொந்தத்தில் ஒரு ஸ்டூடியோ கட்டலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது, கோடம்பாக்கம் சாலிகிராமத்தில் தோல் வியாபாரம் செய்து வந்த ஒரு முஸ்லிம் நபருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் (மாந்தோப்பு) விற்பனைக்கு வருவதாக அறிந்து, முதலில் 50 ஆயிரம் ரூபாய் சொல்லப்பட்ட அதை பேரம் பேசி ரூ.35,500–க்கு வாங்கிப் பத்திரப்பதிவு செய்து கொண்டார். அந்த இடம் சென்னை நகர மேற்கு எல்லையைக் கடந்து செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருந்ததால் மின்சார வசதி  கிடைக்கவில்லை.


ஆகவே அதில் ஸ்டூடியோ கட்டும் திட்டத்தை தற்சமயத்திற்குக் கைவிட்டு, காரைக்குடிக்குச் சென்று தேவகோட்டை ரஸ்தாவில் சோமநாதன் செட்டியார் என்பவருக்குச் சொந்தமான கீற்றோலை வேய்ந்த ஒரு நாடகக்கொட்டகையையும், அதைச்சார்ந்த இடத்தையும் வாடகைக்கு எடுத்து அதில் மேற்கொண்டு பல தென்னை ஓலைக்கொட்டகைகளைக் கட்டி முடித்து, டி.ஆர்.மகாலிங்கம் நடித்து வந்த ‘வேதாள உலகம்’ படப்பிடிப்பைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் ப.நீலகண்டன் எழுதி, என்.எஸ்.கே. நாடகசபா நடத்திய ‘நாம் இருவர்’ நாடகம் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் வெற்றிகரமாக நடைபெற்று வருவதைக் கேள்விப்பட்டு அதன் கதை – உரிமையை 3 ஆயிரம் ரூபாய் விலை பேசி முடித்து, கதாசிரியர் நீலகண்டனையும் தனக்கு உதவி டைரக்டராக அமர்த்திக்கொண்டு, ‘வேதாள உலகம்’ படப்பிடிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, இது சாதாரண சமூகப்படம் என்பதால், குறைந்த செலவில் சிக்கனமாக சீக்கிரம் முடித்து வெளியிட்டு விடலாம் என்று திட்டம் வகுத்து, அதே மகாலிங்கம், டி.ஏ.ஜெயலட்சுமி மற்றும் பி.ஆர்.பந்துலு (பிற்காலத்தில் சிவாஜியை வைத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கர்ணன்’ முதலிய படங்களைத் தயாரித்து இயக்கிப் புகழ் பெற்றவர்) ஆகியோரைக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார்.

12.1.1947–ல் பொங்கலுக்கு 2 நாள் முன்னதாக முதலில் மதுரையில் மட்டுமே ரிலீசான ‘நாம் இருவர்’ மகத்தான வெற்றி பெற்றதை  அறிந்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன் செட்டியாருக்குக் கடிதம் எழுதி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அந்தப்படத்தைப் பார்க்கவும் விரும்பினார்.

‘ஏவி.எம். செட்டியார் காரைக்குடியில் தென்னை ஓலைக்    குடிசைகளில் சினிமா எடுக்கிறார்’ என்று இங்கு சென்னை சினிமா வட்டாரத்தில் கிண்டலும், கேலியும் செய்தவர்கள் ‘நாம் இருவர்’ படத்தின் மாபெரும் வெற்றியைக்கண்டு மலைத்துத் திகைத்து மவுனமானார்கள்!

ஒருவருடைய வாழ்க்கையில் நல்லதும், கெட்டதும் – நன்மையும், தீமையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து ஒரே சமயத்தில் சேர்ந்து வருவது இல்லை. இரண்டுமே தனித்தனியாக வந்து குறிப்பிட்ட காலத்தில் முடிவு பெறும். இது அவரவர் ‘விதி’ மற்றும் ஜாதக அமைப்பைப் பொறுத்தது.

இந்த நியதியின் பிரகாரம் ஏவி.எம். செட்டியாரின் வாழ்க்கையில் தொடங்கிய வசந்த காலமும் வெற்றியும் தொடர்ந்தது! கோடம்பாக்கம் வாகினி ஸ்டூடியோ எல்லையைத் தாண்டி மேற்கே சாலிகிராமத்தில் செட்டியார் வாங்கிப்போட்டிருந்த வெற்றிடத்தில் சினிமா ஸ்டூடியோ கட்டுவதற்கான மின்சார வசதி இப்போது கிடைத்தது. அதில் அவர் காரைக்குடியில் இருந்து தேவையான தொழிலாளர்களை வரவழைத்து அங்கேயே தங்கவைத்து, அவர்களை மேற்பார்வையிடுவதற்கு ஏவி.எம்.மில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய வாசுமேனனை நியமித்தார்.

இந்த வாசுமேனன், பிற்காலத்தில் தயாரிப்பாளராகி ‘வாசு பிலிம்ஸ்’ பேனரில் பல தமிழ் – இந்திப்படங்களைத் தயாரித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு இடையில் நிறுத்தி வைத்திருந்த ‘வேதாள உலகம்’ படத்தை மீண்டும் அவரே இயக்கி முடித்து 11.8.1948–ல் வெளியிட்டு அதுவும் வெற்றி பெற்றது.

புது ஏவி.எம். ஸ்டூடியோ கட்டி முடித்ததும் அதில் முதன் முதலாக அவர் படப்பிடிப்பு நடத்திய படம் ‘வாழ்க்கை.’ அவரே இயக்கிய அந்தப் படத்தில்தான் ‘சர்ச் பார்க் பிரஸன்டேஷன் கான்வென்டில்’ படித்துக் கொண்டிருந்த 16 வயது பருவக் குமரியான வைஜெயந்திமாலாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அந்த அறிமுக முகூர்த்தம் வைஜெயந்திமாலா ‘வாழ்க்கை’யின் இந்தி மொழி ‘பஹார்’ படத்தில் நடித்து அங்கேயும் அறிமுகமாகி, பிற்காலத்தில் ‘‘வடஇந்திய சினிமாவில் வெற்றி பெற்ற முதல் தமிழ் நட்சத்திரம்’’ என்ற புகழும் அந்தஸ்தும் பெற்று, பல ஆண்டுகள் கொடி கட்டிப்பறந்தார்.

‘வாழ்க்கை’ மகத்தான வெற்றி பெற்று இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு முதன் முதலாக ‘மும்மொழிப்படம்’ என்னும் சிறப்பைப் பெற்றது. ஸ்ரீவள்ளியில் டி.ஆர்.மகாலிங்கம், வாழ்க்கையில் வைஜெயந்திமாலா ஆகிய இருவரின் அறிமுகப் புகழைத் தொடர்ந்து 1952–ல் சிவாஜிகணேசன் தன் அறிமுக வெற்றியை ஏவி.எம்.ஸ்டூடியோவில்தான் ‘பராசக்தி’ படத்தின் மூலமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசனைப் போலவே படத்      தயாரிப்பு விஷயத்தில் ஏவி.எம். அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டார். படம் எடுப்பது மக்களை மகிழ்விப்பதற்கே தவிர பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் அல்ல என்னும் கொள்கையில் வாசன், ஏவி.எம். இருவருமே ஒரு தராசின் இரு தட்டுகளாக விளங்கினர்.

முருகன், குமரன், சரவணன், பாலசுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த தனது நான்கு புதல்வர்களையும் வைத்துக்கொண்டு அவர் கூறுவார்:–

‘‘ஏ.வி.எம்! இந்த மூன்று எழுத்துக்களின் எழுச்சிக்காக நான் எவ்வளவோ பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதை நீங்கள் உங்கள் கண்கள் போலக் கருதிப் பேணிப் பாதுகாத்து என்றும் நிலைத்திருக்கச் செய்யவேண்டும்.’’

அவர் விரும்பிய வண்ணமே ‘ஏவி.எம்’ 70 ஆண்டுகளாக வளர்ந்து தழைத்துச் செழித்து மேலும் நூற்றாண்டு விழா காணும் என்பது உறுதி.

கடைசி நாட்களில் அவர் மஞ்சள்காமாலை நோய் கண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 12.8.1979 அன்று இரவு தந்தையின் அருகில் இருந்து கவனித்து விட்டு இல்லம் திரும்ப இருந்த தன் மூன்றாவது மகன் சரவணனிடம் அவர் கூறியது:–

‘‘சரவணா! பாத்ரூம் லைட்டை ‘சுவிட்ச் ஆப்’ செய்ய மறந்திட்டேன். அந்த ‘லைட்’ அநாவசியமா எரிஞ்சிக்கிட்டிருக்கு. அதை நிறுத்திட்டு போ.’’

அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை. அன்று நள்ளிரவு எதிர்பாராத திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, 72 ஆண்டுகளாகக் குடியிருந்த அவரது உயிர்க்குருவி, தன் கூட்டை விட்டு பறந்தோடிவிட்டது. அத்துடன் வாழ்க்கையில் வென்று காட்டிய ஒரு மகத்தான சாதனையாளரின் நேத்திரங்கள் நிரந்தரமாக மூடிக்கொண்டுவிட்டன!

(‘சென்னை சினிமா மும்மூர்த்திகள்!’

பி.நாகிரெட்டியார் – அடுத்த வாரம்)

***

பாரதியார் கவிதை

காத்மா காந்தி மீதும், காங்கிரஸ் மீதும் பற்றுக்கொண்ட ஏவி.எம். ‘மகாகவி’ பாரதியாரின் மொத்தக் கவிதைப் படைப்புகளின் உரிமையை 10 ஆயிரம் ரூபாய்க்கு பெற்று அதன் தேசபக்திப் பாடல்களான ‘ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே’, ‘வெற்றி எட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே’, ‘விடுதலை விடுதலை’, ‘காந்தி மகான்’ முதலிய பாடல்களை அன்றைய பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியான டி.கே.பட்டம்மாளின் கணீர்க்குரலில் பதிவு செய்து நாம் இருவர் படத்தில் இடம் பெறச்செய்து புரட்சி செய்தார்.

செட்டியாரின் ‘சினிமா ஜோதிடம்’ பொய்த்துப்போனதில்லை. பெரும்பாலும் பலித்தே இருக்கிறது. ‘நாம் இருவர்’ படத்தில் அவர் ஒரு கலை மற்றும் வணிக நுட்பத்தைக் கையாண்டார். அதாவது  1947 ஆகஸ்டு 15–ல் இந்தியா சுதந்திர நாடாகப்போகிறது என்பது முன் கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் மதியூகமாக மகாகவி பாரதியாரின் தேசியப் பாடல்களை இணைத்ததுடன் அல்லாமல் சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திப் பாடுபட்ட அண்ணல்  காந்தி அடிகள், பண்டிதர் நேரு, ராஜதந்திரி ராஜாஜி, கர்மவீரர் காமராஜர் முதலியோரின் உருவப்படங்களை ‘நாம் இருவர்’ படத்தில் காண்பித்து மக்களை மகிழ்வித்து பலத்த கைத்தட்டலும், பாராட்டும் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்நாட்களில் நாடு விடுதலை பெற்று, முதல் தமிழக முதலமைச்சரான ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் பாரதியார் பாடலுக்கான தொகை கொடுப்பதாகக் கூறியும் செட்டியார் தன் உரிமையை இலவசமாகக் கொடுத்து அவை நாட்டுடமையாக மாறின!

அதென்னமோ, ஆரம்பத்திலிருந்தே இசையின் மீது அவருக்கு ஒரு அலாதி ஈடுபாடு ஏற்பட்டு அதில் போதிய கவனம் செலுத்தித் தனது படங்களில் சேர்த்து, ‘ஏவி.எம். படம் என்றால் இனிய இசை இருக்கும்’ என்ற ஒரு எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்களிடம் ஏற்படுத்தி வைத்திருந்தார்.

***

‘அந்த  நாள்’  படத்தில்  சிவாஜி  நடித்ததன்  பின்னணி

வாசன் ‘ஞானசவுந்தரி’ படத்தை எரித்தது போன்றதொரு சம்பவம் ஏவி.எம்.மிலும் நிகழ இருந்தது. 1954–ல் கொல்கத்தாவில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் இரண்டும் இல்லாமல் முதன் முதலாக ஏவி.எம்.மில் எஸ்.பாலசந்தர் ஒரு படத்தை இயக்கினார். பாதி வரையில் வளர்ந்த நிலையில் அதைப்பார்த்த செட்டியார் திருப்தி இல்லாமல் சிவாஜிகணேசனை வைத்து மீண்டும் ‘ரீ ஷூட்’ பண்ண வேண்டும் என்று விரும்பினார்.

டைரக்டர் மறுத்தார். உடனே செட்டியார், தயாரிப்பு நிர்வாகியான வாசுமேனனிடம் பாலச்சந்தருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிச் சம்பளப்பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டு அதுவரையில் எடுத்திருந்த மொத்த ரீல்களையும் கொண்டு வந்து தனக்கு எதிரே வைத்துக் கொளுத்திவிடும்படிக் கூறினார்.

இதைக் கேட்ட எஸ். பாலசந்தர் வெலவெலத்துப்போய், ‘‘வேண்டாம், நான் எடுத்த படத்தை என் கண் முன்னே கொளுத்தவேண்டாம். உங்கள் விருப்பப்படியே சிவாஜிகணேசனை வைத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் மீண்டும் எடுக்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்ட£ர். இதன் பேரில் அந்த நெருப்பு நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டு மறுப்படப்பிடிப்பு நடைபெற்றது.

அந்தப்படம்தான் சிவாஜிகணேசன் நடித்து ஜாவர்சீதாராமன் வசனம் எழுதி, எஸ்.பாலசந்தர் கதை எழுதி இயக்கி 1954 தமிழ்ப்புத்தாண்டு நாளில் (13.4.1954) வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட ‘‘அந்த நாள்!’’dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக