வியாழன், 2 அக்டோபர், 2014

சுப்பிரமணியம் சுவாமி : 356-யைப் பயன்படுத்த வேண்டிவரும் ! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இப்படியே சீர்குலைந்தால் அரசை டிஸ்மிஸ் செய்யும் நிலைமை .....

ஜெயலலிதாவுக்கு உதவப் போறீங்களான்னு மோடிகிட்ட கேட்டேன்!'
சுப்பிரமணியன் சுவாமி சொல்லும் சீக்ரெட்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் கதாநாயகன் சுப்பிரமணியன் சுவாமி. இவர்தான் முதலில் புகார் தந்தவர். ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 27-ம் தேதி சுவாமியும் பெங்களூரில்தான் இருந்தார். அவருடன் தொடர்புகொண்டு பேசினோம்.

''தீர்ப்பு தினத்தன்று எதற்காக பெங்களூருக்கு வந்தீர்கள்?''
''ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டு புகார்தாரர் என்ற முறையில் திடீரென்று என்னைச் சிறப்பு கோர்ட் ஜட்ஜ் குன்ஹா அழைத்தால்...? இதற்காகவே, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் 'இந்தியன் ஐடென்டி' என்ற தலைப்பில் பேச ஏற்பாடு செய்தேன். மதியம் ஒரு மணி அளவில் ஏர்போர்ட்டில் வந்து இறங்கி, காரில் போகும்போது, 'ஜெயலலிதா குற்றவாளி’ன்னு தகவல் சொன்னாங்க. அப்பத்தான் ஜட்ஜ் மீதிருந்த மதிப்பு ஒரு படி உயர்ந்தது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நான் இத்தனை வருடங்களாகக் கண்காணித்து வந்தேன். ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிச்சாங்க. நிறைய பொய் சொல்லி கோர்ட்டுல மாட்டிக்கிட்டாங்க. எழுதி வெச்சுக்கங்க. ஜெயலலிதா மாதிரியே ஊழல் பண்ணிய குற்றத்துக்காக, சோனியாவும் ராகுலும் நிச்சயமா ஜெயிலுக்குப் போவாங்க. நான் போக வைப்பேன்.''
''தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தீர்களா?''
''ஒரு ரூபாய்தான் அரசாங்க சம்பளம் வாங்கினார் ஜெயலலிதா. ஆனா, 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துச் சேர்த்தாங்க. எங்கேயிருந்து பணம் வந்துச்சுன்னா... நாலு வருஷமா அவங்களோட ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துல கிடைச்ச வருமானம்னு சொன்னாங்க. ஒரு ஹெக்டேர் நிலத்துல திராட்சை உற்பத்தி அவ்வளவு வருமா? அப்படி உலக அளவுல சாதனை பண்ணிய விவசாயி ஃபிரான்ஸ்ல இருக்கார். அவர் எவ்வளவு உற்பத்தி செஞ்சாரோ, அதைவிட 10 மடங்கு அதிகமா ஜெயலலிதா கணக்குக் காட்டினாங்க. அதுதான் பெரிய காமெடியே. இதை நான் ஆரம்பத்திலேயே கோர்ட்ல சொன்னேன். அதன்பிறகுதான், கோர்ட் நடவடிக்கைகள் துரிதமாச்சு.
இப்போ ஜட்ஜ்மென்ட் வந்துவிட்டதே என்று நான் சும்மா இருக்கப் போவதில்லை. ஜெயலலிதா மீது வருமான வரித்துறை போட்ட கேஸ் இருக்குதே? அதைப் பொறுத்திருந்து பாருங்கள். அதிலும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.''
''இதெல்லாமே அரசியல் பழிவாங்கல் காரணமாகப் போடப்பட்ட வழக்கு என்கிறார்களே?''
''முன்பெல்லாம் ஜெயலலிதாவுக்கு தேசபக்தி இருந்துச்சு. விடுதலைப்புலிகள் விவகாரத்திலும் வைகோவை 'பொடா'வில் பிடித்துப் போட்டபோதும் அவரது நடவடிக்கைகள் நன்றாக இருந்தன. 1996-ல் என்னோட பிறந்தநாளுக்கு என் வீட்டுக்கே வந்தார். அப்போது நான் அவரிடம் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் சந்திரலேகா மீது ஆசிட் வீசிய விவகாரம் பற்றி பேசினேன். அவர் சொன்ன பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. அப்போது நான் அவரிடம், 'நான் போட்டிருக்கும் எந்த கேஸையும் வாபஸ் பெறமாட்டேன். ஆனா.. கருணாநிதியை வீழ்த்த உங்களோட அரசியல் ரீதியா ஒத்துழைப்பேன்'ன்னு சொன்னேன். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனா, இப்போது ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க, கடவுளோட சாபமும் ஒரு காரணம். இந்து மதத் தலைவர் ஜெயேந்திரரை ஜெயில்ல போட்டாங்க. கைதிகளோட அவரை உட்கார வெச்ச சம்பவத்தை நினைச்சா நெஞ்சு பதறுது. அவரை நான் வேலூர் ஜெயில்லபோய் பார்த்தப்ப.. சோகமாக இருந்தார். இனி ஜெயலலிதாவுக்கு அரசியல் அதிகாரமே இல்லை!''
''மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திடீரென ஜெயலலிதாவை வந்து பார்த்தாரே?''
''தீர்ப்புக்கு முன்னாடி, பல்வேறு யூகங்கள் கிளம்பின. நான் பிரதமர் மோடிகிட்ட நேரடியா கேட்டேன். 'இந்த வழக்குல ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணப் போறீங்களான்'னு! அவர், 'சட்டம் தன் கடமையைச் செய்யும்'னு சொல்லிட்டார்.''
''தீர்ப்பு வெளியானதும் தமிழகத்துல நடந்த வன்முறை சம்பவங்களை பி.ஜே.பி எப்படிப் பார்க்கிறது?''
''தமிழக நிலவரத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குகிட்ட தெரிவிச்சேன். சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி அறிக்கை கேட்டிருப்பதாகச் சொன்னார். அதன்பிறகுதான், கவர்னர் இங்கே இருக்கிற உயர் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறார். மக்களை பாதிக்கிற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை தமிழகத்தில் தொடர்ந்து நீடித்தால், ஆர்ட்டிக்கிள் 356-யைப் பயன்படுத்த வேண்டிவரும்'’ என்று அஸ்திரம் வீசியபடி முடித்தார்.
- ஆர்.பி. vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக